திமுக தலைமையகமான அறிவாலயத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் இன்று (மார்ச் 10) நடந்தது.
கடலூர் தொகுதிக்கு பணம் கட்டிய 17 பேரில் 16 பேர் கலந்துகொண்டனர். வந்திருந்தவர்களின் பெயர் பட்டியலை தன் கையில் வைத்திருந்த திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்…
ஒவ்வொருவர் பெயரையும் வாசித்து ’என்னென்ன பொறுப்பில் இருக்கீங்க?’ என கேட்டவர், ’எங்கே சிட்டிங் எம்.பி ரமேஷ் வரவில்லையா என்று கேட்க, ’அவர் மீது கொலை வழக்கு இருப்பதால் வரவில்லை’ என்றனர்.
முதல் பெயர் முன்னாள் ஒன்றிய செயலாளர் பலராமன், அடுத்த பெயர் டாக்டர் கலைக்கோவன் பெயரை உச்சரித்து ’ஓ… நீங்கள் தான் டாக்டரா, என்ன டாக்டர்?’ என்று கேட்டார். ’நுரையீரல் நிபுணர்’ என்றதும், சரி என்று அடுத்தடுத்த பெயர்களை வாசித்தார்.
இளைஞர் அணி அமைப்பாளர் கணேஷ் குமார், ஐய்யப்பன் எம் எல் ஏ மகன் பிரவீன் என கடைசியாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மகன் கதிரவன் பெயரை வாசித்தவர்,
”எங்கே கதிரவன் வரவில்லையா?” என்று ஸ்டாலின் கேட்க, உடனே அருகில் இருந்த எம் ஆர் கே பன்னீர்செல்வம், ”அவர் பணம் கட்டலை. அதனால் அவர் வரலை” என்று பதிலளித்தார்.
கதிரவன் பெயரில் வேறு ஒரு நிர்வாகி பணம் செலுத்தி விருப்பம் தெரிவித்திருந்தார் என்ற தகவல் ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டதும்… கதிரவன் பெயர் மீது பேனாவால் கோடுபோட்டார்.
அதன் பிறகு அனைவரையும் பார்த்து, ”கூட்டணி கட்சி காங்கிரஸ் கடலூர் தொகுதிய கேட்கிறாங்க” என்று ஸ்டாலின் சொன்னபோது,
நேர்காணலில் கலந்துக்கொண்ட 16 பேரும் ஒட்டுமொத்தமாக ’காங்கிரஸுக்கு கொடுத்தால் படுதோல்வி அடையும்’ என்று கோரஸாக பதில் தெரிவித்துள்ளனர்.
இந்த பதிலால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின், ”சரி யாரை வேட்பாளரா முடிவு செய்யறீங்க?” என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர்கள் ’திமுகவினரில் யாருக்கு கொடுத்தாலும் வெற்றி பெற வைப்போம்” என்று தெரிவித்துள்ளார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வணங்காமுடி
தர்மபுரி நேர்காணல்: அன்புமணி களமிறங்கினால்… மாறும் திமுக வியூகம்!