திமுகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூட்டணி தொடர்பாக தேசிய தலைமைதான் முடிவெடுக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2026 தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் திமுக கூட்டணி உடையும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுகதான். இப்போது திமுக இல்லை என்றால் அதிமுக தான். அவர்கள் நிச்சயம் எங்களை நோக்கி வருவார்கள் என்று கூறியிருந்தார்.
நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 3) ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. நாங்கள் யாரிடமோ செல்ல வேண்டிய தேவையில்லை.
நாங்கள் நேர்மையாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த ஒரு பாரபட்சமும் கிடையாது. எங்கள் கூட்டணியை யாராலும் அசைக்க முடியாது.
திமுகவுடன் எதாவது பிரச்சினை இருந்தால் நீங்கள் பேசலாம். ஆனால் அந்த பிரச்சினையும் இல்லை.
ஆட்சிக்கு வர வேண்டும் என எல்லா கட்சிக்கும் ஆசை இருக்கும். இன்று காலை ஒரு இயக்கத்தை ஆரம்பித்துவிட்டு, அடுத்தது எங்கள் ஆட்சிதான் என்கிறார்கள். ஆனால் எங்களுடைய கட்சி எவ்வளவு பெரிய கட்சி. எங்களுக்கு ஏன் அந்த ஆசை வரக்கூடாது.
கார்த்திக் சிதம்பரம் ஆகட்டும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆகட்டும், நான் ஆகட்டும் கூட்டணி குறித்து நாங்கள் தீர்மானிக்க முடியாது. அகில இந்திய தலைமை தான் தீர்மானிக்கும்” என்று பதிலளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
லைகா வழக்கு: 150 கேள்விகள்… நீதிமன்றத்தில் 2 மணி நேரம் பதிலளித்த விஷால்