பாஸ்கர் செல்வராஜ்
சீனாவில் கொரோனா காட்டுத்தீயைப்போல பரவிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்கள் அதிக அளவில் காய்ச்சல் இருமலினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகள் காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
அந்தச் சூழலைப் பார்த்த இந்திய ஒன்றியம் ஒரு கூட்டத்தைக் கூட்டி கொரோனா பரவல் எச்சரிக்கை விடுக்கிறது. நம்மவர்களும் உடனே சற்று அச்சமடைவதைக் காண முடிகிறது. பச்சோந்தி ஊடகங்கள் சீனாவில் பரவும் கொரோனா வகை இந்தியாவிலும் ஓர் அலையை ஏற்படுத்தும் என நம்மை பீதியூட்டுகின்றன.
சமூகப் பொறுப்புமிக்கவர்கள், இந்த வகை கிருமி இந்தியாவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட ஒன்றுதான்; இதுகுறித்து பெரிதாக அச்சப்படத் தேவையில்லை என மக்களைத் தேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சீன அரசு தனது மக்களைக் கொல்கிறதா?
சீன சூழலைப் பயன்படுத்தி ஒன்றியம் அறிவுக்குப் புறம்பான ஒரு திரிபுத்தகவல் தாக்குதலைத் (Infowar) தொடுத்து காங்கிரஸின் “இந்திய ஒற்றுமைப் பயணத்துக்கு” இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்வது அப்பட்டமாகத் தெரிகிறது.
ஒன்றிய பாஜக அரசு, சீன சூழலைத் தனக்கு ஏற்ற வகையில் பயன்படுத்த முனைகிறது என்றால் உலக ஏகாதிபத்தியம் சீனாவில் மக்கள் செத்து மடிகிறார்கள்; சீன அரசு மரணங்களை மறைக்கிறது;
அதன் பொருளாதாரம் அடுத்த ஆண்டு அதளபாதாளத்துக்குச் செல்லும் என ஆருடம் சொல்லி தனக்கு ஏற்ற வகையில் தனது உலக ஆக்டோபஸ் ஊடகக் கரங்களைப் பயன்படுத்தி அந்நாட்டுக்கு எதிரான திரிபுத்தகவல் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.
சீனா இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகக் கடைப்பிடித்து வந்த “சுழிய கொரோனா பரவல்” உத்தியை (Zero-covid strategy) கைவிட்டு ஒரே வாரத்தில் அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கிக் கொண்டதுதான் அங்கே மிகப் பெரும் அளவில் மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதற்கு காரணம்.
இதன்மூலம் அந்நாட்டு அரசு தெரிந்தே கொரோனாவை வேகமாக பரவவிட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
ஆரம்பத்தில் நாட்டை மூடி, மக்களை நடமாட்டமின்றி உறையச் செய்து கொரோனாவுடன் கடுமையாகப் போரிட்டு வென்ற சீனா, இப்போது தெரிந்தே அதைப் பரவவிடுவதேன்? சுழிய கொரோனா உத்தியை விலக்கி எங்களை சுதந்திரமாக விடுங்கள் என்று போராடிய மக்களை சீன அரசு இப்படி மடியவிட்டு தண்டிக்கிறதா? முன்பு போராடிய மக்கள் இந்தக் கொலைக்கு எதிராகப் போராடாமல் இப்போது மௌனித்திருக்கிறார்களா?
கொரோனாவுக்கு எதிரான சீன சமூகத்தின் வெற்றி
அப்படி நிச்சயம் இருக்க முடியாது. முன்பு ஊகான் நகரில் கொரோனா வேகமாகப் பரவியதை கண்டறிந்து உலக சுகாதார நிறுவனத்துக்கு சீனா தெரியப்படுத்தியதும் அதைப் பெருந்தொற்றாக உலகத்துக்கு அறிவிக்கப்பட்டது. நோய்க் கிருமியின் தன்மை, அது ஏற்படுத்தும் பாதிப்புகள், அதற்கு எதிரான மருந்துகள், கட்டுப்படுத்தும் வழிகள் என எதுவும் தெரியாத நிலையில் அதற்கு எதிரான நடவடிக்கை அதன் பரவலைத் தடுத்து தடுப்பரண்களை ஏற்படுத்தி மக்களை அதன் தாக்குதலில் இருந்து காப்பதுதான்.
நாட்டை மூடி, மக்கள் நடமாட்டத்தை நிறுத்தி, ஒரே வாரத்தில் மருத்துவமனைகளைக் கட்டியெழுப்பி, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களைத் திரட்டி கொரோனாவுக்கு எதிரான போரை சீனா நடத்தியது.
வலுவான அரச மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தது. தலைநகர் முதல் கடைக்கோடி கிராமம் வரை கட்டியெழுப்பப்பட்ட கட்சி, நிர்வாகத்தைக் கொண்டு மக்கள் நடமாட்டத்தை நிறுத்தி அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அடிப்படை பொருட்களை வீடுகளின் கதவுகளைத் தட்டிக் கொடுத்தது.
சீன மக்கள் ஒருமித்த சமூகமாக அரசின் பின்னால் ஓரணியாகத் திரண்டு கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையாகப் போராடி மிகக் குறைவான உயிரிழப்புடன் வெற்றி பெற்றார்கள். அப்படியான மக்கள் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் இன்றி இந்த மகத்தான வெற்றியை சீனா அடைந்திருக்க முடியாது.
பாடம் கற்காத உலக சமூகங்களின் தோல்வி
மனிதகுலத்துக்கு ஆபத்தான கிருமியுடனான சீனர்களின் போராட்டத்தில் இருந்து பாடம் கற்று உலக மக்கள் அனைவரும் தத்தமது சமூகத்தைக் காக்கும் நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அமெரிக்கா – சீனா இடையே அப்போது நடந்து கொண்டிருந்த வர்த்தகப் போரில் தோற்றுக்கொண்டிருந்த ட்ரம்ப் நிர்வாகம் இதுதான் நேரம் என்று இது சீன வைரஸ்; அவர்களின் ஆய்வகத்தில் இருந்துதான் கசிந்திருக்கிறது; இந்தப் பெருந்தொற்றுக்கு காரணம் சீனாதான் என திரிபுத்தகவல் தாக்குதலைத் தொடுத்து இதை சீன எதிர்ப்பு அரசியல் ஆக்கியது.
அதன்மூலம் சீனாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, அதை உலகத்தில் இருந்து தனிமைப்படுத்துவது அதன் நோக்கம். அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் இணைந்துகொண்டு அந்நாட்டை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று குரல் எழுப்பின.
இதற்குள்ளாக உலகெங்கும் பற்றிப்பரவிய பெருந்தொற்று நோயாளிகளால் மருத்துவமனைகளை நிரம்பி வழியச் செய்தது. அவசர சிகிச்சை பிரிவில் இடமின்றியும் ஆக்ஸிஜன் இன்றியும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது.
இப்படி ஒரே நேரத்தில் பெருகும் நோயர்களின் அளவைக் குறைக்க உலக நாடுகள் எல்லாம் சீனாவைப் போன்று வீடடங்கை அறிவித்தன. ஆனால் இது பரவலைத் தடுத்து, தாக்குதலில் இருந்து காக்கும் சீனாவின் நோக்கில் இருந்து மாறுபட்டது. போதிய மருத்துவ கட்டமைப்பில்லாத சூழலை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டது.
தென்கிழக்கு ஆசியர்களின் வரம்புக்குட்பட்ட பொறுப்பும் கடமையும் கொண்ட சுதந்திர முதலாளித்துவ சமூக விழுமியத்துக்கு (Freedom with responsibilities) மாறாக கலப்பில்லாத வரம்பற்ற தனிமனித சுதந்திரத்தை (Absolute freedom) முன்னிறுத்திய மேற்கின் ஏகாதிபத்திய முதலாளித்துவ சமூகங்கள் முகக்கவசம் அணிவது, தன்னிடமிருந்து பிறருக்கு பரவாமல் தடுப்பது போன்ற சமூக கடமைகளை ஏற்க மறுத்து அந்த நோக்கத்திலும் அரசுகளை தோல்வியடையச் செய்தன. இதனால் பெருமளவில் உயிரிழப்பையும், பொருளாதார இழப்புகளையும் மேற்கு சந்தித்தது.
நாளை தொடரும்
தோல்வியில் அமெரிக்கா சிக்கலில் அதன் பொருளாதாரம் !
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
தோனி பட நடிகர் கொலை: 2 ஆண்டுக்கு பிறகு பரபரப்பு தகவல்!
பாண்ட்யாவா? ரோகித்தா? : கேப்டன்சி பிரச்சினை!
Comments are closed.