கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 3

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

வேறுவழியின்றி வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்கா

எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் வட்டி விகிதத்தைக் கூட்டி உலகம் முழுவதும் சுற்றும் டாலரை மீண்டும் உள்ளிழுப்பதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறுவழியில்லை என்றானது. அதனால் அமெரிக்க பெருநிறுவனங்களான முகநூல் அமேசான், ஆப்பிள், நெட்ஃப்ளிக்ஸ், கூகுள் (FAANG) பங்குகளின் விலைகள் 70 விழுக்காட்டுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க மத்திய வங்கியை பின்பற்றி உலக நாடுகள் எல்லாம் வேறுவழியின்றி வட்டி விகிதத்தை உயர்த்தின. சீனா மட்டும் தனது வட்டி விகிதத்தைப் பெரிதாகக் கூட்டாமல் எதிர் திசையில் பயணிக்கிறது. உயரும் வட்டி விகிதத்தால் அமெரிக்காவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் டாலரை முதலீடாக மாற்றி உற்பத்தியைக் கூட்டி மீண்டும் தொழில்மயமாவதை நோக்கி அமெரிக்கா நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் அங்கே முதலீடுகள் கூடி தொழிலாளர்களுக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது.

உற்பத்தியை ஆசியாவுக்கு மாற்றி அதன்மூலம் பலனடைந்து வந்த அமெரிக்கா மீண்டும் தன்னை உற்பத்தி மையமாக மாற்றி உள்ளூர் உலக சந்தைக்கான அளிப்பை வழங்கும் அமெரிக்காவின் இந்த மறுதொழில்மயமாக்கம் (Reindustrialization) ஏற்பட காலம் பிடிக்கும். இந்த மாற்றம் முழுமையடைவது எளிதானதாகவோ, இடையூறுகள் அற்றதாகவோ இருக்கப்போவதில்லை.

சந்தை நெருக்கடிகளும், பொருளாதார மந்தங்களும் நிறைந்ததாகவே இருக்கும். அடுத்த ஆண்டு அமெரிக்கா பொருளாதார மந்தத்தை எதிர்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். அமெரிக்க மக்களின் நுகர்வை மையமாகக்கொண்டு சுழலும் உலக பொருளாதார சுழற்சி ஒரு முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

தேக்கத்தை நோக்கி உலகம் ஏற்றமடைய திட்டமிடும் சீனம்

அவர்களுக்கு ஏற்றுமதி செய்து வளர்ந்த சீனாவின் பொருளாதாரம் இதனால் பெரும் தேக்கத்தைச் சந்திப்பது தவிர்க்கவியலாதது. இதனை எதிர்கொள்ளும் விதமாக சீன மக்களின் நுகர்வைக் கூட்டி ஒரு பொருளாதார சுழற்சியை ஏற்படுத்த அந்நாடு திட்டமிட்டு செயல்படுகிறது.

இது தற்போதைய அமெரிக்க நுகர்வை மையமாகக்கொண்ட உலகமய பொருளாதார சுழற்சிக்கு மாற்றாக சீன நுகர்வை மையமாகக் கொண்டதாக இருக்கும். அதற்கேற்ற உற்பத்தி, உள்கட்டமைப்பு, நிர்வாக சீர்திருத்தங்கள், திட்டமிடல்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்றுமதிகேற்ற வலு குறைந்த நாணய பணக்கொள்கையில் இருந்து நுகர்வுக்கு ஏற்ற வலுவான நாணயம், அதற்கு ஏற்ற பணப்புழக்கம் ஏற்படுத்தப்படும் என சீன ஊடகங்கள் கூறுகின்றன.

 மேலும் மேற்கின் மூலதனத்துக்கு சீன சந்தையை திறந்துவிட்டு சந்தையில் போட்டியை ஊக்குவித்து விலைகளைக் கட்டுப்படுத்தி தனது உற்பத்தி வலிமையை கூட்ட நினைக்கிறது சீனா. ஐம்பது கோடி நடுத்தர வர்க்க சந்தையை எந்த மேற்கின் நிறுவனமும் வேண்டாமென மறுத்துவிடப் போவதில்லை.

பதிலாக மற்ற நாடுகள் சீன முதலீட்டுக்கும் பொருட்களுக்கும் அவர்களின் சந்தைகளை அந்நாடு திறந்து விடக்கோரும். மூலதனம், நிதி, உற்பத்தி, சரக்கு போக்குவரத்து என அனைத்தையும் மின்னணுமயமாக்கி வைத்திருக்கும் சீனாவில் உள்நாட்டு மூலதனமும், வெளிநாட்டு மூலதனமும் சுற்றிச்சுழன்று (dual circulation) உற்பத்தியில் ஈடுபடும். இந்த உற்பத்திக்கான எரிபொருளை ரஷ்யாவும், மேற்கு ஆசிய எண்ணெய்வள நாடுகளும் வழங்கும். சீன நாணயத்தை இருப்பாக வைத்துக்கொண்டு எண்ணெயை விற்கும் இவர்கள் பதிலாக சீன பொருட்களை சந்தையில் வாங்குவார்கள்.

பல்துருவ உலகத்தின் ஒரு துருவமாகும் சீனா

இப்படி சீனாவில் உற்பத்தியாகும் பொருட்கள் அந்நாட்டுக்கும் உலகத்துக்கும் தேவைக்கான அளிப்பை வழங்கும். இந்த பொருட்கள் அனைத்து கண்டங்களையும் நில வழியாகவும், நீர் வழியாகவும் இணைக்கும் சீனாவின் பிஆர்ஐ பாதைகள் வழியாக உலக சந்தைகளை அடையும். அது வரவிருக்கும் உலக பொருளாதார மந்தத்துக்குத் தீர்வாகவும் அமெரிக்க மைய ஒற்றை துருவ உலகத்துக்கு மாற்றான பல்துருவ உலக ஒழுங்காகவும் இருக்கும். இதற்கான திட்டமிடல்கள், வழிகாட்டுதல்கள், ரஷ்யா, ஜெர்மனி, அரேபிய நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் வேகமாக நடைபெற்று வந்தது.

இதனை நடைமுறைப்படுத்த சீனாவின் சுழிய கொரோனா உத்தி ஒரு தடைக்கல். தடையற்ற மக்கள் போக்குவரத்து இந்த பொருளாதார மீட்சி திட்டத்துக்கு அடிப்படையானது. இந்த பின்னணியில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக சீன அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு மக்கள் போராட்டமாக வெடிக்கிறது. பெருந்தொற்றாக (pandemic) இருந்த கொரோனா ஆண்டுக்கொருமுறை வரும் நோய்ப்பரவலாக (Endemic) மாறிவிட்டதாக சீன விஞ்ஞானிகள் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கிறார்கள். சீன அரசு அனைத்து கட்டுப்பாடுகளையும் அதிரடியாக விலக்கிக் கொள்கிறது.

நடைமுறை பொருளாதார நோக்கில் பரவவிடப்பட்ட கொரோனா  

நடப்பில் இருக்கும் தடுப்பூசிகள் நோயாளிகளைக் கடுமையாக பாதித்து அவசர சிகிச்சை தேவைப்படும் அளவுக்குக் கொண்டு செல்வதைக் குறைக்குமே ஒழிய நோய் பரவலை தடுக்காது என்பது உறுதியாகிவிட்டது.

சீனா நாட்டை படிப்படியாக திறந்துவிட்டாலும் ஒரேயடியாக திறந்தாலும் பாதிப்பு ஒன்றுதான்; பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கைதான் வேறுபாடும். ஆனால் குறைவான காலத்தில் பரவல் உச்சத்துக்குச் சென்றால் குறைந்தபட்சம் பொருளாதார பாதிப்புகளையாவது குறைத்துக் கொள்ளலாம் என்ற நிலையில் சீனா கட்டுப்பாடின்றி கிருமியை வேகமாகப் பரவவிடுகிறது.

முதியோருக்குக் கூடுதல் தடுப்பூசி, புதிய காய்ச்சல் சிகிச்சை மையங்கள், மருந்து நிறுவனங்கள் 24 மணி நேரமும் உற்பத்தியில் ஈடுபடவும், கடந்த ஐந்தாண்டுகளில் ஓய்வுபெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் பணிக்கு திரும்பவும் ஆணை, மருத்துவத் தொழிலாளர்களுக்குக் கூடுதல் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை அறிவிப்பு என போர்க்கால அடிப்படையில் பெருகும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து இறப்பைக் குறைத்து விரைவாக இயல்புக்குத் திரும்பி புதிய பொருளாதார சுழற்சிக்கு சீனா தயாராகிறது.

இந்தியாவும், தமிழகமும் பழைய அமெரிக்க மைய நுகர்வு ஏற்றுமதி வாய்ப்பு கிடைக்கும் என்று எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு இலவுகாத்த கிளியாகக் காத்திருக்கின்றன.

பகுதி 1 / பகுதி 2

நிறைவடைந்தது

கட்டுரையாளர் குறிப்பு

is china spreading corona Baskar Selvaraj
பாஸ்கர் செல்வராஜ்,

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியீடு!

ரெட் ஜெயன்ட் நிறுவனம்: விலகும் உதயநிதி – பொறுப்பில் புதிய நபர்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *