கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 2

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

தோல்வியில் அமெரிக்கா சிக்கலில் அதன் பொருளாதாரம்

கொரோனாவுடனான போரில் வென்ற சீனா வேகமாக இயல்புநிலைக்குத் திரும்பி உற்பத்தி நடவடிக்கைகளில் இறங்கியது. நாடுகளின் தேவைக்கான பொருட்களை அளித்து உலக உற்பத்தியின் இன்றியமையாத மையமாக தன்னை தக்கவைத்துக் கொண்டது. தன்னை தனிமைப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சியை முறியடித்தது.

ஆயுதப் போரானாலும், பொருளாதாரப் போரானாலும் எதிரி தனது இலக்கை அடையவிடாமல் செய்வதுதான் போரின் வெற்றியாகக் கருதப்படும். அந்த வகையில் பொருளாதாரச் சீர்குலைவு, வர்த்தகப்போர், தனிமைப்படுத்தும் திரிபுத்தகவல் போர் ஆகிய அனைத்திலும் சீனா அமெரிக்காவை வென்றது.

சீனாவுடனும் கொரோனாவுடனும் தோல்வியடைந்த அமெரிக்காவின் பங்குச்சந்தை சீட்டுக்கட்டைப்போல சரிந்திருக்க வேண்டும். ஏனெனில் அங்கே நிறுவனங்கள் எதிர்காலத்தில் பொருட்களை விற்று பெருலாபம் ஈட்டும் என்ற நம்பிக்கையில்தான் அவற்றின் பங்குகளின் மீது பந்தயம் கட்டப்படுகிறது.

பொருளாதாரம் முடங்கி அந்த நம்பிக்கை தகரும்போது முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று பணமாக எடுத்துக்கொண்டு வெளியேறுவது இயல்பு. சொத்துகளில் சுழன்று கொண்டிருக்கும் டாலர் நிதிமூலதனம் ஒரே நேரத்தில் வெளியேற முற்படும்போது பண நெருக்கடி (Liquidity crisis) ஏற்படுவதும் அங்கே தவிர்க்கவியலாதது.

பணப்புழக்க தீர்வும் பிரச்சினைகளும்

இந்தப் பண நெருக்கடியைத் தீர்க்க ஆறு ட்ரில்லியன் டாலர் பணத்தை அப்போது சந்தையில் கொட்டியது அமெரிக்கா. அதனைக் கொண்டு நிறுவனங்கள் தங்களின் பங்கு மதிப்பை வீழாமல் காத்தன. இப்போது செயற்கையாக மிகை மதிப்பிடப்பட்டு இருக்கும் நிறுவனங்களின் பங்கு விலைகளுக்கு ஏற்ப அவர்களின் பொருள் விற்பனை கூடி அதன் மூலம் லாபம் பெருக வேண்டும்.

அதற்கு சந்தையில் பொருட்களின் தேவை கூட வேண்டும். எனவே அமெரிக்க அரசு மக்களின் கணக்குகளிலும் பணத்தைப் போட்டு செலவழிக்கச் சொன்னது. இந்த செயற்கையாக பணத்தைக் கொட்டி ஏற்படுத்திய பொருளாதார சுழற்சி இரு பிரச்சினைகளைக் கொண்டுவந்தது.

1. விலைவாசி உயர்வு

2. பணமதிப்புக் குறைவு.

எப்படி என ஓர் உதாரணத்துடன் புரிந்துகொள்ள முயல்வோம். சந்தையில் 1000 டாலர் பெறுமான பொருட்களும் புழக்கத்தில் 1000 டாலர் பணமும் இருக்கிறது எனக்கொண்டால் டாலரைக் கொடுத்து பொருளை வாங்கும் பரிவர்த்தனை இயல்பாக இருக்கும்.

இப்போது 1000 டாலர் பொருளுக்கு 2000 டாலர் பணம் மக்கள் கைகளில் இருந்தால்? எல்லோரும் பொருட்களை வாங்க முந்துவார்கள். பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். வர்த்தகர்கள் பொருட்களின் விலைகளை ஏற்றுவார்கள். விலைவாசி கூடும்.

வருமானத்தின் மூலமோ, சேமிப்பின் மூலமோ மக்கள் வைத்திருக்கும் பணத்தைக்கொண்டு இப்போது மக்கள் குறைவான பொருட்களையே வாங்க முடியும். ஆனால் 100 டாலர் பெறுமான பொருளை 125 டாலர் என அதிக விலை வைத்து விற்கும் நிறுவனங்களின் லாபம் கூடும். அதனால் அவற்றின் பங்கின் விலைகள் இன்னும் அதிகரிக்கும். பங்குச்சந்தை குறியீட்டு எண் விண்ணைத் தொடும். இதுதான் உலகம் முழுவதும் நடந்திருக்கிறது.

இந்தச் சுழற்சியில் மக்களிடம் இருக்கும் பணம் விரைவாகத் தீர்ந்து வாங்க வழியற்றவர்களாக மாறுவார்கள். ஆனால் ஏற்றம் கண்ட பொருட்களின் விலையும் அதனால் கூடிய நிறுவனங்களின் பங்கு மதிப்பையும் முதலாளிகள் விழ விடமாட்டார்கள். அது பொருளாதார சுருக்கத்திலும் நெருக்கடியிலும் கொண்டுபோய் நிறுத்தும். இதற்கு தீர்வு ஒன்று உற்பத்தி கூடி, பொருட்களின் விலை வீழ வேண்டும் அல்லது சந்தையில் புழங்கும் டாலரின் அளவு குறைய வேண்டும்.

வட்டியைக் கூட்டி டாலர் புழக்கத்தைக் குறைத்தால் விலைவாசியால் சுருங்கிக் கொண்டிருக்கும் வளர்ச்சி மேலும் குறையும். அதுவும் அமெரிக்காவை நெருக்கடியில் கொண்டுபோய் நிறுத்தும். மாறாக மற்ற நாடுகள் டாலர் கையிருப்பைக் கூட்டினால் வட்டி விகிதத்தைக் கூட்டாமல் சுழற்சியில் இருக்கும் டாலரைக் குறைக்க முடியும்.

புழக்கத்தில் இருக்கும் டாலரைக் குறைப்பதில் சிக்கல்

அதற்கு பொருட்களை உற்பத்தி செய்து உலகுக்கு அளிக்கும் சீன, ரஷ்ய, அரேபிய நாடுகள் இணங்க வேண்டும். செயற்கையாக அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தேவைக்கு அப்போது உற்பத்தி தடையின்றி நடந்த சீனாவில் பொருட்கள் முன்னிலும் அதிகமாக ஏற்றுமதியாயின. ஆனால், அப்படி பொருட்களை ஏற்றுமதி செய்து ஏற்கனவே ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் மேல் டாலர் கையிருப்பை (Dollar reserve) வைத்திருக்கும் சீனா மேலும் தனது டாலர் கையிருப்பை கூட்ட மறுத்துவிட்டது.

எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யாவும் டாலரில் எண்ணெய் விற்றாலும் தன்மீதான பொருளாதாரத் தடைக்கு பதிலடியாக டாலர் கையிருப்பை கைவிட்டிருந்தது. போதாக்குறைக்கு சீனாவுக்கு சொந்த நாணயத்தில் எண்ணெய் விற்கவும் ஆரம்பித்திருந்தது. டாலர் சேமிப்பும் நின்று சந்தையில் அதற்கான தேவையும் குன்றும் சூழல். கொரோனாவால் சந்தையில் பொருள் உற்பத்தியும் கூடாமல் டாலர் சேமிப்பாகவும் சேராமல் சந்தையில் இருக்கும் பொருட்களைவிட டாலர் அதிகமாக சுழன்றுகொண்டே இருந்ததால் விலைவாசி குறையாமல் தொடர்ந்தது.

இந்த அமெரிக்க டாலரின் பணவீக்க பிரச்சினையைத் தீர்க்க புதிய மின்னணு பொருளாதார பொருள் உற்பத்திக்கான சில்லுகளை சீனாவுக்குக் கிடைக்கவிடாமல் செய்தும் அவர்களின் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான சந்தையை அமெரிக்கா முடக்கியும் அந்நாடு பணியவில்லை.

தைவானை பயன்படுத்தி அவர்களை போரின் மூலம் பணியவைக்க முற்பட்டால் மொத்த உலக பொருள் உற்பத்தியும் நின்றுவிடும். அது இருக்கும் விலைவாசி பிரச்சினையை இன்னும் தீவிரமாக்கும் என்பதால் உக்ரைனைப் பயன்படுத்தி உக்ரைன்-ரஷ்ய போரை துவக்கியது அமெரிக்கா.

இதன்மூலம் ரசிய எண்ணெய், எரிவாயுவையும் அதன் ஐரோப்பிய சந்தையையும் கைப்பற்றி நெருக்கடியைத் தீர்க்க திட்டம். ரஷ்யாவின் (டாலர், தங்க) சொத்துகளை முடக்கி அதனை உலக வர்த்தகத்தில் இருந்து ஒதுக்கி முடக்கி ஒரு உள்நாட்டு குழப்பத்தின் மூலம் அந்நாட்டை பணியவைக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்து போர் நீடித்து போர்ச்செலவும் கூடிக்கொண்டே சென்றது.

பகுதி 1

நாளை தொடரும்

வேறுவழியின்றி வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்கா !

கட்டுரையாளர் குறிப்பு

is china spreading corona Baskar Selvaraj
பாஸ்கர் செல்வராஜ்,

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

ரூ. 1000 டோக்கன்: கூட்டுறவுத்துறை அமைச்சர் விளக்கம் !

142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 2

  1. தேவையில்லாத வன்மத்தை கக்கும் இதுபோன்ற பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் கட்டுரை எழுதும் தீயசக்திகளை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *