பொன்முடி மீது சேறு வீசியவர் திமுக காரரா?

Published On:

| By Kavi

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே இருவேல்பட்டு கிராமத்தில் கடந்த 3ஆம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் சென்னை – திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வனத்துறை அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான கவுதம சிகாமணி மற்றும் விழுப்புரம் ஆட்சியர் பழனி, எஸ்.பி உள்ளிட்டோர் சென்றனர்.

அப்போது காரில் அமர்ந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடியை கீழே இறங்கி வந்து பேசுங்கள் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

குறிப்பாக ராமர் என்ற ராமகிருஷ்ணன், ‘காரிலேயே உட்கார்ந்துகிட்டு கேட்டால், என்ன செய்வது? இறங்கி வந்து எங்கள் வீடுகளின் நிலைமையப் பாருங்க’ என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கு அமைச்சர், “பார்க்கும்போதே தெரியுதுப்பா… வீடு வீடாக போய் பார்த்துதான் தெரிஞ்சுக்கணுமா?” என்று பதில் சொன்னார்.

ராமர் அருகில் இருந்த அவருடைய சித்தி விஜயராணி, “நீங்கலாம் இறங்கி வந்து பாக்கமாட்டீங்களா. எங்களுடைய கஷ்டம் உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் குரல் கொடுத்திருக்கின்றனர்.

இதையடுத்து அமைச்சர் பொன்முடியும் காரில் இருந்து இறங்கி சென்றார். அப்போது ராமர் அங்கிருந்த ஒரு செடியை பிடுங்கி வீச, அந்த வேரில் இருந்த சேறு அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, ஆட்சியர் பழனி ஆகியோர் மீது விழுந்துள்ளது.

இதனால் அந்த இடமே பதற்றமானது. அப்போது சேறு வீசியவரை கைது செய்ய போலீசார் முயன்ற நிலையில், கைது செய்ய வேண்டாம் விட்டுவிடுங்கள் என்று பொன்முடி கூறினார்.

இந்நிலையில் வெள்ளை சட்டையில் சேறு படிந்த கறையுடன் பொன்முடியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலானது.

இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், “குறிப்பிட்ட ஒரு கட்சியினர் தான் இவ்வாறு சேற்றை அள்ளி வீசியிருக்கிறார்கள்” என்று பாஜகவினர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “இதுபோன்று சேற்றை அள்ளி வீசும் செயல்பாடுகளை ஏற்க முடியாது. அது தவறு” என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

இப்படி பொன்முடி மீது சேறு வீசப்பட்ட தகவல் தொடர்ந்து வைரலான நிலையில், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், மிரட்டியதாகவும் ராமர் என்கிற ராமமிருஷ்ணன் மற்றும் அவரது சித்தி விஜயராணி மீது இருவேல்பட்டு பகுதியில் பணி செய்யக்கூடிய விஏஓவிடம் இருந்து திருவெண்ணைநல்லூர் போலீசார் புகாரை பெற்றனர்.

இந்தநிலையில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும் செய்திகள் வந்தது.

இதைப்பற்றி நாம், காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது,

“தற்போது புகார்தான் பெற்றிருக்கிறோம். இன்னும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இந்தசூழலில் வழக்குப்பதிவு செய்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்புகளும் கோபமும் இருக்கும். அதனால் மேலிடத்து உத்தரவுக்கு காத்திருக்கிறோம்” என்றனர்.

மேலும் சேறு வீசியவர்களின் பின்னணி குறித்து போலீசாரிடம் நாம் கேட்டபோது…

“ராமகிருஷ்ணன் தாயாரும், சித்தி விஜயராணியும் வன்னியர் சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர். ராமகிருஷ்ணன் திமுக அனுதாபி. சம்பவத்தன்று அவர் தனது கழுத்திலும் திமுக துண்டுதான் அணிந்திருந்தார்.

விஜயராணி பாஜக அனுதாபி. மற்றபடி இவர்கள் இரு கட்சிகளிலும் எந்த பொறுப்பிலும் இல்லை. முக்கியமான விஷயம் என்னவென்றால், ராமகிருஷ்ணனின் இரண்டு சகோதரிகளும் தமிழ்நாடு காவல்துறையில் போலீசாக பணிபுரிகிறார்கள்.

அவர்களிடம், உங்கள் சகோதரர் ஏன் இப்படி செய்தார் என்று கேட்டபோது, ‘நல்ல பையன் தான். ஏன் இப்படி செய்தான் என்று தெரியவில்லை. ராமகிருஷ்ணன் திமுக ஆதரவாளர்தான். ஆனால் பாஜகவைச் சேர்ந்தவர் என்று கதைகட்டிவிடுவது ஏன் என்று தெரியவில்லை என்று கூறினர்” என்றார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

முன்னதாக இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அமைச்சர் பொன்முடி செய்தியாளார்களிடம் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

வணங்காமுடி

‘நண்பர்கள்’ பட மம்தா குல்கர்னியை ஞாபகம் இருக்குதா? 25 ஆண்டுகளுக்கு பிறகு தாய்நாடு திரும்பினார்!

நள்ளிரவில் அமைச்சர் சிவசங்கருக்கு வந்த போன்… அடுத்து நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel