ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று நேற்று (பிப்ரவரி 7) அறிவித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அதுபற்றி இன்று (பிப்ரவரி 8) விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தேர்தல் ஆணையம் சின்ன சட்டம் 1968 10 B யின்படி, பதிவு பெற்ற அங்கீகாரம் பெறாத கட்சி இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சின்னத்தில் போட்டியிடலாம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னம் எங்களுக்கு வழங்கப்படுவதில் எந்த தடையும் இல்லை. தேர்தல் ஆணையமே சொல்லியிருக்கிறது.
இந்த வகையில் கடந்த பத்து நாட்களாக குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஈரோட்டில் களப் பணியாற்றிக் கொண்டிருந்தோம். ஆனால் நேற்று பகல் 1 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் இருந்து இடைத் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்ற கடிதம் வந்ததும், நான் உடனடியாக ஈரோட்டில் தேர்தல் பணியில் இருந்த தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பேசினேன்.
அவர்களிடம் சுயேச்சையாகக் கூட போட்டியிடலாமா என்று விவாதித்தேன். ஆனால் ஏற்கனவே நாம் பல சின்னங்களில் போட்டியிட்டு விட்டோம். இப்போது குக்கர் சின்னத்தை சொல்லி வாக்கு கேட்டு விட்டு வேறு சின்னத்தில் போட்டியிட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சொன்னார்கள்.
மீண்டும் நாம் இதே ஈரோட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடும்போது குழப்பம் ஏற்படும் என்று சொன்னார்கள்.
எங்கள் நிர்வாகிகள் பத்து நாட்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் சிலருக்கு சின்னம் கொடுப்பதைப் போல நாமும் கேட்டுப் பார்க்கலாமா என்று டெல்லி வழக்கறிஞர்களிடமும் ஆலோசித்தேன்.
அவர்கள் கால அவகாசம் குறைவாக இருப்பதை எடுத்துச் சொன்னார்கள். அதனால் குழப்பம் வேண்டாம் என்று சொல்லி, தலைமைக் கழக நிர்வாகிகளிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் பேசிய பிறகுதான் இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்தோம்” என்றார் தினகரன்.
”அதிமுகவுக்கு ஆதரவளிக்கக் கோரி பாஜக தரப்பில் பேசினார்களா? அதனால்தான் நீங்கள் போட்டியில் இருந்து விலகினீர்களா?” என்ற கேள்விக்கு,
”என்னிடம் யாரும் பேசவில்லை. சில ஊடக நண்பர்கள் கூட தினகரனிடமும் பேசி வலியுறுத்தி வாபஸ் வாங்க வைத்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை.
அமமுக ஏற்கனவே அவர்கள் அணியில் இல்லை. நாங்கள் என்.டி.ஏ.வில் என்றைக்குமே இருந்தது கிடையாதே… இப்போதும் சொல்கிறேன். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொன்னால் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் சேர்ந்து தேர்தலை சந்திக்க வேண்டும். எனவே இந்த விலகலில் எந்த அரசியலும் கிடையாது. யாரும் கேட்பதால் ஒதுங்கிப் போகிற ஆள் நான் இல்லை.
இரட்டை இலை கொடுத்துவிட்டதால் ஈரோட்டில் ஜெயித்து விடப் போகிறார்களா என்ன? இரட்டை இலை தவறானவர்களின் தீயவர்களின் கையில் இருக்கிறது. கோர்ட்டே பழனிசாமி கம்பெனிக்கு இரட்டை இலையை கொடுத்திருந்தாலும் அந்த இரட்டை இலையின் சக்தி இப்போது இல்லை. இப்போதும் அவர்கள் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இருக்காது” என்று பதிலளித்தார்.
“இப்போது உங்கள் ஆதரவு யாருக்கு? யாராவது ஆதரவு கேட்டால் உங்கள் நிலைப்பாடு என்ன?” என்ற கேள்விக்கு,
“நாங்கள் தீய சக்திகளையும் ஆதரிக்க மாட்டோம், துரோக சக்திகளையும் ஆதரிக்க மாட்டோம். நான் என்ன சொல்ல வருகிறேன் என்று என் தொண்டர்களுக்கு தெரியும். ஈரோட்டு மக்களுக்குத் தெரியும். யாராவது என்னைத் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டால் உங்களிடம் சொல்கிறேன்” என்று பேசினார் டிடிவி தினகரன்.
–வேந்தன்
ஓராண்டிற்குள் 6வது முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்வு!
காந்தாரா 2 கதை என்ன? எப்போது ரிலீஸ்?