கர்நாடகாவில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நடக்கும் அனல் பறக்கும் தேர்தலில் பல திருப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக வட கர்நாடகாவில் நடந்துள்ள மாற்றம் பாஜக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கர்நாடக தேர்தலில் நடந்தவற்றைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
இரண்டு கட்டமாக நடந்த தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலின் மூன்றாம் கட்டத் தேர்தல் இன்று நடந்துள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 26 அன்று இரண்டாம் கட்டத் தேர்தலின்போது நடைபெற்றது. மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான தேர்தல் தற்போது நடைபெற்றுள்ளது.
கடந்த முறை தென் கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த முறை வட கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளில் நடைபெற்றுள்ளது.
பாஜகவிற்கு சாதகமாக பார்க்கப்பட்ட பகுதி
வட கர்நாடகாவைப் பொறுத்தவரை லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக பார்க்கப்படுகிறது. பாஜகவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா குடும்பத்திற்கு லிங்காயத்துகள் மத்தியில் பெரும் செல்வாக்கு இருக்கிறது. லிங்காயத்து பகுதிகள் பொதுவாக பாஜகவிற்கு சாதகமாக இருக்கும் என்றே பார்க்கப்படும் நிலை இருக்கிறது.
வட கர்நாடகாவின் இந்த 14 தொகுதிகளில் பாஜக 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 12 தொகுதிகளையும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 11 தொகுதிகளையும் வென்றது. அதற்கடுத்து கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த 14 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. இப்படி பாஜகவின் கோட்டையாக பார்க்கப்படும் பிராந்தியத்தில், இந்த முறை இப்படி ஒரு வெற்றியை பாஜக பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று வட கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
வழக்கமாக தென்கர்நாடகாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஒக்கலிகர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை ஆதரிப்பவர்களாக பார்க்கப்படுகிறார்கள். எனவே காங்கிரசுக்கு சாதகமான பகுதியாக தென் கர்நாடகாவின் தொகுதிகளே பார்க்கப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக இந்த முறை தென்கர்நாடகாவை விட வட கர்நாடகாவின் பகுதிகளே காங்கிரசுக்கு சாதகமான முடிவைத் தரப் போகிறது என்று வட கர்நாடக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
காங்கிரசுக்கு சாதகமாக வந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
2023 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலிருந்தே இப்பகுதியில் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக மாறிவிட்டன. வட கர்நாடகாவின் 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே அதிகம் வெற்றி பெற்றது. கர்நாடகாவைப் பொறுத்தவரை 1 நாடாளுமன்றத் தொகுதியில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. எனவே தற்போது தேர்தல் நடைபெற்றுள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தமுள்ள 112 சட்டமன்றத் தொகுதிகளில் 71 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. ஷிமோகா, பிடார் ஆகிய 2 நாடாளுமன்றத் தொகுதிகள் தவிர்த்து மற்ற 12 நாடாளுமன்றத் தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சியே அதிக சட்டமன்றத் தொகுதிகளை வென்றிருக்கிறது.
ஒவ்வொரு தொகுதி இழப்பும் பாஜகவிற்கு பின்னடைவே
கடந்த முறை பாஜக வென்றதில் இருந்து இந்த முறை இழக்கும் ஒவ்வொரு தொகுதியும் பாஜகவின் வெற்றிக் கனவிற்கு ஆபத்தானது என்பதால், வட கர்நாடகாவை விட்டுவிடக் கூடாது என்று ஹை புரோஃபைல் வேட்பாளர்களை களமிறக்கியது பாஜக.
ஹை புரோஃபைல் வேட்பாளர்களை களமிறக்கிய பாஜக
பசவராஜ் பொம்மை மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய இரண்டு முன்னாள் முதலமைச்சர்களை பாஜக இத்தேர்தலில் களமிறக்கியது. இவர்கள் இருவரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. பசவராஜ் பொம்மை ஹவேரி தொகுதியிலும், ஜெகதீஷ் ஷெட்டர் பெலகாம் தொகுதியிலும் போட்டியிட்டனர். ஆனாலும் அவர்கள் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என்பதே களத்தின் நிலவரமாக இருக்கிறது.
பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான மனநிலை களத்தில் மக்களிடம் இருப்பதை உணர்ந்து சிட்டிங் எம்.பிக்கள் 6 பேருக்கு சீட்டு கொடுக்காமல் புதிதாக வேட்பாளர்களை இறக்கியது பாஜக.
மேலும் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா ஷிமோகா தொகுதியில் களமிறக்கப்பட்டார். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவர் எடியூரப்பாவின் மகனை எதிர்த்து ஷிமோகா தொகுதியில் களமிறங்கினார். இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நடிகர் ஷிவராஜ்குமாரின் மனைவி கீதா ஷிவராஜ்குமார் நிறுத்தப்பட்டதால் கடுமையான மும்முனைப் போட்டி இத்தொகுதியில் உருவெடுத்தது.
மோடி நடத்திய பேரணிகள்
பெலகாம், சிக்கொடி மற்றும் ஹவேரி ஆகிய தொகுதிகளில் பாஜக நிர்வாகிகளுக்குள்ளேயே எழுந்த பிரச்சினைகள் அக்கட்சிக்கு தலைவலியாக மாறின.
பிரதமர் மோடி இந்த 14 தொகுதிகளில் 7 தொகுதிகளில் பேரணிகளை நடத்தினார். ஆனாலும் பாஜகவிற்கு முழு சாதகமாக களம் மாறவில்லை என்கிறார்கள் கர்நாடகவின் அரசியல் நிபுணர்கள்.
ஏழை மக்கள் அதிகம் இருக்கும் பகுதி
மேலும் இந்த 14 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் ஹைதராபாத் கர்நாடகா மற்றும் மும்பை கர்நாடகா என்று சொல்லக் கூடிய மண்டலங்களில் வருகின்றன. இவை இப்படி அழைக்கப்படுவதற்குக் காரணம் இப்பகுதிகள் சுதந்திரத்திற்கு முன்பும், மொழி வாரி மாநிலங்கள் பிரிப்பதற்கு முன்பும் மும்பை மற்றும் ஹைதாராபாத் மாகாணங்களில் இருந்தவை. இந்த பகுதிகள் தான் கர்நாடகாவிலேயே வளர்ச்சி குறைந்த பகுதிகளாக இருக்கின்றன. கர்நாடகாவின் ஏழை மக்கள் இப்பகுதிகளில் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
எனவே இப்பகுதியைப் பொறுத்தவரை தேர்தலில் சாதி ரீதியான கணக்குகளை விட, மக்கள் எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு பிரச்சினையே முதன்மையான பிரச்சினை என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சித்தராமய்யா அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களான மகளிர் உதவித் தொகை, மகளிருக்கான இலவசப் பேருந்து போன்றவற்றிற்கு இப்பகுதிகளில் கிடைத்த ஆதரவு காங்கிரசுக்கு பெரும் பலத்தினை வாக்குகளில் சேர்த்துள்ளது.
ஈடினா(Eedina)-வின் ஆசிரியர் சொல்லும் தகவல்
கடந்த 2023 சட்டமன்றத் தேர்தலில் யார் வெல்வார்கள், எத்தனை தொகுதிகளை வெல்வார்கள் என்று பல மாஸ் மீடியாக்களின் கருத்துக்கணிப்புகள் கூட தவறவிட்டதை ஈடினா என்ற இணையதளத்தின் கருத்துக்கணிப்பு துல்லியமாகக் கூறியது. காங்கிரஸ் 132 முதல் 140 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும் என்று அவர்கள் சொன்னது தான் நடந்தது. அந்த ஈடினா ஊடகத்தின் ஆசிரியர் முனைவர் எச்.வி.வாசு சொல்கிற கருத்துக்கள் முக்கியமாக கவனிக்கத்தக்கவை.
அவர் என்ன சொல்கிறார் என்றால், இப்பகுதிகளில் 85% முதல் 89% வரையிலான மக்கள் விலைவாசி உயர்வை முக்கியமான பிரச்சினையாகக் கூறியுள்ளனர். அதிலும் இவர்களில் நிறைய பேர் பாஜக தான் அதற்கு காரணம் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதேபோல் ஊழல், வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளும் வாக்குகளாக தேர்தலின் முடிவில் எதிரொலிக்கும். இதன் காரணமாக பாஜகவை விட காங்கிரசே வட கர்நாடகாவில் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று அவர் சொல்கிறார்.
லிங்காயத் ஆதிக்கம் உண்மையா?
மேலும் லிங்காயத்துகள் குறித்து பேசும்போது, லிங்காயத்துகள் ஆதிக்கம் செலுத்துவது உண்மையே, ஆனால் மக்கள் தொகை எண்ணிக்கையில் லிங்காயத்துக்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது ஒரு ’Myth’ என்கிறார். லிங்காயத்துகள் கர்நாடகாவில் 20 மாவட்டங்களில் பிரிந்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள் தென் கர்நாடகாவின் ஒக்கலிகர் சமூகத்தைப் போன்று வெற்றியைத் தீர்மானிக்கும் அளவிற்கான அடர்த்தியில் எந்த தொகுதியிலும் இல்லை என்கிறார். கர்நாடகாவின் எந்த தொகுதியிலும் லிங்காயத்துகள் 30% சதவீதத்திற்கு மேல் இல்லை என்பதே அவர் சொல்லும் தரவாக இருக்கிறது.
மேலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தினைப் பொறுத்தவரை தென் கர்நாடகாவில் தான் வலுவாக இருக்கிறது. எனவே அவர்களின் கூட்டணியால் வட கர்நாடகாவில் பாஜகவிற்கு பெரிய அளவில் லாபம் இல்லை.
எத்தனை தொகுதிகளில் காங்கிரஸ் வெல்லும்?
அவரது கணக்கைப் பொறுத்தவரை, இந்த முறை கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும். 7 தொகுதிகளில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். மீதமுள்ள 12 தொகுதிகளில் முடிவுகள் நெருக்கமாக இருக்கிறது. வாக்கு எண்ணிக்கையின்போது எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்கிறார்.
காங்கிரசின் நலத்திட்டங்கள் பெண்களுக்கு ஆதரவாக இருப்பதால், பெண்களின் வாக்குகள் காங்கிரசுக்கு அதிக அளவில் விழுந்திருக்கும் என கணிக்கப்படுகிறது. இது பெருமளவு சரியாக நடந்திருந்தால் காங்கிரஸ் கட்சி 20 தொகுதிகளை கர்நாடகாவில் வெல்லும். அது ஒருவேளை சரியாக நடந்திருக்காவிட்டால் 13 தொகுதிகளை மட்டும் காங்கிரஸ் பிடிக்கும். அதுவும் பெரும்பான்மையாக வட கர்நாடகாவிலிருந்தே இருக்கும் என்கிறார் எச்.வி.வாசு.
யோகேந்திர யாதவ் சொல்லும் எண்ணிக்கை
மேலும் சுயாட்சி இந்தியா அமைப்பின் தலைவரும், இந்தியாவின் தேர்தல்கள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருபவருமான யோகேந்திர யாதவ், வட கர்நாடகாவில் பாஜக கடந்த முறை வென்ற 14 தொகுதிகளில் 7 தொகுதிகளை இழக்கும் என்று தெரிவித்திருக்கிறார். எனவே அவரது கணக்குப்படி 7 தொகுதிகளை வட கர்நாடகாவில் காங்கிரஸ் வெல்லும்.
எனவே இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளைப் பொறுத்தவரை வழக்கத்திற்கு மாறாக தென் கர்நாடகாவை விட வட கர்நாடகாவே காங்கிரசுக்கு சாதகமாக இருக்கப் போகிறது, பாஜக இந்த முறை வட கர்நாடகாவில் சரிவை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் நிபுணர்கள் சொல்லும் லேட்டஸ்ட் நிலவரம்.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இரண்டாம் கட்டத் தேர்தல்: பின்னடைவை சந்திக்கிறதா பாஜக? எத்தனை தொகுதிகளை இழக்கிறது?
பாஜகவிற்கு எதிரான ராஜபுத்திரர்களின் எழுச்சி…உத்திரப்பிரதேச ரிசல்ட்டை மாற்றுமா?