37 சதவிகிதம் வாக்குகள் வாங்குமளவுக்கு நம்பிக்கை இருந்தால் தனித்துப் போட்டியிட வேண்டியதுதானே என்று அண்ணாமலைக்குச் சீமான் சவால் விடுத்துள்ளார்.
கோவையில் இன்று (செப்டம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்றத் தேர்தல், அண்ணாமலையின் பேச்சு ஆகியவை குறித்து பேசினார்.
சீமானை விட 30 சதவிகிதம் அதிக வாக்குகளைப் பெறுவேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “நாம் தமிழர் கட்சிக்கு 7 விழுக்காடு வாக்குகளை மக்கள் கொடுத்திருக்கின்றனர். என்னை விட கூடுதலாக 30 விழுக்காடு வாக்குகள் வாங்குவேன் என்று அண்ணாமலை சொல்கிறார். அப்படி என்றால் 37 விழுக்காடு வாங்குவார் என்று அண்ணாமலைக்கு நம்பிக்கை இருக்கிறது என்றால் எதற்குக் கூட்டணி. தனித்து நின்று வெற்றி பெறலாமே?” என கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “வெறுப்பின் விதை, செடி, காய் என எல்லாமே பாஜகதான். அதனால் வெறுப்பு அரசியலை பற்றி இவர்கள் பேசக்கூடாது. இவர்கள் செய்வது என்ன விருப்பு அரசியலா? மொழி, மதம், சார்ந்து பிரித்து இருப்பவர்கள் இவர்கள் தான்.
நாங்கள் எல்லா மொழி வழி தேசிய இனத்தவருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கிறோம். 403 சீட்டுகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் எத்தனை முஸ்லீம்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் சீட் கொடுத்தார்கள்” என கேள்வி எழுப்பினார்.
“திமுக, அதிமுகவுடன் நான் மோதுகிறேன் என்றால் அது பங்காளி சண்டை. பெரியாரிய இயக்கங்கள், திராவிட இயக்கங்களிலிருந்து வளர்ந்து வந்தவன் நான். அதனால் எங்களுக்குள் நடக்கிற சண்டை என்பது அண்ணன் தம்பி சண்டை. எங்களுக்குள் இருப்பது சகோதர யுத்தம்” எனக் கூறினார் சீமான்.
“ராமேஷ்வரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று சொன்னேன். ஒருவேளை நேரடியாக மோடியை வீழ்த்த வேண்டும் என்று நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் அந்த தொகுதியில் நான் விலகிக் கொள்கிறேன். திமுகவை ஆதரிக்கிறேன்.
கடந்த காலத்தில் 5 தொகுதியில் பாஜக போட்டியிட்டது. அந்த தொகுதிகளில் 4 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுத்துவிட்டீர்கள். தூத்துக்குடியில் மட்டுமே திமுக எதிர்த்து போட்டியிட்டது” என்று குறிப்பிட்டார்.
பிரியா
புகைப்படம் இருக்கா, இன்னும் எத்தனை வருடம் பேசுவீர்கள் : சீமான் ஆவேசம்!
மக்கள் இதயத்தை சனாதனம் ஆள்கிறது: உதயநிதிக்கு அமித் ஷா பதில்!