தமிழ்நாடு பா ஜ க மாநிலத் தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கட்டுக்கட்டாக பணம் எடுத்து சென்றதாக கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் கர்நாடக தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வரும் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு காங்கிரஸ் – பா ஜ க என்ற இருபெரும் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதனையடுத்து தேசிய கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கர்நாடகாவில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி கர்நாடகா தேர்தல் பா ஜ க இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டு உள்ளார்.
சமீபத்தில் தேர்தல் பணிக்காக அவர் உடுப்பி மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
இந்நிலையில் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டரில் மக்களுக்கு பணம் விநியோகிக்க கட்டுகட்டாக பெரும் தொகையை கொண்டு வந்ததாக காப் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொரகே குற்றம் சாட்டினார்.
உடுப்பி மாவட்ட காங்கிரஸ் பவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
”அண்ணாமலை உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் வந்தபோது, அதில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் அது வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படும்.” என்று குற்றச்சாட்டினார்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு உரிய முறையில் புகார் அளிக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இதனையடுத்து அண்ணாமலை வந்த ஹெலிகாப்டர் முதல் அவர் எடுத்துச் சென்ற பை வரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது நடத்தை விதிகளை மீறும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து உடுப்பி தேர்தல் அதிகாரி சீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பா ஜ க தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை திங்கள்கிழமை காலை 9.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி வந்தடைந்தார்.
ஹெலிகாப்டர் மற்றும் அவர் எடுத்துச் சென்ற பையை அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததில், மாதிரி நடத்தை விதிகளை மீறும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.
ஹோட்டலை விட்டு வெளியேறி, காப் தொகுதிக்கு செல்வதாக அறிவித்த பிறகு, எஸ் எஸ் டி குழுவினர் உத்யாவர் சோதனைச் சாவடியில் மீண்டும் சோதனை நடத்தினர்.
பின்னர் அண்ணாமலை மதியம் 2 மணியளவில் கடையாலி அருகே உள்ள ஓஷன் பேர்ல் ஹோட்டலுக்கு வந்தடைந்தார். அங்கும் சோதனை நடத்தப்பட்டது.
ஆனால் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக எதுவும் கண்டறியப்படவில்லை.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
Comments are closed.