பணம் இல்லாவிட்டால் அண்ணாமலையின் கூட்டத்துக்கு எப்படி ஆட்கள் வருவார்கள்? வேறு எதை வைத்து அவர் அரசியல் செய்வார்? என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 19) காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “நான் காவல் அதிகாரியாக சிறுக சிறுக சேர்த்த பணத்தை அரவக்குறிச்சி தேர்தலில் செலவு செய்துவிட்டு தற்போது கடன்காரனாக இருக்கிறேன்.
வாக்குக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது ஏற்புடையதல்ல என்பது என் நிலைப்பாடு. அதில் உறுதியாக இருக்கிறேன். தேர்தலுக்கு பணம் செலவு செய்யும் அரசியல் எனக்கு தேவையில்லை.” என்றார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையம் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “பணம் இல்லாவிட்டால் அண்ணாமலையின் கூட்டத்துக்கு எல்லாம் எப்படி ஆட்கள் வருவார்கள்? வேறு எதை வைத்து அவர் அரசியல் செய்வார்?
அண்ணாமலையின் சொல் ஆற்றலுக்காக கூட்டம் வருகிறதா? அவருடைய கட்சியின் கொள்கைக்காக வருகிறதா? அல்லது ஏற்கெனவே அமைப்புகள் ஏதும் வைத்துள்ளாரா?
அவரின் கூட்டத்திற்கு பணம் கொடுத்து தான் ஆட்களை அழைத்து வருகிறார்கள். எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் நடைமுறை ஒன்று இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “நானும் பணம் இல்லாமல் பலமுறை தேர்தல்களில் நின்றுள்ளேன். பணம் இருந்தால் வெற்றி பெற்று விடலாம் என்பதில் எனக்கும் நம்பிக்கை கிடையாது. அப்படி அண்ணாமலை சொல்வது போல் பார்த்தால் நாட்டின் முதல்வராக, பிரதமராக டாடா பிர்லா, அம்பானி, அதானி போன்றோர் தான் வரமுடியும்.
பின்னர் எப்படி மன்மோகன் சிங் பிரதமர் ஆகியிருக்க முடியும்? பணமும் ஒரு தேவையாக இருக்கலாம். ஆனால் பணம் மட்டுமே அரசியல் அல்ல. அண்ணாமலையின் கருத்து தவறானது” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டில் இருந்து தொடங்கிய புதிய முயற்சி: ஜே.பி.நட்டா பெருமிதம்
IND vs AUS 2nd ODI: இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான சாதனை!