11ஆவது முறையும் தோல்வியை வரவு வைக்கணுமா?: ஓபிஎஸ் கேள்வி!

அரசியல்

அதிமுகவை கைப்பற்றுவதை காட்டிலும் காப்பாற்றுவது முக்கியம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது.

அதிமுக இரண்டாகப் பிரிந்து இருப்பதுதான் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.

அண்மையில் அனைத்து தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 13) செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2019 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிமுக கூடுதலாக ஒரு சதவிகித வாக்கு பெற்றுள்ளது. 2019ல் திமுக 33.5 சதவிகித வாக்குகள் பெற்றிருந்தது, 2024ல் 6.59% வாக்குகள் குறைந்து 26.93 சதவிகிதம் தான் பெற்றுள்ளது.

2014ல் பாஜக கூட்டணி 18.80% வாக்குகள் பெற்றது. இந்த தேர்தலில் பாஜக 18.28 சதவிகித வாக்குகள் தான் பெற்றுள்ளது. ஆகவே பாஜக கூட்டணி 0.2 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

இன்றைக்கு அதிமுக வாக்குகள் சரிவடைந்தது போல ஒரு தோற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருப்பது உண்மைக்கு புறம்பானது” என்று கூறினார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெறும் என்று கூறிய அவர், “அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் எவ்வளவு வாக்கு சதவிகிதம் பெற்றிருக்கின்றனர்.அவர்கள் பிரிந்து சென்ற பிறகு அதிமுகவின் வாக்கு ஒரு சதவிகிதம்  அதிகரித்துள்ளது. கட்சி வளமாக இருக்கிறது”  என்று தெரிவித்தார்.

அப்போது அவரிடம் அதிமுக ஒருங்கிணைப்பு குழு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ” ஏங்க அதெல்லாம் ஒரு குழுவா…ரோட்டில் செல்பவர்களுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை. கட்சியில் இல்லாதவர்களை எல்லாம் பெரிய ஆள் என்று நினைத்து கேள்வி கேட்கிறீர்கள்” என்று பதிலளித்தார்.

இந்நிலையில் இன்று (ஜூன் 14) காலை அறிக்கை வெளியிட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “அதிமுக பிளவுற்றுக் கிடக்கும் இதே நிலையோடு, நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலை எதிர்கொண்டு, பதினோறாவது தொடர் தோல்வியை வரவு வைத்துக் கொள்வதா, இல்லை ஒன்றுபட்ட அதிமுக என்கிற கம்பீர மிடுக்கோடு கட்சியை களமிறக்கி 2019ல் இதே விக்கிரவாண்டி தொகுதியில் நாம் ஈட்டிய அன்றைய அதே இடைத் தேர்தல் வெற்றியை மீண்டும் நிலைநாட்டி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து வரப் போகிறோமா என்கிற ஏக்கம் நிறைந்த எதிர்பார்ப்பு தொண்டர்களிடம் ததும்பி நிற்கிறது.

கட்சி ஒன்றுபட்டால் தங்கள் பிடி தளர்ந்து போகுமோ என சுயநலத்தோடு சிந்திக்காமல் கட்சியைக் கைப்பற்றி கொள்வதினும் கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

இத்தாலியில் பிரதமர் மோடி : உலகளாவிய சவால்கள் குறித்து விவாதம்!

“படம் பிடிக்கலனா வெளியே சொல்லாதீங்க” : சர்ச்சையாகும் எம்.எஸ்.பாஸ்கர் பேச்சு!

+1
1
+1
5
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

6 thoughts on “11ஆவது முறையும் தோல்வியை வரவு வைக்கணுமா?: ஓபிஎஸ் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *