கட்டுரை 9. மனநலன் என்னும் பண்டம் (தொடர்ச்சி)
போப் ஆண்டவர் ஆட்சிபுரியும் வாடிகன் நகர – நாட்டுக்கு வெளியில் ரோம் நகரத்தில் – சுற்றுலாப் பயணிகள் அதிகம் புழங்கும் இடமான ஸ்பானிஷ் படிகளுக்கு அருகில் வங்கதேச இளைஞர்கள் சீசனுக்குத் தகுந்தாற்போல பொருள் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இவர்களில் பெரும்பாலானோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள். சாலைகளில் விற்றுக்கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு விசில் சத்தம் கேட்கும் அல்லது இவ்வியாபாரிகள் தங்களுக்குள் சைகை மூலம் எல்லைப் போலீஸார் வருவதை தெரிவித்துக்கொள்வர். உடனடியாக அவர்கள் செய்து கொண்டிருக்கும் வியாபாரத்தை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் ஓடி மறைவர். இது ஒரு தினசரி நிகழ்வு.
வளம் பொருந்திய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பொருள் சேர்க்க வேண்டும் என்ற கனவுடன் வருபவர்களில் அநேகம் பேர் திருடர்களைப் போல மறைந்து வாழும் அவலம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் லட்சக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து கள்ளத் தோணியில் இங்கு வந்துள்ளனர். வீட்டில் உள்ளவர்களுக்கோ ஐரோப்பாவில் மகன் / கணவன் / தந்தை இருக்கிறார் என்ற பெருமை. எனவே திரும்பிச் சென்று தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது. கடனை அடைக்க வேண்டும். பொருள் ஈட்ட வேண்டும். இவர்களில் பலருக்கு தங்கும் வசதிகள் கிடையாது (தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வீடு வாடகைக்கு எடுக்க முடியாது) அல்லது ஒரே வீட்டில் 15 பேர் அடைந்து வாழ்வார்கள். பெண்களாக இருந்தால் பாலியல் தொந்தரவுகள் உள்பட, பிரச்னைகள் பல மடங்கு இருக்கும்.
பெருநகரங்களுக்குப் பொருள் தேடி கனவோடு வந்த பின்னர் ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே கிடையாது. நண்பர்கள் கிடையாது. ஏற்படுத்திக் கொள்ள நேரமும், சூழலும், தன்மையும் பொருந்தி வர வேண்டும். மொழி தெரியாது என்றால் அது வேறு ஒரு தனிப் பிரச்னை. இப்படிப்பட்ட தனிமையில் வாடுகின்ற சிலர் போதைப் பொருளிடம் தங்களைத் தொலைத்துக்கொள்வதில் வியப்பில்லை. உலகமயமாக்கலினால் உருவாகின்ற அரசியல் பொருளாதார அகதிகளுக்கும், வந்தேறிகளுக்கும் ஏற்படுகின்ற மனப்பிணி ஒருபக்கம்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள குடிமக்களையும் இது விட்டுவிடவில்லை. உலகமயமாக்கலும் தொழில்நுட்ப வசதிகளும், குடும்பத்தில் மாறிவரும் பங்குகளும், பொறுப்புகளும் மேற்குலகில் உள்ள ஆண்களுக்கு, ஆண் தன்மைக்கு உளப்பிரச்னையாக (crisis of the masculinity) உருவெடுத்திருக்கிறது. 2015இல் ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடந்த ஒட்டு [மொத்த தற்கொலை எண்ணிக்கையில் 75 சதவிகிதம் ஆண்களே](https://www.thecalmzone.net/about-calm/what-is-calm/). இந்த அதிர்ச்சிகரமான புள்ளிவிவரம் (மேற்கத்திய) சமூகத்தில் உள்ள ஆண்களிடம் பெருகிவரும் மனப்பிணிக்கு ஓர் எடுத்துக்காட்டு.
மேற்கிலும் சரி, வளரும் சமுதாயத்திலும் சரி… உலகமயமாக்கலுக்குப் பின்னர் தினசரி வாழ்க்கையில் பெருகியுள்ள அந்நியத் தன்மை மனப்பிணிக்கு ஒரு காரணம் என மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக ஓர் உற்பத்தி தொழிற்சாலையை எடுத்துக் கொள்வோம். உலகமயமாக்கலுக்கு முன்னர், ஓர் உற்பத்தி நடக்கும் இடத்தை நடத்தும் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் சமூக உறவு, ஒரு பரஸ்பர அறிமுகம் இருக்கும். ஒரே ஊரில் இருவரும் வசிக்கக்கூடும். இருவரின் குடும்பங்கள்கூட தொழில் செய்யும் இடம், அங்கிருப்பவர்களின் பின்னணி தெரிந்து இருக்கலாம் (அதற்காக முதலாளி பொன் எண்ணம் கொண்டவர் என்று பொருளல்ல). அறிமுகமான சமூகச் சூழலில் இயங்கி வந்தனர் என்பதே இங்கு முக்கியம்.
ஆனால், உலகமயாக்கலில் நிறுவனங்களே முக்கியம். மனிதர்கள் வெறும் உற்பத்தி செய்யும் கருவிகள் மட்டுமே. அதுமட்டுமல்ல, பன்னாட்டு நிறுவனங்கள் தனி மனிதனை விதிகளின்மூலம் சிறுமைப்படுத்துகின்றன என்றால் மிகையாது, நிறுவனங்களின் தன்மைகள் முகமற்றது.
ஒருவரை வீட்டுக்கு அனுப்புவதற்கு, ‘நிறுவனத்தின் விதி அப்படி, நான் என்ன செய்வது? டார்கெட் எட்ட முடியாவிட்டால், மூன்று எச்சரிக்கை – அதற்குப் பின்னர் வீட்டு அனுப்புவோம் என்று விதி சொல்கிறது’ என்ற காரணமே போதுமானது. மனிதக் காரணங்கள் தேவை இல்லை.
உலகமயமாக்கலின் மூலம் இன்று அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் ‘விதிகளையும் முறைகளையும்’ காட்டி மனிதனின் வாழ்நாள் சந்தர்ப்பங்களை உருவாக்க முடியும்; ஒழித்திட முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால், நிறுவனத்தில் அதிகப் பங்குதாரரும் விதியையும், முறைகளையும் காரணம் காட்டி விலகிக் கொள்ள முடியும். அதாவது நிறுவனங்களும், விதிகளும், முறைகளும் – மனிதர்களை விட அதிகாரம் படைத்த, (சட்டத்தின் பார்வையில்) உயிருள்ள ஒரு ஜந்து. மனிதர்களோ நிறுவனத்துக்கு வேலை செய்யும் ஓர் உற்பத்திக் கருவி. உற்பத்தி வாழ்வாதாரத்தை விட முக்கியமானது என்பதே உலகமயமாக்கத்தின் முக்கியக் கருப்பொருள். இந்த உறவு முறை மாற்றம் மனிதகுலத்துக்கு மிகப்பெரிய உளச்சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
வேலை வாய்ப்பு பெருக்கம் போன்ற புள்ளிவிவரங்களெல்லாம் பண்டிதர்களால் பேசப்பட்டாலும், உலகமயமாக்கத்தினால் ஏற்படுகிற மனப்பிணிக்கு அரசோ, கார்ப்பரேட் நிறுவனங்களோ பொறுப்பு எடுத்துக்கொள்வது இன்னும் பரவலாக இல்லை.
லண்டனில் மட்டும் வீடற்ற இளைஞர்களின் எண்ணிக்கை 2010இல் இருந்ததைவிட தற்போது 50 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கோபன்ஹேகனில் 75 சதவிகிதம். சதவிகித அடிப்படையில் இந்தியாவைவிட பல ஐரோப்பிய நாடுகளில் வீடுகளை இழந்து தெருவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்பதே உண்மை (குளிர் பிரதேசங்களில் உள்ள சாலையில் வாழ்பவர்கள் பனியில் உறைந்து இறப்பதும் உண்டு). அதே சமயம் மேற்குலகில் உள்ள மேல் தட்டைச் சேர்ந்தவர்களிடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு செல்வம் பெருகி வருகிறது. ஒருபுறம் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாத தனிமை, மனப்பிணி. மற்றொருபுறம் உரத்த செல்வம்.
இந்தியாவுக்குச் சென்று வரும் இந்த ஊர்க்காரர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி… பெரு மாளிகைக்குப் பக்கத்திலேயே, சேரியும் இருக்கிறது. இந்த முரண் எப்படி சாத்தியம்? என்று வியந்து போவர். அப்படி ஒருவர் சமீபத்தில் கேட்டதற்கு, நான் சொல்லும் பதில் – எப்படி லண்டனில் கண்ணாடி சுவருக்கு உள் அமர்ந்து ஊரறிய ‘நான் சாப்பிடுவதைப் பார்’ என்று பெருமையாக உண்ணும்போது, கண்ணாடிச் சுவருக்கு வெளியே இருக்கும் வீடற்றவர்கள் உங்களுக்கு உறுத்துவதே இல்லையோ அது போலத்தான் இதுவும். சமமின்மையைப் பற்றி பேசுவது எளிது; நன்கொடை கொடுப்பது எளிது; தன்னார்வ நிறுவனங்களில் மனித விடுதலைக்காக உழைப்பதும் எளிது. ஆனால், தினசரி வாழ்வில் சமமின்மை, அந்நியப்படுத்தப்பட்ட வீடற்றவர்களிடம் கருணை பரிவோடு இருக்கிறோமா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும்.
சந்தைகள் தனிமனிதத் தகுதிகள்மீது நம்பிக்கை கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. ஒருவருடைய பொருளாதாரச் சரிவுக்கும் வறுமைக்கும் காரணம் சந்தையல்ல. தனி நபருடைய தகுதியும் திறமைக் குறைவுமே காரணம் என்கிற சந்தைத் தத்துவம் உலகமயமாக்கல் மூலமாக அனைவரின் மூளையிலும் எழுதப்பட்டு விட்டது. மனப்பிணி ஆண்களை அதிகமாகத் தாக்க இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
இந்த தகுதித் தத்துவம் இப்போது நம்மூரிலும் இறக்குமதி செய்யப்பட்டது, சாதிப் பணக்காரர்களுக்கு வசதியாக உள்ளது. தகுதியும் திறமையுமே சந்தைக்குத் தேவை என்பது மாதிரியான தட்டையான புரிதலில் நிற, இன, சாதி, பால் அடிப்படையிலான பேதங்கள் பற்றி உணர்வுப்பூர்வமாக விவாதிக்க ஏதுவான அரசியல் தளங்கள் சுருங்கிக்கொண்டே வருகிறது. எல்லாவிதமான அடிப்படைத் தகுதிகளும் திறமைகளும் இருந்தும் ஒரு மாற்றுப் பாலினத்தாருக்கு, ஓர் அகதிக்கு, ஒரு சிறுபான்மையினத்தினருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் போவது யதேச்சையானதல்ல.
அமெரிக்காவைச் சேர்ந்த கேத்தரின் நியுமென், இந்திய சமூக ஆய்வாளரான சுகேடோ தொரட் ஆய்வாளர்கள் எழுதிய [ஆய்வுப் புத்தகத்தில்](https://global.oup.com/academic/product/blocked-by-caste-9780198081692?cc=gb&lang=en&) உலகமயமாக்கப்பட்ட வியாபாரச் சந்தைகளின் கதவுகள் அனைவருக்கும் சமமாகத் திறக்கப்படுவதில்லை என்று நிறுவியுள்ளனர். வெள்ளை இனத்தினருக்கும், மேல் சாதியினருக்கும் சந்தையில் நுழைவதற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கும், தலித்துகளுக்கும் கிடைப்பதில்லை என சான்றுகளுடன் நிறுவுகின்றனர்.
உண்மை இப்படி இருந்தாலும், சந்தைகளினால் உருவாக்கப்படும் வாய்ப்புகள் அனைவருக்கும் பொதுவானது என்ற மாயையை முதலீட்டியம் தொடர்ந்து தோற்றுவித்த வண்ணம் உள்ளது.
முக்கியமாக இது உலகமயமாக்கத்தின் குறைபாடல்ல என்ற வாதம் மீண்டும் மீண்டும் உரத்து சொல்லப்படுகிறது. நம்மூரைப் பார்க்கலாம்… டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற சூளுரைப்புகள் சொல்வதெல்லாம், அரசு வாய்ப்புகளைப் பெருக்குகிறது. குடிமக்களாகிய நீங்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால், பயன்படுத்துவதும் பயன்படுத்தாதும் உங்கள் கையில்தான் இருக்கிறது என்பதே. இது ஒரு பெரும் உளச்சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒருவரின் சுயமரியாதையை (self-esteem) குலைத்துப் போடுகிறது. எப்படி என்று ஒரு சிறிய உதாரணம் மூலம் பார்க்கலாம். இந்த உதாரணத்தை நான் பார்த்த சில நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதுகிறேன்.
சமுதாயத்தில் சாதி மற்றும் கல்வியளவில் கீழ்ப்படியில் உள்ள முருகன் என்பவர் தனது குழந்தைக்குச் சாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்க அரசு அலுவலகம் செல்கிறார். அலுவலகத்துக்கு சென்றவுடன், அங்கிருக்கும் எழுத்தர் இணையத்தில் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று சொல்கிறார். முருகனுக்கோ ஒன்றும் புரியவில்லை. எழுத்தருக்கோ வேறு வேலை. வெளியே உள்ள இன்டர்நெட் கடைக்குப் போய் விசாரித்துக் கொள் என்று விரட்டியடிக்கப்படுகிறார். ‘உங்களையெல்லாம் வெச்சிக்கிட்டு எப்படி இந்த தேசம் முன்னேறும்?’ என்று ஒரு சுளீர் கமெண்ட். முருகன் தன்னை நொந்துகொண்டு வாசலில் உள்ள இன்டர்நெட் கடைக்குச் சென்று உதவி கேட்கிறார். அங்குள்ள ஒரு விடலைப் பையன் அடாதுடியாக பேசி அச்சேவையை அளிக்க சம்மதிக்கிறான். இந்தச் சேவை இலவசமல்ல. ஆனால், வேறுவழியில்லாமல் முருகன் பணம் அளித்தாக வேண்டியிருக்கிறது. கடைக்காரத் தம்பியும் உதவுகிறான். பிறகு ரெஃபரன்ஸ் எண் தருகிறான். முருகனுக்கு ஒன்றும் புரியவில்லை. கடைக்காரத் தம்பி, தன்னை வந்து ஒரு வாரம் கழித்துப் பார்க்கும்படி கூறுகிறான். 50 ரூபாய் கொடுத்தால் தான் முடித்துக்கொடுப்பதாகக் கூறுகிறான்.
வளரும் நாடுகளில் மின்வய ஆட்சியமைப்பு (electronic governance) என்பது உலகமயமாக்கலினால் ஏற்பட்ட ஒரு விளைவு. இது உலகெங்கும் தாராளவாதிகளால் போற்றி புகழப்படுகிறது. இவற்றில் சில உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால், இப்போது இந்த விண்ணப்பப் படலத்தை முருகனின் பார்வையில் இருந்து பார்ப்போம்.
முருகன் என்ற தனிமனிதனுக்கு, ஒரு மானமுள்ள குடிமகனுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அரசு என்னும் இயந்திரம், அங்குள்ள எழுத்தர், இணைய வியாபாரம் செய்பவர் என எவரும் அளிக்கவில்லை என்பதே உண்மை. தகவல் தொழில்நுட்பம், மின்வயப்படுத்தப்பட்ட துரித அரசாங்கம், வெளிப்படைத்தன்மையை உயர்த்தும் ‘நவதாராளத் தன்மைகள்’, குளிரூட்டப்பட்ட அரசு அலுவலகங்கள்… இவையனைத்தும் முருகனை கூச வைக்கிறதே ஒழிய அவருக்கு எந்தவிதமான ஆதரவும் தருவதில்லை. இது அனைத்தும் முருகனின் இயலாமையே என்ற சித்திரிப்பும் நிகழ்கிறது. இந்த உளவியல் சித்திரவதை மிகக் கொடுமையானது.
இது முருகனுக்கு மட்டுமல்ல. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘டேனியல் ப்ளேக்காகிய நான்’ (I, Daniel Blake) என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் முக்கியப் பாத்திரத்தின் நிலையும் இதுவே. பார்ப்பதற்கு [இங்கே சொடுக்கவும்](https://www.youtube.com/watch?v=5qRqQn5j7XM). நான் சொல்ல வருவது புரியும்.
ஒரு குடிமகனாக, தனது மகனுக்குச் சாதிச் சான்றிதழ் பெறுவதில் முருகனுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. இது முருகனுக்கும் தெரியும். ஆனால், சான்றிதழ் பெற தகுதி இல்லாதோர்போல் நடத்தப்படுவதை முருகன் தனது குறையாகப் பார்க்கிறார். சாதிச் சான்றிதழ் பெற முருகனுக்கு உரிமையுள்ளது. ஆனால், உலகமயமாக்கலின் முறைகளினால் தான் சான்றிதழ் பெறுவதற்கான இணையத் தகுதி இல்லை என்று சித்திரிப்பும் நிகழ்கிறது. இந்த முரண் ஒரு மனிதனின் அகத்தை, அவனின் இருப்பை (core) கேள்விக்குள்ளாக்குகிறது. இரு வெறும் அரசியல் சிக்கல் மட்டுமல்ல. அரசின் நவதாராளக் கொள்கைகள் ஏற்படுத்தும் மனப்பிணி.
உலகமயமாக்கலுக்குப் பின்னர் ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் சிறுதொழில்கள் செய்வோர் தற்கொலை செய்துகொள்வது யதேச்சையானதல்ல. சமூகத்தில் அவர்களின் தொழில்கள், வாழ்வாதார வாய்ப்புகள் – முகமறியா பன்னாட்டு நிறுவனங்களாலும், குழப்பும் விதிகளாலும் பறிக்கப்படும்போது அவர்களின் இருப்பு அவமதிக்கப்படுகிறது. தற்கொலைக்கான காரணம் அரசியல், பொருளாதாரக் காரணங்களாக இருந்தாலும் தற்கொலை என்ற செயலுக்குப் பின்னர் மனப்பிணி இருப்பதாகவே மனநல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உலகமயமாக்கலினால் உண்டாகியுள்ள சமமின்மையை மனப்பிணியாகவும் கருத வேண்டும் என்ற கோரிக்கை இப்போது ஆங்காங்கே கேட்கத் தொடங்கியுள்ளது. இதைப் பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய ராஜ்ஜியத்தின் லேபர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் மனநல அமைச்சர் (mental health minister in his shadow cabinet) என்ற ஒரு பொறுப்பை தனது நிழல் அமைச்சரவையில் உருவாக்கியுள்ளார்.
அடுத்த முறை டாஸ்மாக் கடையைக் கடந்து போகும்போதோ அல்லது உள்ளே சென்று குடிக்கும் போதோ எத்தனை பேர் தனியாக வந்து, ஒரு மூலிகை மருந்து போல குடித்துவிட்டு உடனடியாக இடத்தைக் காலி செய்கிறார்கள் என்று கவனியுங்கள். இன்னும் மோசம் – கூட்டமாக வந்து ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளாமல் உர்ரென்று ப்ளாஸ்மா திரைகளைப் பார்த்துக் கொண்டே குடித்து எழுந்து செல்கிறவர்களைப் பாருங்கள். அக்காட்சிகள் உணர்த்துவது அடிமைப்பட்ட குடிப்பழக்கத்தை மட்டுமல்ல, தினசரி வாழ்க்கையில் உள்ள மனப்பிணியின், மன அழுத்தத்தின் தீவிரத்தையும்தான்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[கட்டுரை 1. ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?]
[கட்டுரை 2. நரி வேட்டை அரசியல்]
[கட்டுரை 3. மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்]
[கட்டுரை 4. திறனாளர்களும் தொழிலாளர்களும்]
[கட்டுரை 5. அரசியல் மேலாளர்கள், தொழில் தலைவர்கள்]
[கட்டுரை 7. ஆக்கிரமிப்பு இயக்கம்]
[கட்டுரை 8. மனநலன் என்னும் பண்டம்]