கட்டுரை 8 – மனநலன் என்னும் பண்டம்
இந்த வாரக் கட்டுரைக்குச் செல்லும்முன், சில ஒப்புதல் வாக்குமூலங்கள் அளிப்பது நேர்மையாக இருக்கும். இந்த மினி தொடரை எழுதும் நான், உலகமயமாக்கத்தினால் பயனடைந்த எண்ணற்றவர்களில் ஒருவன். குறிப்பாக, ஐரோப்பிய யூனியனின் ஒரு பங்காக இதுவரை இருந்து வருகிற ஐக்கிய ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்ட தாராளமயக் கொள்கையினால் பயனடைந்தவன்.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக லண்டனில் இருந்துகொண்டு பல்வேறு நாடுகளுக்குப் பணி நிமித்தமாகவும், பயணக் களிப்புக்காகவும் சென்று வருவதற்கு உலகமயமாக்கலே காரணம் என்பதை இங்கு பதிவு செய்வது நேர்மையான காரியமாகும்.
குறிப்பாக எனது இருபது ஆண்டு காலப் பணி, தற்போதைய பல்கலைக்கழகம் சார்ந்த ஆய்வுக்களம், ஊடகம், தகவல் தொடர்பு (தொழில்நுட்பம்), இணையம் பற்றியும் அவற்றில் பொதிந்துள்ள மானுடவியல் கூறுகள் பற்றியதுமாகும். எனது தொடரைப் படித்து வரும் அனைவருக்கும், தகவல் தொடர்பு சார்ந்த தொழில்நுட்பம், முதலீட்டியம், வருவாய், வேலைவாய்ப்பு அனைத்துமே உலகமயமாக்கலின் பொருள், கலாசார, அரசியல் பரிவர்த்தனைகளுக்கு துணை புரிபவை என்பது தெளிவுறத் தெரியும். எனவே உலமயமாக்கலினால் விளைந்த சாதகங்களை – அதிலும் எனது வாழ்வில் கண்ட சந்தர்ப்பங்களை நான் முற்றிலுமாக நிராகரித்துவிட முடியாது. அப்படி செய்வது நேர்மையாகவும் இருக்காது.
அதேபோல உலகமயமாக்கத்தினை எந்தக் கோணத்தில் விமர்சனம் செய்தாலும், அதற்கொரு எதிர்வினை ஆற்ற முடியும். உலகமயமாக்கலினால் விளைவாக, வியாபாரச் சந்தைகளில் பெண்கள் நுகர்வுப் பண்டமாகப்பட்டனர் என்று ஒருவர் கூறினால், “வெவ்வேறு மூலைகளில் இருப்பவர்கள் தங்களது அரசியல், பாலியல் அடையாளங்களால் ஒன்று கூடுவதும், புதிய சமூகத்தை வார்த்தெடுப்பதும் ‘இரு விளைவுகளின் பயனாகும்” (படிக்க: [மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்] என்ற கிட்டன்ஸின் எதிர்வினையிலும் நியாயம் உண்டு. வறுமை பெருகியது என்று கூறினால், மொத்த வருமானமும், வேலை வாய்ப்பு எண்ணிக்கை பெருகியது என்றும் கூறலாம். இப்படி எல்லாவற்றுக்கும் சாதக பாதக வினைகள் ஆற்ற முடியும்.
ஆனால், இந்த வாரம் உலகமயமாக்கத்தினால் விளைந்த, அதிகம் பேசப்படாத மற்றொரு பக்கத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன்: மன நலன் குறித்த சர்ச்சை.
மனநலச் சிதைவு, மன நெருக்கடி மற்றும் உளைச்சல், தற்கொலை உணர்வு, கழிவிரக்கமூட்டும் / உயிரை மாய்த்துக் கொள்ளும் தனிமை, பயம், அவமானம், சுயமரியாதை இழப்பு என மனநோய்க்கு பல தன்மைகளுண்டு. அடிப்படையில் அதுவும் ஒரு வகையான ஒரு நோய்.
உலகமயமாக்கலின் பல்வேறு விளைவுகளைப் பேசுவோர்கூட, மனநல விளைவு பற்றிப் பேச தயங்குகின்றனர். கூச்சப்பட்டு தவிர்க்கின்றனர். இப்பொருளை பேசுவதே களங்கம் என நினைத்து தவிர்க்கின்றனர். ஆனால், மனநலன் பிரச்னை மறைவதாக இல்லை. குறிப்பாக, உலகமயமாக்கலால் பலன் அடைந்தோருக்கும் சரி, அவற்றால் வஞ்சிக்கப்பட்டோருக்கும் சரி – மனநலப் பிரச்னை ஒரு பொதுவான தீய விளைவாக இது உருவெடுத்திருக்கிறது.
உலகமயமாக்கலின் விளைவினால் ஏற்பட்ட சமமின்மை, வறுமை போன்ற பிணிகள் புள்ளிவிவரங்களாலும், எண்களாலும் கட்டமைக்கப்பட்டு அவற்றுக்கான தீர்வு பன்னாட்டு மாநாடுகளிலும் அரசியல் தலைவர்களாலும் விவாதிக்கப்படுகின்றன. இது முக்கியமானது என்பதற்கு மறுப்பில்லை.
ஆனால், இப்புள்ளிவிவரங்கள் தாண்டி நமது சுயத்தை முற்றிலும் விழுங்கி சுரண்டும் மனநலப் பிரச்னை பற்றி பொதுவெளியில் அதிகம் விவாதம் நடைபெறவில்லை என்பதே உண்மை. இதனாலேயே, “சமமின்மைக்கு எதிராக புள்ளி விவரங்களையும், எண்களையும் கொண்டு வாதாடுவது பண்டிதத்தனம். ஆனால், சமமின்மையின் வலி உணர்ச்சிபூர்வமானது. மான உணர்வு சம்பந்தப்பட்டது” என்று போன வாரம் குறிப்பிட்டேன் (பார்க்க, [ஆக்கிரமிப்பு இயக்கம்]).
உலகமயமாக்கலினால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, உலகெங்கும் மனச்சிதைவு, உளைச்சல், தற்கொலை உணர்வு அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. இந்த விளைவுக்கு எந்த சமூகமும் விதிவிலக்கு என்று சொல்லமுடியாத நிலையில் இந்தப் பிணி வியாபித்திருக்கிறது. இவ்விளைவுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் – நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு நிறைய பேரைப் பாதித்திருக்கிறது என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது.
உலகமயமாக்கலும் தற்கொலையும் [(Globalisation and suicide: An empirical investigation in 35 countries over the period 1985-2006)](http://www.sciencedirect.com/science/article/pii/S1353829211000505) என்ற தலைப்பின் கீழ் பிரிஸ்பேனில் உள்ள க்ரிஃபித் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அலிசன் மில்னர், ராட் மக் க்லூர், ஜிங் சன், டீகோ டெ லியோ 35 நாடுகளில் 1980–ஆம் ஆண்டிலிருந்து 2006 வரையிலாக 26 வருடங்களில் நடந்த தற்கொலைகள் (அரசு புள்ளி விவரப்படி) பற்றி அலசினர்.
உலகமயமாக்கல், விவாகரத்து, ஊரக வேலைவாய்ப்பு, விவசாய வேலைவாய்ப்பு, வெளிநாட்டினரின் குடியேற்றம், மதப் புத்தகங்களின் பதிப்பு விவரம், பிறப்பு விகிதம், உடல் நலத்தினரின் மீதான தனிநபர் செலவு, கல்வி, 65 வயதுக்கு மேல் உயிர் வாழும் சதவிகிதத்தினர் என பல்வேறு காரணிகளைக் ஒப்பிட்டு ஆய்ந்ததில் உலகெங்கும் அதிகரித்து வரும் தற்கொலைகள் உலகமயமாக்கலுக்குப் பின்னர் அதிகரித்துள்ளது என்ற முடிவுக்கு வந்தனர். மற்ற சமூகக் காரணிகளோடு சேர்ந்து ஒப்பிடுகையில் உலகமயமாக்கல் என்ற தற்கொலை அதிகரிப்புக்கான ஒரு காரணியாக உள்ளது என்று நிறுவினர். அது மட்டுமல்ல இத்தற்கொலைகளில் ஆண்களே எண்ணிக்கையில் அதிகம் என அந்த ஆய்வு சொன்னது.
மனநலப் பிரச்னையானது ஐக்கிய ராஜ்ஜியம் போன்ற இடங்களில் இப்போதுதான் பேசு பொருளாக ஆகிவருகிறது. ஆனால், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதுகுறித்து பேசுவதே அவமானம், பாவம் என்ற நிலையே எஞ்சியுள்ளது.
உற்பத்தி, வியாபாரம், நுகர்வு, பன்னாட்டு ஒப்பந்தம், தகவல் தொடர்பு, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் பற்றிய பிரச்னை பற்றி விவாதம் செய்ய ஏதுவாக அநேக பன்னாட்டு, தேசிய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதேபோல் எய்ட்ஸ், காச நோய் போன்றவைகள்கூட பன்னாட்டு நிதி, அரசு, மற்றும் வளர்ச்சி நிறுவனங்களால் உலகப் பிரச்னையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், புற்றுநோய் போல எங்கும் பரவ ஆரம்பித்திருக்கும் மனச்சிதைவானது (mental illness) மட்டும் தனிநபர் பிரச்னையாகவும், அது ஓர் அந்தரங்க அவமானமாகவும் கருதப்படுகிறது. ஆனால் முதலீட்டியமும் தாராளமயமாக்கலும் மனநலப் பிரச்னைகளை அதிகரிப்பதில் ஒரு காரணமாக இருந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன், ஒரு இரவு அவசரமாக வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், ரயில் நிலையத்துக்கு முன் ஓர் இளைஞர் என்னை வழிமறித்தார். கிட்டத்தட்ட இருபது சொச்சம் வயது இருக்கும். அவரது உச்சரிப்பும், வார்த்தைப் பிரயோகங்களும் ‘நாலு எழுத்து படித்தவர்’ என அடையாளம் காட்டியது. மான்செஸ்டரில் இருந்து தான் ரயிலில் வருவதாக கூறினார் (ஆதாரம்: தனது அடையாள அட்டையுடன் கூடிய பயணச்சீட்டு). “லண்டன் எனக்கு புதிது. கிங்ஸ் க்ராஸில் வீடற்றவர்களுக்கான விடுதி ஒன்று இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். அது எங்கே இருக்கிறது என்பதை உங்கள் செல்பேசியில் கண்டு சொல்ல முடியுமா?” என்று கேட்டார். இந்த வேண்டுகோளுக்குப் பின் சில அடி நகர்ந்து சென்று எனது பதிலுக்காகக் காத்திருந்தார். அப்படி நிற்கக் காரணம், ‘எனது நோக்கம் உண்மையானது, நான் ஒரு மோசடிப் பேர்வழி அல்ல’ என்று உணர்த்தவே என்றார். உண்மையில், நான் ஒரு நொடி அவரை மோசடிப் பேர்வழி என்றே நான் நினைத்தேன் என்று இங்கு ஒப்புக்கொள்வதில் எனக்கு வெட்கமில்லை (லண்டனில் இரண்டு முறை, இதே பாணியில், எனது உடமைகளை இழந்திருக்கிறேன்).
அவருடைய அணுகுமுறை என்னை தர்மசங்கடத்துள்ளாக்கியது. விடுதிக்குச் செல்லும் வழியை சொல்லி விட்டு நகருகையில், ‘இப்பகுதியில் சாப்பாடு விலை அதிகம். இரவுச் சாப்பாட்டுக்கு என்ன செய்வதாக உத்தேசம்?’ என்று கேட்டபோது, தன்னிடம் உள்ள மூன்று பவுண்டில் ஏதாவது வாங்கி சாப்பிட்டுக் கொள்வேன் என்று கூறினார். அருகில் உள்ள ஒரு பினாங்குத் தமிழர் கடையில் பரோட்டாவும் குருமாவும் சாப்பிடலாம் என்று சொல்லி உள்ளே அழைத்துச் சென்றபோது, அக்கடையின் உரிமையாளர் (எனக்கு அறிமுகமானவர்), என்னுடன் வந்த நபரை விரட்டியடிக்க ஆரம்பித்தார். அவர் என்னுடன் வந்துள்ளார் என்று சொன்னவுடன், மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்; ஆனாலும் உள்ளே விட முடியாது என்று கறாராக சொல்லிவிட்டார். ‘பார்சல்’ கட்டி வெளியே வந்து சாலையில் அமர்ந்து சாப்பிடும்போது அவர் சொன்னது: ‘சாப்பாட்டை விட முக்கியம், என்னைச் சமமாக பாவித்து என் கண்ணைப் பார்த்து நீங்கள் உரையாடியது தான்.’
என் பணிக்கு செல்லும் வழியில் இருக்கும் வீடற்றவர்களிடம் (சாலையின் ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள்) சென்று சில மணித் துளிகள் நலம் விசாரிப்பது உண்டு. பணம் இல்லை என்று சிலமுறை சொன்னபோது கூட அவர்களுக்கு துளியும் வருத்தம் கிடையாது. அதனாலென்ன, இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிடுவர்.
வீடற்றவர்களுக்குப் பணம் முக்கியம். ஆனால் பணம் மட்டும் முக்கியமல்ல. அவர்களிடம் நான் பேசும்போது, ஒவ்வொரு முறையும் என்னிடம் சொல்வது… வீடற்று தனிமையாக இருப்பதில் உள்ள ஒரு கொடிய விளைவு சுயமரியாதையற்று அநாதையாக சாலையில் வாழ்வது; சமூகம் தங்களை ஒரு பெருவியாதியஸ்தர்களைப் போல ஒதுக்குவது. லண்டன் மாதிரியான பெருநகரம் துளிக் கூட இரக்கமற்றது. பொருள் இல்லையெனில், அனைவரின் கண்களில் இருந்தும் சட்டென நாம் மறைந்து விடுவோம். ஸ்தூல உடம்போடு ஆவியாக அலைவதற்கு சமம். எனவே, அவர்களின் கண்களைச் சந்தித்து, ‘உனக்கு உதவி செய்ய முடியாது’ என்று சொல்வதை கூட நட்பு மொழியாகவே பெரும்பாலும் பார்க்கிறார்கள்.
இதைப் படிக்கும் உங்களில் பலர், ‘இது ஒரு பெரிய விஷயமா? இங்கே மனிதர்கள் தினசரி சாகுறான், நீ வேற’ என கடக்கலாம். பிரச்னையே அதுதான். இது எல்லா இடத்திலும் நடக்கிறது. சமமின்மை, வறுமை காரணமாக சக மனிதர்களின் அடிப்படை கண்ணியத்தையும், அவர்களின் சுயத்தை நசுக்குவதும் பொருண்மய வாதத்தில் சாதாரணப்படுத்தப்பட்டுவிட்டது. தேசத்தின், தனி நபரின், குடும்பத்தின், சமூகத்தின் – முன்னேற்றம், வளர்ச்சி என்பதும் கூட பொருள் சார்ந்ததாகவே பொதுப்புத்தியில் திணிக்கப்படுகிறது. சமூகப் பாதுகாப்பு என்ற பதம்கூட பொருண்மய ரீதியாகவே உலகெங்கும் பகுக்கப்படுகிறது.
பொருள் வளர்ச்சியைப் பற்றி அக்கறை கொள்ளும் உலகமயமாக்கலுக்கு நாம் கொடுக்கும் விலை மனநலன். ஆனால் முதலீட்டியத்தினால் உருவாக்கப்படுகிற சமூகக் கட்டுமானத்திலோ, நிறுவனங்களிலோ மனநலப் பாதுகாப்புக்கு இடம் இல்லை என்பது கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்கு சமமானது.
அடுத்த வாரம் மனநலனுக்கும் முதலீட்டியத்துக்கும் உள்ள உறவை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
கட்டுரையாளர்: முரளி சண்முகவேலன்
ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[கட்டுரை 1. ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?]
[கட்டுரை 2. நரி வேட்டை அரசியல்]
[கட்டுரை 3. மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்]
[கட்டுரை 4. திறனாளர்களும் தொழிலாளர்களும்]