கட்டுரை 7 – ஆக்கிரமிப்பு இயக்கம்
பன்னாட்டு வளர்ச்சி மாநாடுகள், உயர்கல்வி கருத்தரங்குகள், உலக அரசியல் மேடைகள், பொருளாதார அறிஞர்களின் கூட்டங்கள் போன்ற தளங்களில் உலகில் நிலவி வருகிற சமமின்மை பற்றி பேசும்போது இருப்பவருக்கும், இல்லாதவருக்கும் (haves vs have nots) உள்ள இடைவெளி பற்றி உரையாடுவது வழக்கம். இந்தச் சமமின்மை வாதங்கள் அதிர்ச்சிகரமான எண்களால் கட்டப்பட்டிருக்கும்.
உதாரணமாக, சமீபத்தில் பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபாம் (Oxfam) என்ற தன்னார்வ நிறுவனம் கிரெடிட் சுயிஸ் என்ற நிதி சேவை நிறுவனத்தின் தரவுகளை ஆதாரமாகக்கொண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, உலகத்தின் உள்ள பணக்கார ஒரு சதவிகிதத்தினரின் செல்வமானது, ஏனைய 99 சதவிகிதத்தினரின் செல்வத்தைவிட அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது. இப்படிப்பட்ட அதிர்ச்சிகரமான தரவுகளின் உண்மைகளை மறுப்பதற்கில்லை என்றாலும், இம்மாதிரியான தரவுகள், மாநாட்டின் மதியச் சாப்பாட்டுக்கு முன் (அல்லது பின்) உருவாக்கும் மெல்லிய அதிர்வலைகளைத் தவிர வேறு எதற்கும் பயன்பட்டதாகத் தெரியவில்லை. இம்மாதிரியான மாநாடுகளில் செல்வந்தர்களும் (உதாரணம்: பில் கேட்ஸ், சோரோஸ்), அதிகார பலமுள்ள அரசியல்வாதிகளும் இத்தரவுகளைப் பற்றி கவலைக்கொள்கிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டியது என்றாலும் இவற்றில் உள்ள முரணை கடந்து செல்ல முடிவது அவ்வளவு எளிதல்ல.
இந்தியா போன்ற வளர்ச்சி கீதம் பாடும் சமூகங்களிலோ பணம் சம்பாதிப்பது, பொருள் சேர்ப்பது எல்லாம் தகுதியின் அடிப்படையில் (merit-based) ஏற்படும் நவதாராள பொருளாதாரத்தின் விளைவுகள் என்ற பிம்பம் வெற்றிகரமாக எழுப்பப்பட்டு வருகிறது. சந்தை, நிதி, தகவல் தொடர்பு முதலீட்டிய சூழல்களில் தகுதி உள்ளோர் முன்னுக்கு வரலாம் என்ற திரிபு பொதுப் புத்தியாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளது.
சமமின்மை பற்றி கவலைக்கொள்ளும் அறிஞர்கள், வளர்ச்சிப் பண்டிதர்கள், பொருளாதார அறிஞர்கள்கூட நலிந்தோர்களின் வாழ்வு வளம்பெற, ஜனநாயக அமைப்பின் அதிகாரத்தில் உள்ளோர் மனம் வைத்தால் வளம் பெருகும் வாய்ப்புகள் உருவாக்கப்பட முடியும் என்று நம்புகிறார்கள். அல்லது அதுபோன்ற ஒரு மாயையை தோற்றுவிக்க முயல்கிறார்கள்.
ஐரோப்பிய நாடுகள் பொதுவாகவே நல அரசுகளுக்கான (welfare state) தன்மையுடையது. உதாரணாமாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் மருத்துவம், அடிப்படை பள்ளிக்கல்வி எல்லாம் இலவசம் ஆகிய (சோஷலிச) கொள்கைகள் குடிமக்களுக்கு இன்றியமையா சேவைகளை அளித்து வருவது உண்மை. இம்மாதிரியான நலச்சேவைகள் போற்றப்படக்கூடியது என்றாலும், ஜனநாயகச் சமூகங்கள் அதிகாரம் உள்ளவர்களுக்கே பலனளிப்பதாக இருந்து வருகிறது என்பதையும் மறுக்க முடியாது.
குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல், வயதுவந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, நாடாளுமன்ற நடைமுறைகள், நீதி மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கைக்கு உதவ வேண்டும்; அதிகாரத்தை கேள்வி கேட்க வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டாலும் (அல்லது அப்படி சொல்லப்பட்டாலும்), அன்றாட வாழ்க்கை அதிகார வர்க்கத்துக்கே சாதகமானதாக இருந்து வருகிறது.
அதாவது மேற்கில் வார்க்கப்பட்ட தேர்தல் பாணி சுதந்திர ஜனநாயகம் (election based western liberal democracy) இயல்பாகவே குடிமக்களுக்குப் பயனளிக்கும் என்பதில் எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. இதனால்தான், ‘வளர்ச்சிமிகு’ ஜனநாயக இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கும் தலித்துக்களில் இருந்து, கடைக்கோடி கிராமங்களில் இருக்கும் நிலமற்ற தலித்துக்கள் வரை தொடர்ந்து ஒடுக்கப்படுவதும், தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்கிறது; அதனால் அவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதும் தொடர்கிறது.
இம்மாதிரியான அடக்கு முறைகள் பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடைபெறுகிறது. தொடர்ந்து அடித்தட்டு மக்கள், அமைப்பு ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயக அரசு, அறிஞர்கள் நிரம்பிய நீதித்துறை, கருத்துரிமைக்கு ஆதரவான வெளிப்படையான ஊடகங்கள், பொருள் குவிப்பதின் மூலம் சமூகத்துக்கு பயனளிக்கக் கூடியதாகச் சொல்லப்படும் முதலீட்டிய நிறுவனங்கள் ஆகியவைகளினால் சாமானியருக்குப் பயன் கிடைப்பது குறைந்து கொண்டே வருகிறது.
துனிசியாவில் ஆரம்பித்து, வால் ஸ்ட்ரீட் வரை நிகழ்ந்த ‘ஆக்கிரமிப்பு’ (Occupy) இயக்கம் சொல்வது ஒரே ஒரு செய்தி: மேற்கில் வார்த்தெடுக்கப்பட்ட வாக்குரிமையின் அடிப்படையிலான ஜனநாயகத்தின் பலன்கள் பெரும்பான்மை மக்களுக்கு – குறிப்பாக நலிந்தோருக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு – ஆதரவாக இல்லை என்பதே அது. இதனால் சமமின்மை என்னும் பிணி மக்களின் வறுமையைத் தாண்டி, அவர்களின் மான உணர்வுகளோடு விளையாட ஆரம்பித்திருக்கிறது. சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லிஸ்பன், ஏதென்ஸ், மாட்ரிட், ரோம், மாண்ட்பெலியே, ஃப்ராங்க்ஃபர்ட், ம்யூனிக், சுரிக், பெர்லின், லண்டன், சிட்னி, ஹாங்காங், கேப் டவுன், ஜொகன்னஸ்பர்க், நியூயார்க், குபெக் (கனடா), மாண்டிவிடியோ (உருகுவே), சாந்தியகோ (சிலெ), சால்வடோர் (ப்ரேசில்), லிமா (பெரு), மனாகுவா (நிகராகுவா), உள்ளிட்ட 750-க்கும் (ஆம், 750!) மேற்பட்ட பெருநகரங்களில், ஊர்களில் ஆக்கிரமிப்பு இயக்கம் நடைபெற்றது. விரல்விட்டு எண்ணக்கூடிய சில இடங்களைத் தவிர இப்போராட்டங்கள் அனைத்தும் மேற்குலகில் நடந்தது என்பது இங்கு மிக முக்கியமானது. அது மட்டுமல்ல, அநேக ஆக்கிரமிப்பு இயக்கங்களில் மக்கள் தன்னிச்சையாக பத்தாயிரத்தில் இருந்து, ஐம்பதினாயிரம் பேர் வரை பல வாரங்கள் கலந்துகொண்டனர் என்பதும் மிக முக்கியம். மக்களின் எழுச்சியைக்கண்ட மேற்கத்திய ஜனநாயக அரசுகளோ தடாலென அடக்குமுறை அரசுகளாக மாறியது மிக முக்கியமானது.
ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் விடுதலைக் குரலாகப் பார்க்கப்பட்ட ஒபாமாவிலிருந்து, ஐரோப்பிய தாராளவாத அரசியல் தலைவர்களில் இருந்து, துனிசியாவின் அடக்குமுறை அதிபரான அபிதீன் பென் அலி வரையிலுமான அனைத்து – வகையான – தலைவர்களும் அரசின் உதவியோடு வன்முறையை ஏவி போராட்டத்தை, ஆக்கிரமிப்பு இயக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர். துனிசிய அதிபர் போன்ற ஜனநாயக மாண்பறியா அடக்குமுறைத் தலைவர்கள் மக்களின் மீது வன்முறை ஏவியது குற்றமெனினும், அவர்களின் எதேச்சதிகாரத் தாகத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், வாக்குரிமை ஜனநாயகத்தின் மாண்பினையும், குடிமக்களின் கருத்துரிமைகளையும் தாங்கிப் பிடிப்பதாகக் கருதப்படும் அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி, கிரேக்கம், ஸ்பெயின், போர்ச்சுக்கல், ஜெர்மனி உள்ளிட்ட மேற்குலக அரசுகள் ஆக்கிரமிப்பு இயக்கங்களை எந்தவிதமான தயக்கமும் இன்றி நசுக்கியது. நியூயார்க்கில் ஆக்கிரமிப்பு நடந்த முதல் இரண்டு நாள்களிலேயே ஆயுதம் தாங்கிய அதிகாரிகளால் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அது மட்டுமல்ல, ஆக்கிரமிப்பு இயக்கம் பற்றிய ஊடக விவாதங்களும் பொறுப்பன்றி நடந்தது. குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் இந்த இயக்கங்களைச் சுதந்திர இச்சைக்கொண்ட ஒரு ‘ஹிப்பி’ கூட்டம் போல பார்த்தனர் என்றால் மிகையல்ல. கிண்டலும், இகழ்ச்சியுமே மிஞ்சியது.
2012-க்குப் பிறகு ஆக்கிரமிப்பு இயக்கம் பற்றி புத்தகங்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வெளிவந்தாலும் மேற்கில் உள்ள கல்விப்புலங்களிலும், ஆய்வு வட்டாரங்களிலும்கூட இந்த ஆக்கிரமிப்பு இயக்கம் பற்றிய முழுமையான மீளாய்வு நடந்ததாக எனக்குத் தெரியவில்லை. துனிசியாவில் தொடங்கி பின்னர் ஐரோப்பா, வட – தென் அமெரிக்க நாடுகளில் பரவிய ஆக்கிரமிப்பு இயக்கத்தின் எழுச்சியும் தோல்வியும் பெரும் ஆய்வுக்குரியது.
ஆக்கிரமிப்பு இயக்கம் நமக்கு உணர்த்தும் தகவல்கள் பல… இந்த இயக்கத்துக்கான போராட்ட வடிவத்தை உலகுக்குக் கொடுத்தது, நாகரிகம் தெரியா காட்டுமிராண்டிகள் என்று மேற்கில் தொடர்ந்து வசைபாடப்படும் மத்திய கிழக்கு சமூக சமுதாயத்தைச் சேர்ந்த துனிசிய மக்கள். ஆனால், இந்தப் போராட்டத்தை அனைத்து மேற்குலக நாடுகளும் வன்முறைக்கொண்டு அடக்கினர்; அதாவது மக்களின் அடிப்படைக் கருத்து சுதந்திரத்தை நசுக்கினர்.
ஊடகப் பண்டிதர்களும், அரசியல் விற்பன்னர்களும் தலைமையில்லா, அதிகாரக் குவியல் இல்லாத, நேரடியான ஜனநாயகக் (direct democracy) கனவு காணும் ஆக்கிரமிப்பு இயக்கம் நவீன உலகுக்கு பொருந்தாது எனத் தீர்ப்பளித்தனர்.
ஆக்கிரமிப்பு இயக்கம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. ஆனால், மேற்கில் உள்ள ஜனநாயக அரசுகள் அனைத்தும் அந்த இயக்கத்தை சிதைப்பதற்கான எடுத்துக்கொண்ட முயற்சி சொல்லும் பாடம் முக்கியமானது. ஆனால், ஜனநாயக அரசுகள் ஒடுக்கப்பட்டோரின் உணர்வுகளுக்கு ஆதரவாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆகக் குறைவு என்பதும் தெரியவந்தது.
ஆக்கிரமிப்பு இயக்கத்தில் பங்கெடுத்த மக்களை இடது சாரிகள் எனவோ, சோஷலிசம் பேசுபவர்கள் என்றோ அவர்களுக்கு நிறம் பூசிவிட முடியாது. குறிப்பாக, நியூயார்க்கில் உள்ள சுக்கோட்டி பூங்காவில் பங்கெடுத்த மக்கள் தகவல் தொழில்நுட்பத்தில் திறன் கொண்ட (எனவே பூங்காவில் இலவச இணையம் சாத்தியமானது) இளைஞர்கள்.
இந்த இயக்கத்தில் பங்கெடுத்தவர்களில் பெரும்பான்மையோர் அரசு அதிகாரத்தின்மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்தவர்கள். அந்த அரசு வலது சாரியாக இருக்கலாம் அல்லது இடதாக இருக்கலாம். முதலீட்டியத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கிய அமெரிக்க (குறிப்பாக), ஐரோப்பிய சமூகத்தின் இளைஞர்கள் பலருக்கும் கம்யூனிசப் புரட்சிக் கனவெல்லாம் கிடையாது.
என்னைப் பொறுத்தவரையில், ஆக்கிரமிப்பு இயக்கம் தீயாகப் பரவியதற்கு இரண்டு காரணங்கள்… 2008ஆம் ஆண்டின் பொருளாதார நசிவுக்குப் பிறகு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் வீதிக்கு வந்தபோது ஏற்பட்ட கோபம் (indignation). இது அரசியல் போராட்டத்தையும் தாண்டி தன்மானம் காக்கக்கூடிய கூட்டம். துனிசியாவில் தீக்குளித்த மொகம்மத் அபௌசிக்கு அரசியல் கருத்தாக்கம் பற்றிய தெளிவு இருந்ததா என்று தெரியாது. ஆனால், அவருடைய வியாபார பொருள்களும், உடைமைகளும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டபோது நேர்ந்த அவமானம், தன்மான உணர்ச்சி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்.
அவமதிப்பு, இகழ்ச்சி, அசிங்கப்படுத்துதல், கண்ணியம் இழத்தல் (loss of dignity) இவையெல்லாம் சமமின்மையின் உளரீதியான விளைவுகள். இன்றைய உலகில் ஏற்பட்டுள்ள சமமின்மை சமூகத்தில் ஏற்படுகின்ற இப்பிரச்னைகள் ஒரு மனிதனை நடைப்பிணமாக்கும் தன்மைகொண்டது. இது அரசியல் உரிமை தாண்டிய உளரீதியான தாக்குதல். இதன் விளைவாகவே, மனநலன் பாதிப்பு உலகெங்கும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு இயக்கத்தில், வலது/இடது அரசியல் கருத்தாக்கத்தை மீறி, தனி மனித கண்ணியமும், தன்மானமும் அரசினாலும், முதலீட்டியத்தினாலும் தொடர் தாக்குதலுக்கு உள்ளாவதை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போராட்டமாகவே நான் பார்க்கிறேன்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸில் உள்ள பேராசிரியர் ஹார்ட்லி டீன் எழுதிய சமூக உரிமைகளும், மனித நலன்களும் (Social rights and human welfare) என்ற ஆய்வுப் புத்தகத்தில் தனி மனித கண்ணியத்தையும், தன்மான உணர்வுகளையும் சமூக உரிமைகளாக அங்கீகரிக்கும் ஒருதளமாக, ஆக்கிரமிப்பு இயக்கம் இருந்தது எனக் குறிப்பிடுகிறார். 2008-க்குப் பிறகு ஏற்பட்ட சமமின்மையினால் ஏற்பட்ட முக்கிய விளைவு, வறுமை மட்டுமல்ல; அவமானம், இகழ்ச்சி, கண்ணியக் குறைவு என்றும் வாதிடுகிறார்.
இத்தன்மையை நம் உள்ளூர் நிலைமையுடன் பொருத்திப் பார்க்க முடியும். இந்தியாவில் தொடர்ந்து நடந்துவரும் சாதி ஒழிப்பு, தலித் விடுதலைக்கான போராட்டங்கள் இடது, வலது என்ற இருமைகளுக்குள் ஒடுக்கிவிட முடியாது. அதற்கான காரணம் சாதி ஒழிப்பு, தலித் விடுதலை என்பது தன்மானம் பற்றியது, தனிமனிதர் கண்ணியத்துடன் வாழும் உரிமை கோருவதாகும். இதனாலேயே தத்துவவியலாளர் அண்ணல் அம்பேத்கர், சாதி ஒழிப்புக்கு உலகளாவிய மனிதத்துவம் (Universal Humanism) என்னும் கோட்பாட்டை வலியுறுத்தினார். இச்சிந்தனை இடது, வலது கருத்தாக்கத்தினை நிராகரிப்பதாக ஆகாது. ஆனால், அதற்கு அப்பாற்பட்டது. ஆக்கிரமிப்பு இயக்கமும் அப்படிப்பட்டதே. மிகுந்த நெகிழ்வோடும், மனிதாபிமானத்தோடும், ஒருவருக்கொருவர் உதவி செய்யும் இயக்கமாக பரிணமித்தது.
ஆனால், புரட்சிகரமான தனிமனித வேட்கைகொண்ட இந்த இயக்கம் அதிகாரத் தலைமை இல்லாது இயங்கியதால், மேற்குலக அரசினால் எளிதாக நசுக்க முடிந்தது. அமெரிக்க தாராளவாத முற்போக்குவாதியான் மால்கம் க்ளாட்வெல், ஆக்கிரமிப்பு இயக்கம் வலுப்பெற வேண்டுமானால் இன்னும் தந்திரம் தேவை (needs to be more machiavellian) என்று குறைபட்டுக் கொண்டார்.
சமமின்மைக்கு எதிராக புள்ளி விவரங்களையும், எண்களையும் கொண்டு வாதாடுவது பண்டிதத்தனம். ஆனால், சமமின்மையின் வலி உணர்ச்சிபூர்வமானது. மான உணர்வு சம்பந்தப்பட்டது. இந்த உணர்வுக்கு வலது, இடது எல்லாம் கிடையாது.
ஆக்கிரமிப்பு இயக்கம் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால் அவ்வியக்கத்தின் எழுச்சிக்கான காரணங்கள் நியாயமானவைகளாகும். வறுமைக்குள்ளாக்கப்பட்ட குடிமக்கள் தங்களது கோபங்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதிலும் மாற்றமில்லை. அமெரிக்கா பிரிவினைவாத ட்ரம்பை தலைமையாகத் தேர்ந்தெடுத்தது. ஐக்கிய ராஜ்ஜியம் சோஷலிசவாதி கோர்பினுக்குப் பின் திரள ஆரம்பித்திருக்கிறது. இதற்கு மாற்று வழி, பாசிசம். எனவேதான் மேற்கில் உள்ள இன்றைய அரசியல் சூழலை கூர்ந்து கவனிக்க வேண்டியதாகிறது.
கட்டுரையாளர்: முரளி சண்முகவேலன்
ஊடக மானுடவியலாளர். லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[கட்டுரை 1. ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?]
[கட்டுரை 2. நரி வேட்டை அரசியல்]
[கட்டுரை 3. மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்]
[கட்டுரை 4. திறனாளர்களும் தொழிலாளர்களும்]