கட்டுரை 6. அவுட்சோர்சிங்
ஒரு சிறிய விளக்கம்: இந்த மினி தொடர் நேர் கோட்டில் செல்லாமல், முன்னும் பின்னும் தள்ளாடுவதாக நினைத்தால், அதற்கு இரண்டு காரணம் உள்ளது: ஒரு பொருளை (subject) விளக்க முற்படும் போது அதோடு தொடர்புள்ள மற்ற நிகழ்வுகளையும், விளக்கங்களையும் (events and analysis) அளிக்க முற்படுவது முதல் காரணம்; இத்தொடரில் அலசப்படும் அரசியல் பொருளாதாரப் பொருள்கள் ஐக்கிய ராச்சியம் தாண்டி மற்ற அரசியல் சூழலுக்கும் பொருந்தும் போது அவைகளின் அரசியல்களையும் முடிந்த அளவுக்கு தொட்டுச் சொல்ல விரும்புவது மற்றொரு காரணமாகும்.
இது வரை: உலகமயமாக்கம், நிதி மற்றும் தகவல் தொடர்பு முதலீட்டியப் பெருக்கம் – என்பன நவதாராளப் பொருளாதாரக் கொள்கையின் இரு பெரும் விளைவுகள். இக்கொள்கைக்கு கிட்டன்ஸின் மூன்றாவது உபாயத்தினால் கோட்பாட்டு அந்தஸ்து கிடைத்தது. கிட்டன்ஸின் சிந்தனைகள் சமூகப்பிரக்ஞை கொண்ட ஜனநாயகத்திற்காக வாதாடினாலும், நாளடைவில் அரசியல்வாதிகள் மேலாளர்களைப் போல நடந்து கொண்டனர். அதே சமயத்தில் முதலாளிகளோ சமூகத் தலைவர்களாக (பில் கேட்ஸ், ஜார்ஜ் சொரோஸ்); உலகைப் பிணைக்கும் அமைதி விரும்பிகளாக (கூகிள், மார்க் ஜூக்கர்பெர்க்) அறியப்பட்டார்கள். தொடர்ந்து அங்கீகரிக்கப் படுகிறார்கள்.
உலகமயமாக்கத்தினால் விளைந்த ஒரு முக்கியமான நிகழ்வு அவுட்சோர்சிங் எனப்படும் உத்தி. இந்த சொல் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மட்டும் தொடர்புடையதல்ல. தொழிலாளர்களின் உழைப்பை உலகெங்கும் சுரண்டியதில் அவுட்சோர்சிங் என்று சொல்லப்படும் ஒப்பந்தப் பணிக்கு சம்பந்தமுண்டு.
ஒரு முதலாளி – பொருள் அல்லது சேவை சார்ந்த உற்பத்தியைப் பெருக்குவதற்கு இரண்டு வழிகள் உண்டு: ‘உற்பத்தியை’ வெளியில் இருந்து வாங்குவது. அல்லது தொழிலாளர்களை தனது வளாகத்துக்குள் பணிக்கு அமர்த்தி, அவர்களை உற்பத்தி செய்ய வைப்பது. மேற்கு நாடுகள் இயந்திரம் சார்ந்த உற்பத்திகளை (industrial production) 1990-களில் வளரும் நாடுகளுக்கு அளித்தது.
லஞ்சப் பணத்தில் ஊறித் திளைத்த அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள்; தொழில் வளர்ச்சி இல்லாத அரசு பொதுத் துறை; லைசன்ஸ் ராஜ்ஜியத்தால் தொழில் முனைவோருக்கு ஏற்ற சூழ்நிலை இல்லாத நிலை என பல்வேறு தன்மையால் – வளர்ச்சியின்றி வறுமையில் இருந்த வளரும் நாட்டைச் சேர்ந்த குடிமக்களுக்கு இந்த உற்பத்தி வாய்ப்பு பொன்னான ஒன்றாகத் தெரிந்தது என்பதில் பிழையல்ல.
வேலையில்லாத் திண்டாட்டத்தினால், பொருள் வளர்ச்சியின்றி இருந்த சமூகத்திற்கு உலகமயமாக்கத்தினால் விளைந்த பொருளாதார வாய்ப்புகள் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆரம்ப காலத்தில் பேருதவியாக இருந்தது என்பதில் மறுப்பதற்கில்லை. இன்னும் லட்சக்கணக்கானோர் பலன் பெற்று வருகின்றனர். இது நிகழ்ந்த சமயத்தில் மேற்கில் உள்ள வளரும் நாடுகளில் உள்ள உற்பத்தித்துறைகள் அவர்களின் நாட்டை விட்டு பெருவாரியான அளவில் நகரத் தொடங்கின. ஒரு எடுத்துக்காட்டின் மூலம் இதைப் பார்க்கலாம்.
ஆடை (ரெடிமேட்) தயாரிக்கும் துறையை எடுத்துக் கொள்வோம். தொழிலாளர்களின் ஊதியக் குறைவினால் வளரும் நாடுகளுக்கு இத்தொழிற்சாலைகள் பெருவாரியான அளவில் கொண்டு செல்லப்பட்டது. தேவைப்பட்டால், வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் புதிய இயந்திரங்கள், அவற்றை இயக்குவதற்கு தேவையான பயிற்சிகள் எல்லாம் கூட ஆரம்பகாலத்தில் வழங்கப்பட்டன.
உலகிலேயே அதிக அளவு துணிகளை உற்பத்தி செய்து உலகெங்கும் ஏற்றுமதி செய்வதில் வங்காளதேசம் ஆறாவது இடத்தில் உள்ளது. வங்காளதேசம், தனது ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 82 சதவிகிதம் (28.1 பில்லியன் அமெரிக்க டாலர்), வருவாயும் ஆடை ஏற்றுமதி மூலம் கிடைக்கிறது. ஏறத்தாழ தமிழ்நாடு போன்ற பரப்பளவு கொண்ட வங்காளதேசம் (மக்கள் தொகையோ 16 கோடி) ஆடை உற்பத்தியில் உலகத்திலேயே ஆறாவது நாடாக இருப்பது முற்றிலும் மகிழ்ச்சியான செய்தியல்ல. எப்படி என்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
நாட்டின் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உற்பத்தியும் ஒரே துறையை நம்பி இருப்பது ஆபத்தானது. அத்துறையில் சந்தைத் தேவைகள் மாறுபட்டால் வங்கப் பொருளாதாரம் சரிவிற்கு சென்றுவிடும். எனவே அங்கு திறமைகளைப் பெருக்க வேண்டும் (diversification of skills).
ஆனால் அது நடக்காமல் இருக்கக் காரணம், வங்கத் தயாரிப்புகள் விலைக் குறைவாக இருப்பதால் பெருவாரியான நாடுகளில் உள்ள உடை ‘தயாரிப்பு’ நிறுவனங்கள் வங்கதேசத்திற்கே தனது ஆர்டர்களை வழங்குகிறது. வறுமையில் உள்ள வங்கமோ இந்த சந்தைத் தேவையை ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறது.
இப்படிச் செய்வதின் மூலம் ஒரு தேசத்தின் ஒட்டு மொத்த உற்பத்தித் திறமையை ஒரே துறைக்குள் உலகமயமாக்கம் முடக்குகிறது. அது மட்டுமல்ல, அதிக அளவு உடைத் தயாரிப்பினால் ஒரே வகையான திறன் கொண்ட தொழிலாளர்களை கடந்த இருபது ஆண்டுகளாக அத்தேசம் உருவாக்கி வைத்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பு அவர்களுக்குள்ளேயே போட்டிகளை அதிகரிக்கச் செய்கிறது. இந்தப் போட்டியினால் குறைந்த ஊதியத்தில் அவர்களை வேலைக்கு அமர்த்தி உழைப்பைச் சுரண்டுவதற்கு உள்ளூர் அதிபர்களுக்கு எளிதாகிறது.
நான் டாக்காவில் ஒரு வருடம் வேலை பார்த்த போது, ஒரு முறை ஒரு ஆடைத் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்ற போது அவர்கள் அர்மானி நிறுவனத்திற்கு ஆடை தயாரித்துக் கொண்டிருந்தார்கள்! விலை மதிப்புள்ள உலக பிராண்டு ரகங்களில், அர்மானியும் ஒன்று. அது மட்டுமல்ல: ரால்ஃப் லாரன், ஹுயுகோ பாஸ், பனானா ரிபப்ளிக்; மத்திய தர வரிசையில் உள்ள கேப், கால்வின் க்ளெயின், ஆகக்குறைவான விலையில் மேற்கில் விற்கப்படும் ரகங்களான வால்மார்ட், டார்கெட், ப்ரிமார்க் – என அனைத்து வகையான ஆடைகளும் வங்கத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆனால் அர்மானி கோட் தைத்தாலும் சரி; வால்மார்ட் ப்ராண்ட் கோட் தைத்தாலும் சரி – உள்ளூர் தொழிலாளிக்கு என்னவோ ஒரே ஊதியம் தான் கொடுக்கப்படும். அவர் மறுத்தால் அந்த இடத்தை நிரப்ப மற்றொரு தொழிலாளி வாசலுக்கு வெளியே காத்திருப்பார். ஆடைத் தயாரிப்பு தொழில் ‘செழித்ததன்’ விளைவாக தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகமானது தொழிலதிபர்களுக்கு சாதகமாகி விட்டது.
இங்குள்ள தொழிலாளர்களுக்கு அநேக தொழிற்சாலைகளில் எந்த விதமான அடிப்படை வசதியும் இருக்காது. 2013ஆம் ஆண்டில் டாக்காவிற்கு வெளியே உள்ள ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையான ரானா பிளாசாவின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 1,134 பேர் இறந்ததாகச் சொல்லப்பட்டது நினைவிருக்கலாம் (2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக அரசு சொல்லியது). தொழிலாளர்களுக்கு இப்படிப்பட்ட நச்சுச் சூழலை உருவாக்குவது உலகமயமாக்கத்தின் மூலமாக வருகிற இப்படிப்பட்ட வேலை வாய்ப்புகள் என்றால் மிகையல்ல.
அதுமட்டுமல்ல இம்மாதிரியான தொழிலாளர்களும் ஒப்பந்த ரீதியில் பணியமர்த்தப்படுவதால் இவர்களை எந்நேரமும் வீட்டுக்கனுப்ப முடியும். உதாரணமாக அர்மானியின் உடைகளை வாங்கி விற்கும் ஒரு சூப்பர் மார்க்கெட் தனது ஆர்டரை குறைத்துக் கொண்டால், அது வங்கதேசத்திலுள்ள தொழிலாளரை உடனடியாகப் பாதிக்கும். சிரிபெரும்புதூரில் உள்ள நோக்கியா மொபைல் நிறுவனம் மூடப்பட்டதற்கு காரணம், மைரோசாஃப்ட் தனது ஒப்பந்தத்தை கேன்சல் செய்ததுதான்.
இப்போது வங்க தேச ஆடைத் தயாரிப்பு மேற்கில் உள்ள தொழிலாளர்களை எப்படிப் பாதிக்கிறது என்று பார்க்கலாம்.
ஐக்கிய ராச்சியம் உள்ளிட்ட மேற்கு ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் ஆடை தயாரிக்கும் நிறுவனங்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கிறது. இப்படிப்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கும் ஆடையை சாமானியர்கள் வாங்க முடியாது. எனவே ஐக்கிய ராச்சியத்தில் உடுத்தப்படுகிற 95 சதவீத ஆடைகள் ஏதோ ஒரு வளரும் நாட்டில் (மத்திய, கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட) செய்யப்பட்டது என்றால் மிகையல்ல.
தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம், ஐக்கிய ராச்சியத்தில் அதிகமாக இருப்பதால் (பணத்தின் மதிப்பும் முக்கியக் காரணம்), முதலாளிகள் ஆடைத் தயாரிப்பு தொழில்களை வெளியே கொண்டு சென்று விட்டனர். ஒரு வேளை உள்ளூரில் தயாரிக்கும் பட்சத்தில், வெளியில் இருந்து குடியேறியவர்களை பணிக்கு அமர்த்துவதிலேயே இங்குள்ள முதலாளிகளும் ஆர்வம் செலுத்துகின்றனர்.
குடியேறிகளுக்கு பொருளாதார சந்தர்ப்பம் மிக முக்கியம் என்பதால் குறைவான ஊதியத்திற்குத் தயாராக உள்ளனர். இதன் விளைவு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வரும் போலந்து, பல்கேரியா நாட்டு குடியேறிகளையே உள்ளூர் முதலாளிகள் விரும்புகின்றனர். மேலும், உரிமை கேட்டு இக்குடியேறிகள் போராடுவதில்லை.
வங்க தேசத்தில் ஆடைத் தயாரிப்பு தொழிலாளிகளில் அளவுக்கதிகமான எண்ணிக்கையினால் ஏற்படுகிற ஊதியப்போட்டியில் அவர்களுக்கு கேடு விளைவதைப் பார்த்தோம். அது போல, ஐக்கிய ராஜ்ஜியம் போன்ற சமூகத்தில் கிட்டத்தட்ட இரு தலைமுறைகளாக இத்தொழிலே செய்யாததினால், ஆடை தயாரிப்புக்கான திறன் உள்ள தொழிலாளர் இல்லாமல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. உதாரணமாக, துணி வெட்டுபவர்கள் (cutters) இப்போது ஐக்கிய ராச்சியத்தில் மிகக் குறைவு. இங்குள்ள பல பாலிடெக்னிக்குகளில் துணி வெட்டுவதைப் பாடமாக சொல்லிக் கொடுப்பதை நிறுத்தி பல வருடங்களாகி விட்டது. உலகமயமாக்கலில் இத்தொழிலுக்கான தேவை இல்லாமல் போனதே காரணமாகும்.
இது ஆடைத் தயாரிப்புக்கு மட்டுமல்ல, மற்ற துறைகளுக்கும் பொருந்தும். எனவே மேற்குலகில் உற்பத்தி சார்ந்த உடல்சார் தொழிலாளர்கள் – ஒப்பீட்டளவில் திறன் குறைந்தவர்களாக இருப்பது உலகமயமாக்கத்தின் எதிர்மறை விளைவாகும். எனவே, மேற்கு நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அதிக ஊதியம் கோருபவர்களாகவும், ஆனால் பல துறைகளில் வளரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களை விட திறன் குறைந்தவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வந்தேறி-தொழிலாளர்கள் ஐக்கிய ராச்சியத்தின் வேலை வாய்ப்பைத் தட்டிப் பறித்ததாக கருதினர். அதற்கு ஏதுவாக ஊடகங்களும், உள்ளூர் அரசியல்வாதிகளும் தொழிலாளர்களை, ஏழைகளைத் தொடர்ந்து குழப்பினர்.
வளரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை எதிர்த்துப் பேசினால், அவர்கள் வேலைவாய்ப்புக்கு எதிரானவர்கள் என துரோகப்பட்டம் சூட்டப்பட்டனர். நவதாராள பொருளாதார நிபுணர் ஜகதீஷ் பகவதி, வளரும் நாடுகளில் உள்ள ஒப்பந்த நிறுவனங்கள் பெண்களை இரண்டாம் தரமாக நடத்துவதற்கு உள்ளூர் கலாச்சாரமே காரணம்; உலகமயமாக்கல் வேலை கொடுத்து அவர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறதே ஒழியே வேறோன்றும் செய்யவில்லை என அவருடைய In Defense of Globalisation புத்தகத்தில் வாதாடினார்.
உலகமயமாக்கலின் விளைவாக வளரும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களும் சுரண்டப்பட்டனர் என்பது தான் உண்மை. வளர்ந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்களோ சுரண்டப்பட்டனர்.
மேற்கத்திய நல அரசுகள் ஏழைகளுக்கு வழங்கும் மாதாந்தர நிதி ஆதரவை (financial benefits to the poor) நம்பி வாழும் நிலை அதிகரிக்க ஆரம்பித்தது. ஐக்கிய ராச்சியத்தின் பெருமையின் சின்னமான தேசிய நலச்சேவையில் வேலை செய்யும் நர்ஸுகள் கூட இந்த நிலையில் இருந்து தப்ப முடியவில்லை. தங்களின் மாத வருவாய் போதாமல் ஏழைகளுக்கான அரசின் உணவு வங்கியில் வரிசையில் நின்று இலவச உணவு வாங்கத் தொடங்கியது செய்தியாக வர ஆரம்பித்தது. தொழிலாளர்களை மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களையும் வறுமை விட்டு வைக்கப் போவதில்லை என்பது மிகப் பெரிய பொது விவாதமாக ஐக்கிய ராச்சியத்தில் மாறியுள்ளது.
கட்டுரையாளர் குறிப்பு :
முரளி சண்முகவேலன், ஊடக மானுடவியலாளர்.
லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[கட்டுரை 1. ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?]
[கட்டுரை 2. நரி வேட்டை அரசியல்]
[கட்டுரை 3. மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்]