கட்டுரை 11. அடுத்த தேர்தல் வரை
பிரிட்டனின் லேபர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின், இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால், பழமைவாத – கன்சர்வேட்டிவ் கட்சியின் அஸ்திவாரத்தை அசைத்துள்ளார். இந்த மினி தொடர், அடிப்படையில், பிரிட்டனின் அரசியல் பொருளாதாரம் பற்றி இருந்தாலும் – இத்தொடரில் அடையாளம் காட்டப்பட்ட பிரச்சினைகள் என்னவோ பல சமூகங்களிலும் காணப்படுகின்றன.
எனவேதான், பொருளில் ‘வளர்ந்த நாடான’ ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு, ஜெரிமியினால் ஏற்படக்கூடிய மாற்றம் உலகமயமாக்கலில் ஒரு முக்கியத் திருப்பமாக ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆகவே பிரிட்டனில் நடக்கும் இந்த மாற்றத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக ஃப்ரான்ஸ் போன்ற நாடுகள் சோஷலிச கொள்கையிலிருந்து நகரும் நிலையில் பிரிட்டன் சோஷலிசப் பாதையை தேர்ந்தெடுக்கக்கூடிய வாய்ப்பானது உலகில் உள்ள அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
ஆனால் இது எளிதல்ல. உதாரணமாக, கோர்பின் ரயில் போக்குவரத்தை தேசியமயமாக்குவேன் என சொல்லியுள்ளார். ரயில் போக்குவரத்தின் முதலாளிகள் நீதிமன்றத்துக்கு செல்வர். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து முதல் போட்டவர்கள் உலக வர்த்தக நிறுவனத்திடம் முறையிட வாய்ப்புள்ளது.
எனவே கோர்பினின் வாக்குறுதிகள் எந்த அளவு விரைந்து செயல்படுத்தப் படமுடியும் என்பதை இப்போதே சொல்லி விட முடியாது.
கோர்பினின் எழுச்சி சொல்லும் பாடம் என்ன?
இளைஞர்களின் விரக்தி. உலகமயமாக்கப்பட்ட முதலீட்டியத்தினால் பலனடைந்தவர்கள் இப்போது நடுத்தர அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் (நிதி முதலீட்டியத்தினால் பலனடைந்தவர்களை இங்கு சேர்க்கவில்லை). இன்றைய பிரிட்டனில் ஒரு இளைஞர் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து வெளியே வரும் போது குறைந்த பட்சம் 50,000 பவுண்டு (ஏறத்தாழ 40 லட்சம் ரூபாய்) கடனோடு தான் பல்கலைக்கழகத்திலிருந்து வருகிறார். பெற்றோர்கள் இங்கே கல்விப் படிப்புக்கு பொருள் உதவி அளிப்பது என்பது மிக அரிது. ஆனால் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் பல்கலைக்கழக படிப்பு அனைவருக்கும் இலவசம். உலகமயமாக்கலின் விளைவாக, திறன் சார் வேலை வாய்ப்பு பெருகி வரும் சூழ்நிலையில் கிட்டத்தட்ட ஒரு தலைமுறையில் மிகப் பெரும்பான்மையோர் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி சென்றால் 40 லட்ச ரூபாய் கடனில் தங்களது வாழ்க்கையை தொடங்க வேண்டியுள்ளது. இது இங்குள்ள இளைஞர்களை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கி இருக்கிறது.
கடந்த தேர்தலில், 18இலிருந்து 24வரைக்குள்ளான வாக்களித்த இளைஞர்களில், 62 சதவீதம் பேர் ஜெரிமிக்கு வாக்களித்ததாக கணிப்புகள் கூறுகிறது. பொதுவாகவே இளைஞர்களின் அரசியல் கவனிப்புகள் சில ஆண்டுகளாகவே அதிகரித்திருப்பதாக பல வாக்கெடுப்புகள், கணிப்புகள் தெரிவித்த வண்ணம் உள்ளன (அமெரிக்காவிலும் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. விளைவுகள் வேறு!).
இரண்டாவதாக உலகமயமாக்கல், நிதி முதலீட்டியத்தின் சமமின்மை, மற்றும் முரண் விளைவுகளின் தாக்கம் பொருளாதாரத்தைத் தாண்டி தனிமனிதனின் இருப்பையே பாதிக்க ஆரம்பித்திருக்கிறது. இது முன்னெப்போதையும் விட ஐக்கிய ராச்சியத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. அரசாங்கத்தின் அல்லது நிதிமுதலீட்டியக் கொள்கையின் காரணமாக – ஒரு சமூகமே மன அழுத்தத்திற்கு உள்ளாவதை ஊடகங்களும், கொள்கையாளர்களும் ஒத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். இது குறிப்பாக இளைஞர்களை பாதிக்க ஆரம்பித்துள்ளது. வெற்றி பெற்றால், மனநல மருத்துவத்துக்கு திட்டவட்ட நிதியை ஒதுக்குவதாக உறுதி அளித்திருப்பது – ஒரு சமூகத்தின் ஒட்டு மொத்த மன அழுத்தப் பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக அங்கீகரித்திருப்பதையே காட்டுகிறது.
இன்றைய அரசியல் சூழ்நிலை தொடருமானால், வருகின்ற தேர்தலில் ஜெரிமியின் தலைமையில் ஆட்சி அமைய ‘வாய்ப்பிருக்கிறது’. தன்னால் முடிந்த அளவுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிப்பார் என எதிர்பார்க்கலாம். ஆனால் ப்ரெக்ஸிட் பேச்சு வார்த்தைகளில் ஜெரிமியின் செயல்பாடு அவரின் வெற்றி தோல்வியைப் பாதிக்கலாம்.
மாற்றங்களை நோக்கி பிரிட்டன் நகருவதாக தோன்றினாலும், உலகமயமாக்கலின் அடிப்படைத் தன்மை ஒன்று மாறுவதாகத் தெரியவில்லை.
பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகிய வளர்ந்த நாடுகளில் நுகர்வுத்தன்மை என்பது குறைந்தபாடில்லை. வருடத்திற்கு வருடம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அதாவது வளர்ச்சியும், உடனடி மகிழ்ச்சியும் நுகர்வுத்தன்மையின் அளவினைக் கொண்டே தீர்மானிக்கப்படுமாறு ஊடகங்கள், பொதுக் கொள்கைகள் நமக்கு அறிவுறுத்தி வருகிறது. இது மாறாதவரை சமமின்மை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இந்த சவால் ஒருபுறம் இருந்தாலும், பிரிட்டனின் அரசியலில், ஜெரிமியின் எழுச்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரம், பிரிட்டனின் இளைஞர் சமுதாயம் சோஷலிசத்தின் மறுமலர்ச்சியை விரும்புவதைக் காட்டுகிறது. மேற்கத்திய இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வற்றவர்கள் என்ற நிலையை மாற்றி அவர்களை தேர்தலில் பங்கெடுக்க வைத்ததே ஜெரிமியின் முக்கியமான ஆரம்ப நிலை வெற்றியாகும். இந்த வெற்றி அவரின் தலைமைக்கு வழி வகுக்குமா என்பது அடுத்த தேர்தலில் தான் தெரிய வரும்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன்
ஊடக மானுடவியலாளர், லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[கட்டுரை 1. ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?]
[கட்டுரை 2. நரி வேட்டை அரசியல்]
[கட்டுரை 3. மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்]
[கட்டுரை 4. திறனாளர்களும் தொழிலாளர்களும்]
[கட்டுரை 5. அரசியல் மேலாளர்கள், தொழில் தலைவர்கள்]
[கட்டுரை 7. ஆக்கிரமிப்பு இயக்கம்]
[கட்டுரை 8. மனநலன் என்னும் பண்டம்]
[கட்டுரை 9. மனநலன் என்னும் பண்டம் (தொடர்ச்சி)]
கட்டுரை 10. [வாக்ஸ்ஹால் சொல்லும் பாடம்]