கட்டுரை 10. வாக்ஸ்ஹால் சொல்லும் பாடம்
2013 ஜனவரி 16ஆம் தேதி லண்டன் நகரினுள் தேம்ஸ் நதிக்கரையினை ஒட்டி இருக்கும் எம்ஐ சிக்ஸ் (MI6) என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ரகசிய உளவு அமைப்புக்கு அருகில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்தது. இந்தப் பகுதி வாக்ஸ்ஹால் என்று அழைக்கப்படுகிறது. Vauxhall என்பது ருசிய மொழியின் வொக்சால் (vokzal) என்னும் சொல்லிலிருந்து வருகிறது. இதற்கு ரயில் நிலையம் எனப் பொருள்.
ஜனவரி மாதங்களில் லண்டனில் பனிமூட்டம் மிக அதிகமாக இருக்கும். பகல் 9 மணி வரை 4 அல்லது 5 டிகிரி இருப்பது ஒன்றும் அசாதாரணமானதல்ல. அதிக அளவில் தொழில்நுட்ப வசதி உள்ள விமானங்களே மிகக் கவனமாக ஏறி இறங்க வேண்டும். ஆனால் மிக லகுவாக ஹெலிகாப்டரை நகருக்குள் ஓட்டி வந்த விமானி எம்ஐ சிக்ஸுக்கு அருகில் உள்ள பாட்டர்சீ பூங்கா அருகில் இறக்க யத்தனித்தார். அப்போது ஹெலிகாப்டரின் கத்தி, அருகே உள்ள ஒரு கட்டிட வேலைக்காகப் பொருத்தப்பட்டிருந்த ஒரு ராட்சத க்ரேனுடன் உரசி உடனேயே தீ விபத்தாக மாறியது. விமானியும், காலை வேளையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரும் அங்கேயே மாண்டனர். கிட்டத்தட்ட 12-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படு காயமுற்றனர்.
பனி மூட்டம் மிகுந்த ஜனவரி மாதக் காலையில் ஒரு ஹெலிகாப்டரின் அவசரப் பயணத்திற்கான காரணம்: எம்ஐ சிக்ஸ் அருகில் உள்ள புனித ஜார்ஜ் டவர் (St. George Wharf Tower) என்ற செல்வந்தர்கள் வசிக்கும் அடுக்கு மாடியில் குடியிருக்கும் ரிச்சர்ட் கேரிங். அவர் அன்று வேலை நிமித்தமாக அவசரமாகச் செல்வதற்காக அன்று அவர் ஹெலிகாப்டரை வரச் சொல்லியிருந்தார். அதாவது, நாம் அவசர வேலைக்கு ஆட்டோ பிடிப்பதைப் போல. ரிச்சர்ட் உலகெங்கும் உள்ள நட்சத்திர சிற்றுண்டி நிலையத் தொடர்களின் அதிபர்.
இந்த விபத்து செய்தியாகப் பரவிய பின்னர் லண்டன்வாழ் வாக்ஸ்ஹால் மக்கள் எழுப்பிய ஒரு கேள்வியும், வாக்ஸ்ஹால் சொல்லும் சேதியும் இந்தத் தொடரின் இறுதிக் கட்டத்திற்கு முக்கியம். வாக்ஸ்ஹாலில் எழுப்பப்பட்ட புனித ஜார்ஜ் டவர் கட்டிடத்தாலும், அதில் வசிப்பவர்களாலும் வாக்ஸ்ஹாலுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று மக்கள் எதிர்ப்புக் குரலெழுப்பினர். இது வெறும் விபத்து பற்றி மட்டுமோ, செல்வந்தர்களின் மேல் எழுந்த பொறாமை கலந்த காழ்ப்புணர்ச்சியினாலோ எழுந்த விமரிசனம் அல்ல. ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
வாக்ஸ்ஹால் லண்டன் நகரின் மையப்பகுதியில் இருந்தாலும், அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோனோர் அரசு வீடுகளில் வசிக்கும் (நம்மூர் வீட்டு வசதி வாரிய வீடுகள் போல) நடுத்தர அல்லது ஏழை மக்கள். வாக்ஸ்ஹாலில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டிருப்பதால், அரசு புதிய வீடுகளைக் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் வாக்ஸ்ஹாலில் (மற்ற இடங்களிலும்) எழுந்த வண்ணம் உள்ளது. லேபர் கட்சியைச் சேர்ந்த லண்டன் மேயர் உள்படப் பல அரசியல்வாதிகளும் இந்தக் கருத்தினை ஆதரித்துப் பேசிவருகின்றனர்.
ஆனால் ரிச்சர்ட் கேரிங் போன்றவர்கள் இருக்கும் புனித ஜார்ஜ் டவர் வாக்ஸ்ஹாலினுள் உள்ள ஒரு தனி உலகம். தனித் தீவு. வீட்டு ஜன்னல் வழியாகப் பாராளுமன்றத்தைக் கண்டு களிக்கலாம். இந்த அடுக்கு மாளிகை 214 வீடுகளைக் கொண்டது. இங்குள்ள வீடுகளின் மதிப்பு இரண்டு கோடியிலிருந்து, ஐம்பது கோடிவரை. முன்னாள் நைஜீரிய மந்திரி, குர்டிஷ் நாட்டைச் சேர்ந்த பெட்ரோலிய எண்ணெய் முதலாளி, எகிப்தியத் தொழிலதிபர், இந்தோனேஷிய வங்கி அதிபர், உருகுவேயேயைச் சேர்ந்த கால்பந்து கிளப்பின் மேனேஜர், ஃபார்முலா ஒன்றின் பந்தயக் காரோட்டி, கிரிக்ஸ்தானைச் சேர்ந்த வோட்கா நிறுவனமொன்றின் முதலாளி என உலகத்தின் பல பகுதிகளில் உள்ள செல்வந்தர்கள், அரசியல்வாதிகள், நிழல் ஆயுத வியாபாரிகள், தரகர்கள் போன்றவர்கள் இங்கே தங்களது பணத்தை இவ்வீடுகளில் முதலீடு செய்திருப்பது ஊடகங்களிலும், பொது வெளியிலும் ஒரு விவாதமாக வெடித்தது; பின்னர் அவ்விவாதம் பிசுபிசுத்தும் போனது.
மொத்த வீட்டு முதலாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டினர் என்றும், கிட்டத்தட்ட 180-க்கும் மேற்பட்ட வீட்டினர் தங்கள் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை எனவும் [கார்டியன்](https://www.theguardian.com/society/2016/may/24/st-george-wharf-tower-london-luxury-pads-emblematic-housing-crisis) புலன் அறிந்து செய்தியாக வெளியிட்டது. அதாவது கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்ட இவ்வீடுகள் பாதிக்கும் மேல் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன என்ற செய்தியும் வெளியானது. அதாவது, லண்டன் பெருநகர வீடுகள் உலகெங்கும் உள்ள செல்வந்தர்களின் பணத்தைக் காப்பாற்றிட ஒரு சூதாட்டக் களமாக மாறியுள்ளன என்றால் மிகையாகாது.
என்னுடைய நண்பர் ஒருவர் பன்னாட்டு இணைய நிறுவனத்தின் ஐக்கிய ராச்சிய அலுவலகத்தின் தலைவராக இருக்கிறார். அவர் புதிதாக வாங்கிய வீட்டுக்கு நான் சென்றபோது, அவர் சொன்ன தகவலைக் கேட்டுத் தலை சுற்றியது: “இந்தப் பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்றால், கையில் ‘ரொக்கமாக’ காசு வைத்திருக்க வேண்டும். வங்கிக் கடன், மற்றவர்களிடம் வாங்கிக் கொடுப்பது எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. காசோலையாக இருந்தால் அதற்கு கமிஷன் பிடித்துக் கொள்ளப்படும்(!). எனக்கு வீடு பிடித்தது. மாலையில் ரொக்கத்தைக் கொடுத்தேன். இரண்டு நாளில் வீடு என் கையில்.” வீட்டின் மதிப்பு 5 மில்லியன் (ஐந்து கோடி ரூபாய்). வீடற்றவர்கள் ஒரு பக்கம் அதிகமாகும்போது, மறுபக்கம் உலகச் செல்வந்தர்கள் லண்டனை சாமானியர்கள் வசிக்க முடியாத இடமாக ஆக்கிவருகின்றனர்.
ஜான் லங்காஸ்டர் என்னும் ஒரு நாவலாசிரியர், இந்த வாக்ஸ்ஹாலின் வசிக்கும் ஒரு பிரஜை. வாக்காளர். சமூகப் பிரக்ஞை உள்ள ஒரு ஆசாமி. ஐக்கிய ராச்சியத்தின் தேர்தலுக்கு முன்னர், வாக்ஸ்ஹால் பாராளுமன்றத் தொகுதியின் வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு கட்டுரை எழுதினார்.
வாக்ஸ்ஹால் பாராளுமன்றத் தொகுதி ஐக்கிய ராச்சியத்தின் பொருளாதார நசிவுகளைப் பிரதிபலிக்கும் ஒரு தொகுதி என ஜான் கூறினார். வாக்ஸ்ஹால் தொகுதி வாக்காளர்கள் அரசாங்க வீட்டு வசதிகளை நம்பி உள்ளனர், எனவே அரசு வீடுகள் தேவை. அதே சமயத்தில் நாட்டிலேயே மிக அதிகமான பொருட் செலவில் வீடு கட்டும் திட்டமும் (புனித ஜார்ஜ் டவர்) வாக்ஸ்ஹாலில் தான் நடைபெற்றுவருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் அளவில் முதலீடும் செய்யப்பட்டுவருகிறது. ஆனால் எழுப்பப்படும் கட்டிடம், அவற்றால் குவியும் முதலீடு, அதனால் ஏற்படும் தற்காலிகமான வேலை வாய்ப்பு என எதுவுமே உள்ளூர் பிரச்சினையைத் தீர்க்காது என ஜான் லங்காஸ்டர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார். இதுவே, சந்தை முதலீட்டியத்தின் கோர முகம். முதலீட்டியத்தின் தன்மையானது, உள்ளூர் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்பது வாக்ஸ்ஹாலில் உள்ள அனைத்து வாக்காளருக்கும் தெரிந்த சேதிதான் என்று கூறுகிறார். 10 கோடி ரூபாய் வீட்டுக்கருகே ஏழைகளின் குடிசை இருப்பது, மும்பையில் மட்டுமல்ல. லண்டன் மாநகரங்களிலும் இந்த முரண் ‘சாத்தியமாகி’ வருகிறது.
இவற்றில் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவெனில் இந்தச் செல்வந்தர்கள் தங்களுக்கான அடுக்கு மாடிகளைக் கட்டிக்கொள்ள ஆதரவளித்தது லேபர் கட்சி என்பதுதான். ஆக வாக்ஸ்ஹால் வாக்காளர் லேபருக்கு ஆட்சியளித்தாலும் சரி, கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களித்தாலும் சரி அவர்கள் நிலை மாறப் போவதில்லை. அதாவது வாக்ஸ்ஹாலில் உள்ள வாக்காளர்களின் வாக்குச் சீட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதையே உலகமயமாக்கமும் சந்தைப் பொருளாதாரமும் காட்டுகிறது. வாக்குரிமை ஜனநாயகம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக விளையாட்டாக மாறிவருவதையே இது காட்டுகிறது.
சந்தைப் பொருளாதாரத்தினாலும் முதலீட்டியத்தினாலும் ஒரு வாக்காளரின் வாக்குக்கு உள்ள அதிகாரம், அவற்றின் செயல்திறன் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்தப்படுகிறது என்பதே கசப்பான உண்மையாகும் (the voter’s agency is in constant decline in a globalised society).
எல்லோரும் விழிப்புணர்வோடு வாக்களித்தால், சமுதாயத்தில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகிவிட்டதோ என அஞ்சும் நிலை வந்துவிட்டது. உலகமயமாக்கப்பட்ட இன்றைய ஜனநாயகத்தில், உள்ளூர் வாக்காளருக்கும் அவருடைய வாக்குக்கும் உண்மையிலேயே அதிகாரம் உள்ளதா என்பது மிக முக்கியமான கேள்வி.
உதாரணமாக, எய்ட்ஸ் நோய்க்கு மருந்து எளிதாகவும் அதிக விலையில்லாமலும் கிடைக்க வழிசெய்ய, பன்னாட்டு வர்த்தக நிறுவனமும் அறிவுசார் சொத்துரிமை சங்கங்களும் மனது வைக்க வேண்டும். இல்லை என்றால் ஏழை நாடுகளால் ஒன்றும் செய்ய முடியாது. உள்ளூர் அரசியல்வாதிகளின் அதிகாரத்துக்கு அப்பால் உள்ள வெளியில் நமது நலன்களும் தீமைகளும் தீர்மானிக்கப்படுகின்றன. இந்தச் சூழ்நிலைகளை ஏற்படுத்தியதில் ஐக்கிய ராச்சியத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பங்குள்ளது. இந்தியாவிலும் இதே நிலைதான். உலகமயமாக்கல் கொள்கைகளில் காங்கிரசுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.
இச்சூழ்நிலையில் ஐக்கிய ராச்சியத்தில் இப்போது வலுப்பெற்று வருகிற, ஜெரிமி கோர்பினின் தலைமையில் உள்ள லேபர் கட்சி தனது வேர்களை மீண்டும் அடையாளப்படுத்தத் தொடங்கியிருப்பது ஒரு ஆரோக்கியமான திருப்பமாகும்.
ஆனால் நுகர்வோர் தன்மையில் அடிமைப்பட்டிருக்கும் ஐக்கிய ராச்சியத்தின் பொருளாதாரத்தை (ஜெரிமியின் தலைமையிலான) சோஷலிசம் மீட்டெடுக்க முடியுமா என்பது ஒரு முக்கியமான சவால். ரயில், தபால் போன்றவை மீண்டும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று ஜெரிமின் கோஷம் போட்டாலும், பல பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை அவரால் எதிர்க்க முடியாது. பன்னாட்டு அரசியல் வர்த்தக உலகைப் பொறுத்தவரையில், ஜெரிமி கோர்பின் வாக்ஸ்ஹால் வாக்காளரைப் போல பலமற்றவராகவே இருக்கும் நிலை ஏற்படும். இது அவரின் மீதான தனிப்பட்ட விமரிசனம் அல்ல. உலகமயமாக்கல் உண்டாக்கியுள்ள ஒரு நச்சு விளைவு.
அதே சமயத்தில் சோஷலிசவாதியாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஜெரிமி, ஐரோப்பிய ஒன்றியத்தினுடன் இணைவதையும் மனமார விரும்புவதாகத் தெரியவில்லை. சமீபத்திய பேட்டி ஒன்றில், ஐரோப்பியக் குடியேறிகளால் பிரச்சினையே ஏற்படவில்லை என்று அறுதியிட்டுக் கூற இயலாது என்று ஒரு குண்டைப் போட்டுள்ளார்.
அது மட்டுமல்ல; அணுகுண்டு, வல்லரசுத் தன்மை கொண்ட அரசியல் இவற்றையெல்லாம் தவிர்த்துத் தேர்தல் அரசியல் செய்ய இயலாது என்பதைப் புரிந்து கொண்ட ஜெரிமி, இப்போதெல்லாம், ஊடகங்களில் ‘நாசூக்காக’ பட்டும் படாமலும் பதில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். எனவே, சோஷலிச அற்புதம் சாத்தியமா என்ற கேள்விக்கான பதில் உடனடியாக எதுவும் தெரியவில்லை. ஆனால், சமூக மாற்றத்தை, ஜெரிமியின் தலைமையில் ஒரு நல்ல துவக்கத்தை உருவாக்க முடியும். அது இந்தியா உள்ளிட்ட மற்ற சமுதாயங்களுக்கு ஒரு முனைப்பாக அமையலாம் என்றே நான் நம்புகிறேன்.
(அடுத்த வாரம் இந்த மினி தொடர் நிறைவுறும்).
கட்டுரையாளர் குறிப்பு: முரளி சண்முகவேலன்
முரளி சண்முகவேலன், ஊடக மானுடவியலாளர்
லண்டனில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் அண்ட் ஆப்பிரிக்கன் ஸ்டடீஸில், சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
[கட்டுரை 1. ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா?]
[கட்டுரை 2. நரி வேட்டை அரசியல்]
[கட்டுரை 3. மூன்றாவது உபாயத்தின் காவலர்கள்]
[கட்டுரை 4. திறனாளர்களும் தொழிலாளர்களும்]
[கட்டுரை 5. அரசியல் மேலாளர்கள், தொழில் தலைவர்கள்]
[கட்டுரை 7. ஆக்கிரமிப்பு இயக்கம்]
[கட்டுரை 8. மனநலன் என்னும் பண்டம்]
[கட்டுரை 9. மனநலன் என்னும் பண்டம் (தொடர்ச்சி)]