”ராசாவின் கருத்து முதல்வரின் மருமகனுக்கும் பொருந்துமா..?” – எடப்பாடி கேள்வி!

அரசியல்

இந்துக்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளை கூறியுள்ள திமுக எம்பி ஆ.ராசாவின் கருத்து, திருச்செந்தூரில் யாகம் நடத்திய முதல்வரின் மருமகனுக்கும் பொருந்துமா? என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிரடியான சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போனவர் திமுக எம்பி ஆ.ராசா. முன்னதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியலில் வளர்ந்த விதத்தை ஒப்பிடும் விதத்தில் பேசுகிறேன் என்று அவர் பேசிய வார்த்தைகள் பலத்த சர்ச்சையை உண்டாக்கியது.

அதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டிக்க, ஆ.ராசா அதற்கு தன்னிலை விளக்கம் கொடுத்து வெட்டியும் ஒட்டியும் தவறாகச் சித்தரித்துள்ளதாக விளக்கம் அளித்தார்.

ஆ.ராசாவின் பேச்சால் சர்ச்சை!

இதனை தொடர்ந்து நாமக்கல்லில் அண்மையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி இந்து மதம் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

அவரது பேச்சு இணையத்தில் வெளியான நிலையில் அவரது பேச்சுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆ.ராசா பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, ”திமுக எம்.பி., மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார்” என்று விமர்சித்திருந்தார்.

இந்து உரிமைகளை மீட்டது திராவிட இயக்கம்!

இதனையடுத்து ஆ.ராசா தனது சமூகவலைதளப் பக்கத்தில், ”சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, கோயில் நுழைவு மறுக்கப்பட்டது?

அரசியல் அதிகாரத்தாலும், பரப்புரையாலும் 90 சதவீத இந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி இந்துக்களுக்கு எதிரியாகும்?” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்துக்கள் பற்றி தரக்குறைவாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலரும் பல்வேறு மாவட்ட காவல்நிலையத்தில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

சபரீசனுக்கு பொருந்துமா?

இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 114-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வடபழனியில் நேற்று இரவு நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன் பேச்சின்போது ஆ.ராசாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ”திமுக எம்பி ஆ.ராசா, இந்துக்கள் குறித்து அருவருப்பான வார்த்தைகளை சொல்லியிருக்கிறார். அவர் கூறிய கருத்து, திமுக தலைவரின் குடும்பத்திற்கு பொருந்துமா? திருச்செந்தூரில் யாகம் நடத்திய முதல்வரின் மருமகன் சபரீசனுக்கும் பொருந்துமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

சமூகவலை தளங்களில் ராசாவின் கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் எடப்பாடி பழனிசாமியின் கேள்வி பதிவிடப்பட்டுள்ளது

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் மருமகனான சபரீசன், கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியன்று திருச்செந்தூர் சென்று யாக பூஜைகளில் ஈடுபட்டார்.

கிறிஸ்டோபர் ஜெமா

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!!!

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
1
+1
1

1 thought on “”ராசாவின் கருத்து முதல்வரின் மருமகனுக்கும் பொருந்துமா..?” – எடப்பாடி கேள்வி!

  1. மத வியாபாரிகளால் மனித குளத்திற்கு தீங்கு தான் ஏற்படும், பிஜேபி மதத்தை கையில் எடுத்து மக்கள பிளவு படுத்தியது போல் எடப்பாடியும் முயல்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *