தனது அதிகாரத்திற்கு மீறிய செயல்களை செய்து ஆட்சிக்கு அன்றாடம் தலைவலி தந்து, அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஒரு போட்டி அரசினையே நடத்திக் கொண்டிருக்கிறார் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு ‘திராவிட மாடல்‘ அரசு நமது சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்பற்ற ஆளுமையின்கீழ் கல்வித் துறைகளில் – அது பள்ளிக் கல்வியானாலும், உயர்கல்வித் துறையானாலும், தொழிற்கல்வித் துறையானாலும் அனைத்திலும் மிகச் சிறப்பான சாதனைகளை நாளும் செய்து, அனைத்திந்திய மாநிலங்களில் தனித்தோங்கி நின்று வரலாறு படைத்து வருகிறது!
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. (மற்ற துறை பல்கலைக் கழகங்கள் தனி).
பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக உள்ளன!
இவற்றுள் கீழ் குறிப்பிடும் ஆறு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக – நிரப்பப்பட முடியாத நிலையில், அவை காலியாகவே உள்ளன.
- சென்னை பல்கலைக் கழகம், சென்னை
- கோவை, பாரதியார் பல்கலைக் கழகம் (கோயம்புத்தூர்)
- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம், சென்னை
- அண்ணா பல்கலைக் கழகம், சென்னை
- அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சிதம்பரம்
- மதுரை காமராசர் பல்கலைக் கழகம், மதுரை
அடுத்து, மேலும்
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்
- சேலம் பெரியார் பல்கலைக் கழகம் ஆகிய இரண்டு பல்கலைக் கழகங்களில் தற்போதுள்ள துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், ஆளுநரால் மேலும் ஓராண்டு காலம் (அவருக்கு வேந்தர் என்ற Ex-officio தகுதி உள்ளதைப் பயன்படுத்தி) பதவி நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆளுநர் ஆர்.என்.ரவி இந்த ஆளுநர் பதவியில் இருப்பதால், அரசு பல்கலைக் கழகங்களின் வேந்தராக இருக்கிறார்.
‘‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் மூலமாக வேந்தர் பதவி அமையவேண்டும். ஆளுநர் பதவி மக்களால் தேர்வு செய்யப்பட்ட பதவி அல்ல. மாறாக, ஒன்றிய அரசின் நியமனம் ஆளுநராக ஏற்பட்டதால் உருவான ஒரு வாய்ப்பு’’ என்பதை மாற்றி, வேந்தர் பற்றிய சட்டத் திருத்தம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத்தால் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பாமல், அப்படியே கிடப்பில் வைத்து, உயர்கல்வித் துறையின் பல நிர்வாகப் பணிகளுக்கு சதா முட்டுக்கட்டைப் போட்டு – தனது அதிகாரத்திற்கு மீறிய செயல்களை செய்து – தற்போதுள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு அன்றாடம் தலைவலி தந்து, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும், தாம் பதவிப் பிரமாணத்தில் எடுத்த வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாகவும், அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஒரு போட்டி அரசினையே (Parallel Government) நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதில் உயர்கல்வித் துறையின் வளர்ச்சியும், முன்னேற்றமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்பது பல கல்வி அறிஞர்கள் மற்றும் மக்களின் கவலையாகவே இருக்கிறது.
தன்னிச்சையாக நிராகரித்ததோடு, பகிரங்கமாகவே அறிக்கை வெளியிடுகிறார்!
எடுத்துக்காட்டாக, அண்மையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கான தேடல் குழுவினை (Search Committee) தமிழ்நாடு அரசு நியமித்தது ஏற்கத்தக்கதல்ல என்று அவர், தன்னிச்சையாக நிராகரித்ததோடு, பகிரங்கமாகவே அறிக்கை வெளியிட்டு, தமிழ்நாடு அரசின் ஆளுமைக்கு அவப்பெயர் ஏற்படும்படிச் செய்கிறார்.
தான் விரும்பும் வண்ணம் மூவர் குழுவை, நால்வர் குழுவாக (அத்தேடல் குழுவை) வற்புறுத்தி அப்பல்கலைக் கழக சட்டத்தின்படி செயல்பட முடியாத ஒரு சட்ட மீறலில் ஈடுபடுகிறார்.
இதுபற்றி உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் விடுத்துள்ள, தெளிவான சட்டபூர்வ விளக்க அறிக்கை சரியான பதிலடியாக உள்ளது!
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக் கழகமும் உயர்கல்வித் துறையின்கீழ் செயல்பட்டாலும்கூட, அந்தந்த பல்கலைக் கழகங்கள் தனித்தனி சட்டங்கள்மூலம் உருவாக்கப்பட்டு, அதன்படி அவை செயல்பட வேண்டியவை ஆகும்.
பல்கலைக் கழக சுயாட்சி (University Autonomy) என்பதை புறக்கணிக்கவே முடியாது –கூடாது!
இப்போது திடீரென பல்கலைக் கழக மானியக் குழு உறுப்பினர் பரிந்துரைக்கும் ஒருவரைத் தேடல் குழுவில், நான்காவது உறுப்பினராக நியமனம் செய்யவேண்டும் என்று வற்புறுத்துவதற்கு ஏதோ ஒரு முக்கிய காரணம் பதுங்கியுள்ளதுபோல் தோன்றுகிறது.
அது எப்படி இருந்தாலும், அரசமைப்புச் சட்டப்படி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்க இடமே இல்லை – அரசமைப்புச் சட்ட விதிகளின்படியும், உச்சநீதிமன்ற முந்தைய தீர்ப்புகளின்படியும்.
இந்திய அரசமைப்புச் சட்டப்படி உள்ள நிலை என்ன தெரியுமா?
அரசமைப்புச் சட்ட ஒன்றிய பட்டியலில் (Union List) 44 ஆவது பதிவுப்படி பல்கலைக் கழகங்களைப் பொறுத்து, சட்டம் இயற்றும் அதிகாரம் ஒன்றியத்துக்கு இல்லை. பல்கலைக் கழகங்களை நிறுவுவதற்கும், நிர்வகிப்பதற்கும் ஒன்றிய அரசுக்கு உரிமை – 44–இன்படி இல்லவே இல்லை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent List) 25 இல் பல்கலைக் கழகம் என்று காணப்பட்டாலும், அது ஒன்றியப் பட்டியல் 44ஐ மீற முடியாது. எனவே, பல்கலைக் கழகங்கள் குறித்த சட்டம் இயற்றும் உரிமை ஒன்றிய அரசுக்கு இல்லை.
ராஜேந்திர ஷா வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதனைத் தெளிவாகக் கூறியுள்ளது.
ஒவ்வொரு பல்கலைக் கழகமும், தனித்தனி சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.
பல்கலைக் கழகத்தின் சட்டத்தில் ஆளுநரின் அதிகாரம் அவர் வேந்தர் என்ற தன்மையில் பட்டமளிப்பு விழாவில் தலைமை ஏற்கலாம் என்பது மட்டுமே! அவர் இல்லாமலும்கூட பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடைபெறலாம், சட்டப்படி!
மேலும், துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்கும் குழு (Search Committee) அமைப்பதானது ஒரு நிர்வாக நடைமுறை (Administrative Procedure). அரசமைப்புச் சட்டப்படி அனைத்து நிர்வாக நடைமுறைகளிலும் ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையைப் பின்பற்றியே நடக்கக் கடமைப்பட்டவரே தவிர, சுய அதிகாரம் கொண்டவரல்ல.
இதுதான் அரசமைப்புச் சட்டப்படி உள்ள முறை. இதை மீறினால், அது அரசமைப்புச் சட்ட விதிகளை மீறிய அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கையே! உயர் கல்வி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசர, அவசியம்!
இவற்றை, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி தமிழ்நாடு அரசு நடத்தும்போது, தக்க சட்ட நிபுணர்களைக் கொண்டு, தாமதப்படுத்தாமல் நடத்தி, இப்பிரச்சினையால் உயர் கல்வி வளர்ச்சி தடைபடாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசர, அவசியக் கடமையாகும்” இவ்வாறு கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தொடங்கும் பண்டிகை காலம்… உயரும் தங்கம் விலை!
குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு தேதியில் முக்கிய மாற்றம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
’ஜாகீர்… அத பாத்தியா?’ : சிறுமியின் பெளலிங்கை கண்டு வியந்த சச்சின் – வீடியோ உள்ளே!