டிஜிட்டல் திண்ணை: இறையன்புக்கு என்னாச்சு? புதிய தலைமைச் செயலாளர் இவர்தான்… 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்  இன்பாக்ஸில் சில தகவல்கள் வந்து விழுந்தன. அவற்றை சரிபார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,

“தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராக   வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். தற்போது பதவி வகிக்கும் நிலையில் விரைவில் இந்த தலைமைச் செயலாளர் பதவிக்கு புதிய அதிகாரி நியமிக்கப்பட இருப்பதாக கோட்டை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

2021  ஆம் ஆண்டு  சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைத்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது புதிய அரசின் தலைமைச் செயலாளராக வெ. இறையன்புவை தேர்வு செய்தார். ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தபோது அவரது செயலாளராக இருந்தவர் இறையன்பு என்பதும் குறிப்பிடத் தக்கது.

இறையன்புவின் ஐ.ஏ.எஸ். பதவிக் காலம் வரும் ஜூன்  16 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் அதற்கு முன்பாகவே தலைமைச் செயலாளர் பதவிக்கு புதிய அதிகாரியை நியமிக்க வேண்டிய அவசரம் என்ன ஏற்பட்டது என்று விசாரித்தபோது வேறு சில தகவல்கள் கிடைத்தன.

தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையர் பதவி கடந்த ஒரு மாதமாக காலியாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு  தமிழ்நாட்டின் தலைமை தகவல் ஆணையராக அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த  ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.  நியமிக்கப்பட்டார்.

அவரது பதவிக் காலம் மூன்று ஆண்டுகள். அவரது பதவிக் காலம் கடந்த நவம்பரில் முடிவடைந்தது. இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி நிரப்பப்படவே இல்லை. தலைமைத் தகவல் ஆணையர் பதவி நிரப்பப்படாமல் இருப்பதால் தகவல் அறியும் உரிமை சட்டப்படி தகவல்கள் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை என்று சமூக ஆர்வலர்கள் அரசை விமர்சித்து வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதத்திலேயே தமிழ்நாடு  அரசு, நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி தலைமையில் தகவல் ஆணையம் அமைப்பதற்கான  மூன்று பேர் கொண்ட தேடல் குழுவை அமைத்தது. இந்தக் குழு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கும் அவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டிய தகவல் ஆணையர்களும் கண்டறியப்படவில்லை.

Iraiyanbu IAS new Chief Secretary

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் தற்போதைய தலைமைச் செயலாளர் வெ. இறையன்புவுக்கு  மாநில தலைமை தகவல் ஆணையர் பதவி அளிக்கப்படலாம் என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரங்களில்.

தமிழ்நாட்டில்  கடந்த ஐந்து தலைமை தகவல் ஆணையர்களில் நான்கு பேர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்தவர்கள். அந்த வகையில் முதல்வரின் நம்பிக்கைக்குரிய வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அடுத்த மூன்று வருட காலத்துக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையராக பொறுப்பேற்க இருக்கிறார் என்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் புதிய தலைமைச் செயலாளர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதற்கு பதில் தேடியபோது தற்போது நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக இருக்கும் சிவதாஸ் மீனா ஐ.ஏ.எஸ், தான் அடுத்த தலைமைச் செயலாளராக  நியமிக்கப்பட இருக்கிறார் என்கிறார்கள் ஆளுந்தரப்பில்.

ஜனவரி 30 ஆம் தேதி பணி நிமித்தமாக டெல்லியில் இருந்த சிவதாஸ் மீனா ஐ.ஏ.எஸ்.சுக்கு சென்னை முதல்வர் அலுவலகத்தில் இருந்து, ‘நீங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்’ என்று தகவல் தரப்பட உடனடியாக டெல்லியில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டிருக்கிறார் சிவதாஸ் மீனா.

1989 பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவதாஸ் மீனா ராஜஸ்தான் மாநிலத்தைச் சேந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் (தற்போது மாளவியா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) சிவில் இன்ஜினியரிங் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

தொடர்ந்து ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர் சிவதாஸ் மீனா.  முப்பது வருட  ஐ.ஏ.எஸ். அனுபவம் கொண்ட சிவதாஸ் மீனா அடுத்த தலைமைச் செயலாளராக பதவியேற்க இருக்கிறார்” என்ற தகவலுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

பிபிசி ஆவணப்படம்: பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் – டி.ஆர். பாலு

வார்த்தைக்கு வார்த்தை ஆபாச பேச்சு: திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்!

+1
0
+1
0
+1
1
+1
7
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *