தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் டிஜிபியாக இருக்கும் மூத்த ஐபிஎஸ் அதிகாரி கல்பனா நாயக், கூறியுள்ள ஒரு புகார் மாநில அரசு தொடங்கி மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் வரை கவனயீர்ப்பையும் அதிர்வையும் ஏற்படுத்தி உள்ளது. ips officer kalpana naik complaint
கல்பனா நாயக் அறையில் தீ விபத்து!
கடந்த 2024 ஜூலை 29-ஆம் தேதி காலை 11:30 மணி அளவில் சென்னை எழும்பூரில் இருக்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் தலைமை அலுவலகத்தில் ஏடிஜிபி கல்பனா நாயக் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறை வரவழைக்கப்பட்டு, அந்த தீ அணைக்கப்பட்டது. இந்தத் தீ விபத்தில் அவரது அறையில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன.
இது தொடர்பாக எழும்பூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் ஏசி சர்க்யூட் ஃபால்ட் ஏற்பட்டு தீ விபத்து நடந்தது என அந்த வழக்கை முடித்தனர்.

இந்நிலையில், சுமார் 6 மாதங்கள் கழித்து சென்னை முதல் டெல்லி வரை பரபரப்பு தீயை பற்ற வைத்திருக்கிறது இந்த விவகாரம்.
அந்தத் தீ விபத்துக்கு பிறகு இரு வாரங்கள் கழித்து… 2024 ஆகஸ்ட் 14ஆம் தேதி கல்பனா நாயக் டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். ips officer kalpana naik complaint
சீரியஸாக கவனிக்கும் மத்திய உள்துறை!
அதில், ‘எனது அலுவலகத்தில் நடந்த தீ விபத்து தற்செயலானது அல்ல. என்னை திட்டமிட்டு கொல்ல முயற்சித்து இருக்கிறார்கள். தேர்வாணையத்தில் நடந்த முறைகேடுகளை நான் தட்டி கேட்டதால் என்னைப் பழி வாங்குவதற்காக திட்டமிட்டு இந்த தீ விபத்து நடத்தப்பட்டுள்ளது” என்று புகார் கொடுத்திருந்தார்.
அந்த புகார் பற்றி அப்போது செய்திகள் எதுவும் வெளிவராத நிலையில், இன்று பிப்ரவரி 3ஆம் தேதி ஆங்கில நாளிதழான தி ஹிந்து இது குறித்து செய்தி வெளியிட்டு இருக்கிறது.
இதன் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, “தமிழ்நாட்டில் ஒரு பெண் ஏடிஜிபிக்கு கூட பாதுகாப்பு இல்லையா? முறைகேடுகளை தட்டி கேட்டால் கொலை மிரட்டல் விடப்படுவதா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

புகார் கூறிய கல்பனா நாயக் மூத்த ஐபிஎஸ் அதிகாரி என்பதால் இந்திய அளவில் ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத்திலும் இந்த விவகாரம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும் டிஜிபி, ஏடிஜிபி உள்ளிட்ட முக்கிய காவல்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் இந்த விவகாரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகமும் சீரியஸாக கவனித்து வருகிறது. ips officer kalpana naik complaint
கல்பனா நாயக் Vs சீமா அகர்வால்
இதற்கிடையில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் என்ன நடந்தது? ஆறு மாதங்களாக இந்த புகார் மீது என்ன நடவடிக்கை? என்பது குறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தோம்.
“கல்பனா நாயக் 1998 பேட்ச் அதிகாரி. பிறப்பால் ஆந்திராவை சேர்ந்த இவர், பணி ரீதியாக தமிழ்நாடு கேடரைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் எஸ்.பி. யாக தனது பணியைத் தொடங்கியவர். சிறிது காலத்திலேயே டெப்டேஷனாக ஆந்திராவுக்கு சென்றார். எஸ்.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி, வரைக்கும் ஆந்திராவிலே பணியாற்றிய கல்பனா நாயக் அதன் பிறகு தமிழ்நாட்டுக்கு வந்தார்.
சில வருடங்கள் ஐஜியாக பணியாற்றி விட்டு சமீபமாக சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருகிறார். இவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கல்பனா நாயக்கின் கணவர் மகேந்திர குமார் ரத்தோடு ஐபிஎஸ் தமிழ்நாட்டில் தான் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் மிக முக்கிய அதிகாரிகளான ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி ஆகிய மூவரும் பெண் அதிகாரிகள் என்பதும் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.
ஐஜியாக ராஜேஸ்வரி, ஏடிஜிபியாக கல்பனா நாயக், டிஜிபியாக சீமா அகர்வால் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை ஆகியவற்றில் எஸ்ஐ வரையிலான பணியாளர்களை தேர்வு செய்கிற முக்கியமான ஆணையம்.
இந்தப் பதவிகளுக்கான தேர்வுகள் நடத்துவது, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பது உள்ளிட்ட பணிகளை சீருடை பணியாளர் தேர்வாணையம் செய்யும்.
ஆணையத்தின் விதிகளின்படி தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றால் டிஜிபி, ஏடிஜிபி, ஐஜி ஆகிய மூன்று அதிகாரிகளில் குறைந்தபட்சம் இருவருடைய ஒப்புதல் வேண்டும். அதாவது பெரும்பான்மை வேண்டும்.

இந்த வகையில், 2024 இல் எஸ்ஐ பதவிக்கான தேர்வு முடிவுகளை தயாரித்து அந்த பட்டியல் ஏடிஜிபி கல்பனா நாயக்கிடம் அனுப்பப்பட்டது. ஆனால், அதில் சில குளறுபடிகள் இருப்பதாக கூறி கையெழுத்து போட மறுத்திருக்கிறார் ஏடிஜிபி கல்பனா நாயக். இதையடுத்து டிஜிபி சீமா அகர்வால், ஐஜி ராஜேஸ்வரி ஆகிய இருவர் ஒப்புதலோடு அந்த பட்டியல் வெளியிடப்பட்டது.
ஏற்கனவே டிஜிபி சீமா அகர்வாலுக்கும் ஏடிஜிபி கல்பனா நாயக்கிற்கும் இடையில் சில உரசல்கள் இருந்து வந்தன. இந்த விவகாரம் மூலம் அந்த உரசல் மேலும் அதிகமானது.
இந்த நிலையில் தான் 2024 ஜூலை 29-ஆம் தேதி கல்பனா நாயக் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதை எழும்பூர் போலீசார் விசாரித்து முடித்த பிறகும் கல்பனா நாயக் டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை குறி வைத்துதான் இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கிறது என்று பகீர் தகவலை அவர் தெரிவித்து இருந்தார்.
ஒரு ஏடிஜிபி புகார் கொடுத்திருக்கிறார் என்னும்போது அதை டிஜிபி அலுவலகம் லேசாக எடுத்துக் கொள்ளாது. உடனடியாக இதுபற்றி விசாரணை நடத்த டிஜிபி உத்தரவிட்டார். அதன் பேரில் சுமார் 30 பேர் வரை டிஜிபி அலுவலகத்தால் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.
அலுவலக ஊழியர்கள், அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி, அந்த ஏசி சாம்சங் கம்பெனி என்பதால் அந்த பகுதிக்குரிய சாம்சங் ஏசி மெக்கானிக் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கல்பனா நாயக் அறையில் இரண்டு ஏசிகள் இருந்தன. அவர் காலை அலுவலகத்துக்கு வருவதற்கு முன் 9.45 மணிக்கு எல்லாம் ஏசிக்கள் ஆன் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அவர் அலுவலகத்தை விட்டுப் புறப்பட்ட பின்பு தான் அந்த ஏ.சி.க்கள் ஆஃப் செய்யப்படும். அதனால் தினந்தோறும் காலை 9.45 மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இரண்டு ஏ.சி.க்களும் ஓடிக் கொண்டிருக்கும் என்பது அவரது அலுவலக ஊழியர்களிடம் நடத்திய விசாரணை மூலம் தெரிந்தது.
ஷார்ட் சர்க்யூட் தான் பிரச்சனை!
மேலும் சாம்சங் ஏசி மெக்கானிக்கிடம் விசாரித்தபோது…
“ஏசியை மூன்று மாதத்திற்கு ஒரு முறை பராமரிக்க வேண்டும். பலரும் ஏசியின் ஃபில்டரை மட்டும்தான் சர்வீஸ் செய்வார்கள். வெளியே இருக்கும் கம்ப்ரஸரை சர்வீஸ் செய்வதே இல்லை. அதுவும் குறிப்பாக அரசு அலுவலகங்களில் இந்த பழக்கம் கடைபிடிக்கப்படுவதே கிடையாது.
ஏசி தொடர்ந்து இடைவிடாமல் ஓடினால் ஹீட்டாகி அதன் மூலம் தீப்பிடிக்கவும் வாய்ப்பிருக்கிறது. தூசு அதிகமாக படிந்தால் ஏசி அதிக மின்சாரத்தை இழுக்கும். அப்போது ஒயர்களில் பழுது ஏற்பட்டிருந்தால் ஷார்ட் சர்க்யூட் ஆகி தீப்பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படித்தான் கல்பனா நாயக் அலுவலகத்தில் இருந்த அறையிலும் ஏசி தீப்பிடித்துள்ளது’ என ஏசி மெக்கானிக் கூறி இருக்கிறார்.
இதேபோல தீயணைப்புத்துறையும் விசாரணை நடத்தி, ஷார்ட் சர்க்யூட் காரணமாக தான் தீப்பிடித்திருக்கிறது என்று ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.
இவ்வாறு டிஜிபி அலுவலகம் விசாரணை நடத்தி அதன் விவரங்களும் அப்போதே கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கிடம் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
ஆனபோதும் ஆறு மாதங்கள் கழித்து இப்போது இது பத்திரிகைகளுக்கு எப்படி சென்றது? இதன் காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்? என்று விசாரணை நடக்கிறது” என்கிறார்கள்.

இதற்கிடையில் டிஜிபி அலுவலகம் மற்றும் சீருடை பணியாளர் தேர்வாணையம் என இருதரப்பிலும் இன்று விளக்க அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏடிஜிபிக்கு எதிராக திட்டமிட்ட சதியில்லை!
டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்தியில், “இந்த சம்பவம் குறித்து விரிவாக நடத்தப்பட்ட விசாரணையில் கல்பனா நாயக் அவர்களுக்கு எதிராக திட்டமிட்ட சதியோ அச்சுறுத்தலோ இல்லை என்பது தெரிகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கல்பனா நாயக் கூறிய புகார்களுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) 05.05.2023 மற்றும் 23.05.2023 ஆகிய தேதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்கான 750 காவல் துணை ஆய்வாளர்கள் மற்றும் நிலைய அலுவலர் பதவிகளுக்கான கூட்டு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இறுதி தற்காலிகத் தேர்வுப் பட்டியல் 30.01.2024 அன்று வெளியிடப்பட்டது.

30.01.2024 அன்று இறுதி தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, ஐந்து வேட்பாளர்கள் இறுதி தற்காலிகத் தேர்வுப் பட்டியலை எதிர்த்து, 16.02.2024 அன்று சேர்க்கைக்காக வந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். 2020 ஆம் ஆண்டு SLP சிவில் மேல்முறையீட்டு எண்.3745 இல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளுக்கு இணங்க, இறுதி தற்காலிக தேர்வுப் பட்டியலைத் திருத்த வேண்டும் என்று மனுதாரர்கள் கோரினர்.
ரிட் மனு விசாரணையில் இருந்தபோது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், உயர் நீதிமன்றத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி திருத்தங்களைச் செய்ய ஒப்புக்கொண்டது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், தேவையான திருத்தங்களைச் செய்யவும், ஆட்சேர்ப்பு செயல்முறையை மீண்டும் செய்யவும், இறுதி தற்காலிக தேர்வுப் பட்டியலை அறிவிக்கவும் TNUSRB-க்கு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி, தேர்வுப் பணியை மீண்டும் செய்து, திருத்தப்பட்ட தேர்வுப் பட்டியலை 03.10.2024 அன்று பதிவேற்றியது. இந்த செயல்முறைகளில் அப்போதைய ADGP ஆல் வழங்கப்பட்ட பரிந்துரைகள் முறையாகக் கருத்தில் கொள்ளப்பட்டன. எனவே கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வருக்கு சென்ற ரிப்போர்ட்!
புகார் கூறியிருக்கும் பெண் அதிகாரி கல்பனா நாயக் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இது தொடர்பாக தேசிய எஸ்சி எஸ்டி ஆணையமும் கவனித்து வருவதாக டெல்லியில் இருந்து தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் இன்று அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
“கல்பனா நாயக் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த உத்தரவிடலாம் என சில உயரதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். அதே நேரம் சில முக்கிய அதிகாரிகள், ‘தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவை இதை அரசியல் ரீதியாக அணுக வாய்ப்பு இருக்கிறது. விவகாரம் ஐபிஎஸ் உயரதிகாரி தொடர்பானது என்பதால், ஒன்றிய அரசே இதை சிபிஐ விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. எனவே ஒன்றிய அரசு கேட்பதற்கு முன்பாகவே, மாநில அரசே இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக முதல்வரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் விரைவில் முடிவெடுப்பார்” என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில். ips officer kalpana naik complaint