அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரை குறிப்பிட்டுப் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (ஏப்ரல் 13) வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற்ற விளையாட்டுத் துறை மானிய கோரிக்கையின் போது, அதிமுக, எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணி, “கடந்த அதிமுக ஆட்சியில் ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு எம்.எல்.ஏக்களுக்கு 400 பாஸ்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் 300 முதல் 400 பாஸ்கள் வழங்கப்படுகிறது. ஆனால் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் கிடைப்பதில்லை. அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் பாஸ் வேண்டும்” என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கடந்த 4 வருஷமா சேப்பாக்கத்தில் போட்டிகளே நடைபெறல. நீங்க யாருக்கு டிக்கெட் வாங்கி கொடுத்தீங்கனு தெரியல. என்னோட சொந்த செலவில் டிக்கெட் வாங்கி 150 கிரிக்கெட் வீரர்களை போட்டி பார்ப்பதற்கு அழைத்து செல்கிறேன்.
ஐபிஎல் போட்டியை நடத்துவது உங்களுக்கு நெருக்கமான நண்பர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான். அவர் கிட்ட சொல்லி டிக்கெட் வாங்கி கொடுங்க. நாங்க சொன்ன அவரு கேட்க மாட்டாரு. நீங்க சொன்ன தான் கேட்பாரு” என்று நகைச்சுவையாக பேசியதைக் கேட்டு முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் பலரும் சிரித்தனர்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 13) சட்டப்பேரவையில் மானிய கோரிக்கையின் போது, பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமித்ஷா பெயரை குறிப்பிட்டு பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அமைச்சரின் பெயரை விமர்சனம் செய்தோ, கேலி செய்தோ அமைச்சர் பேசவில்லை. திரு என்று சொல்லித் தான் பேசியுள்ளார். அதில் என்ன தவறு உள்ளது. தவறாக இருந்தால் நீக்கத் தயாராக இருக்கிறோம்” என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து நயினார் நாகேந்திரன், “அவை குறிப்பில் மத்திய அமைச்சரின் பெயரே இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறோம்” என்றார்.
மேலும் பாஜக உறுப்பினர்களின் கோரிக்கைகளை சபாநாயகர் ஏற்காததால், அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன்,
“ஐபிஎல் டிக்கெட்டுகள் அமித்ஷா மகனிடம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் சொல்லியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று சொன்னோம். இன்று முதலமைச்சர் கூட எழுந்து நின்று அதில் திரு என்று சேர்க்கப்பட்டிருப்பதாக கூறினார்.
ஆனால் நேற்று முன்தினம் அவர் பேசும் போது கிண்டலும் கேலியும் இருந்தது. தமிழ்நாட்டுத் தலைவராக கௌதம சிகாமணிதான் உள்ளார். (கௌதம சிகாமணி எம்பியாக உள்ளார். அவரது சகோதரர் அசோக் சிகாமணிதான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருக்கிறார். ஆனால் நயினார் நாகேந்திரன் பெயரை மாற்றிச் சொன்னார்) அவர் பெயரை சொல்லி இருக்கலாம். ஆனால் உள்துறை அமைச்சரையும் அவரது மகன் பெயரையும் சொல்லி இருப்பது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.
அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனச் சொன்னோம். அதற்கு அவர்கள் இடம் கொடுக்கவில்லை. ஆகவே 4 சட்டமன்ற உறுப்பினர்களும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், “உங்க நண்பர் உள்துறை அமைச்சரின் மகன் நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட்டில் நீங்க டிக்கெட் வாங்கிக்கோங்கனு கிண்டலாகப் பேசுகிறார். இதே போல் இவர்களைப் பற்றி மற்ற மாநில சட்டமன்றத்தில் பேசுவதற்கு தெரியாதா?
ஆனால் இதையெல்லாம் முதலமைச்சர் நியாயப்படுத்துகிறார். மகன் என்பதால் அவர் செய்கின்ற தவறுகள் கண்களுக்குத் தெரியவில்லை. உதயநிதி ஸ்டாலின் வளர வேண்டிய அமைச்சர். அவர் தவறு செய்தால் முதலமைச்சர் கண்டிக்க வேண்டுமே தவிர அதை நியாயப்படுத்தக் கூடாது” என்று பேசினார்.
மோனிஷா
ஆருத்ரா மோசடி நபர்களுடன் பாஜக தலைமை: நிர்மல் வழியில் அண்ணாமலை மீது இன்னொரு புகார்!
முதல்முறையாக நயன்தாராவுடன் நடிக்கும் மாதவன்