“1 லட்சம் பேருக்கு வேலை”- முதலமைச்சர் பேச்சு!

Published On:

| By Kalai

10 ஆண்டுகளுக்குள் ரூ. 75,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பதும், 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான் இலக்கு என்று தொழில்துறை 4.0 மாநாட்டில் முதலமைச்சர் பேசியுள்ளார்.

சென்னையில் இன்று(நவம்பர் 8)தொழில்துறை 4.0 மாநாட்டை துவக்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அதில், “கடந்த 15 மாத காலமாக தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னோக்கி போய் கொண்டிருக்கிறது.

அதிலும் தொழில்துறை வேகமான முன்னேற்றங்களை உருவாக்கி வருகிறது. தொழில்துறையில் இந்திய அளவில் மட்டுமல்ல உலகளவில் தமிழ்நாடு கவனத்தை பெற்றுள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக, திட்டங்களை வகுப்பதற்காக, தொழில் கொள்கைகளை வெளியிடுவதற்காக, ஒப்பந்தங்களை போடுவதற்காக ஏராளமான மாநாடுகள் போடப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த மாநாடும் அடங்கும்.

தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022 வெளியிடுதல், மேம்பட்ட உற்பத்திக்கான இரண்டு திறன்மிகு மையங்களை திறந்து வைத்தல், மதுரை மற்றும் சென்னையில் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி நிறுவனங்களை தொடங்கி வைத்தல், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் போன்றவை இந்த நிகழ்வில் நடந்துள்ளன.

2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை அடையவேண்டும். தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் நாட்டின் சராசரியை விட 51.4 விழுக்காடு அதிகமாக உள்ளது.

பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் நோக்கி வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. 4 ஆம் தலைமுறை தொழில்வளர்ச்சியை இலக்கு வைத்து அரசு செயல்பட்டு வருகிறது.

டிட்கோ மற்றும் சீமன்ஸ் இணைந்து அமைத்துள்ள திறன்மிகு மையம் நாட்டிலேயே முதலாவது மையமாகும். இந்த திறன்மிகு மையங்கள் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சிகாண முடியும்.

வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி சூழல் அமைப்பை பொறுத்தவரை தமிழ்நாடு எப்போதும் முன்னிலை மாநிலமாகதான் இருந்து வருகிறது.

10 ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு, 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்ற இலக்கை நிர்ணயித்திருக்கிறோம்.

தமிழகத்தின் அனைத்து தொழில் வாய்ப்புகளையும், தொழில் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

கலை.ரா

“திமுக-அதிமுக அண்ணன் தம்பி இயக்கம்தான்” – ஓ.பன்னீர்செல்வம்

கையில் காயம் : அரையிறுதிப் போட்டியில் ஆடுவாரா ரோகித்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share