இலவசங்கள் தொடர்பான வழக்கில் விரிவாக விசாரணை தேவை என்பதால் வழக்கை 3 நீதிபதி அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் நேரத்தில் இலவசங்கள் அறிவிக்கப்படுவதை தடை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது இலவசங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நாங்கள் அறிவோம்.
இதுதொடர்பாக ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை.
தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய அம்சம்.
இலவசங்களை முறைப்படுத்த குழு அமைப்பதற்கு ஏற்கனவே மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் நாங்கள் ஆணையம் அல்லது குழு அமைத்தால் அதனை அரசியல் கட்சிகள் எதிர்ப்பார்கள். எனவே, “இலவசங்கள் தொடர்பாக ஏன் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க கூடாது?” அதற்காக மத்திய அரசே ஏன் ஒரு குழு அமைக்கக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன்(ஆகஸ்ட் 26) ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த வழக்கு அவர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுபோன்ற இலவச வாக்குறுதிகள் மாநிலத்தின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், வாக்கு வங்கிகளை ஈர்க்கும் வகையில் அளிக்கப்பட்டவை என்றும் மனுதாரர் கூறுகிறார்.
இலவசங்கள் அறிவிப்பு என்பது ஒரு மாநில அரசு உடனடி திவால்நிலைக்கு தள்ளப்படும் சூழ்நிலையை உருவாக்கலாம். அத்தகைய இலவசங்கள் கட்சியை பிரபலப் படுத்தவே பயன்படுத்தப் படுகிறது.
நீதிமன்றம் மாநிலங்களின் கொள்கை விவகாரங்களை கையாளும் போது, அது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டதாக இருக்கும் போது, இந்த விவகாரம் குறித்து வெள்ளை அறிக்கை தயாரிக்க ஒரு குழுவை பரிந்துரைத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அழைக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம்.
இந்தப் பிரச்சினைக்கு விரிவான விவாதம் தேவை. இந்த பிரச்சினையில் நீதித்துறை தலையீட்டின் நோக்கம் என்ன? நீதிமன்றம் ஏதேனும் நடைமுறைப்படுத்தக்கூடிய உத்தரவை பிறப்பிக்க முடியுமா? குழுவின் அமைப்பு என்னவாக இருக்க வேண்டும்? இதுபோன்ற விரிவான விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது.
எனவே இலவசங்கள் தொடர்பான வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம் என்றார்.
கலை.ரா
இலவசங்கள் வழக்கு – அனைத்துக்கட்சி கூட்டம் கூட்ட உச்ச நீதிமன்றம் யோசனை!