புதிய, புதிய தொழில்களை அறிமுகம் செய்யுங்கள், இருக்கும் தொழில்களை வளப்படுத்தி கொள்ளுங்கள், ஏராளமானவர்களுக்கு வேலை வழங்குங்கள் என்று திருப்பூர் மாநாட்டில் ஸ்டாலின் உரையாற்றினார்.
ரூ. 167.58 கோடி மதிப்பில் திட்டங்கள் தொடக்கம்
தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தலைப்பில் சிறு குறு தொழில்துறை மண்டல மாநாடு திருப்பூர் திருமுருகன்பூண்டி பாப்பிஸ் விஸ்டா ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் சிறு குறு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூபாய் 167.58 கோடி அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட இருக்கும் பல திட்டங்களை தொடங்கி வைத்தும், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொழில்முனைவோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
தனியார் தொழிற்பேட்டைக்கு அடிக்கல்
தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், 100 கோடி ரூபாயில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம், தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி செயல்முறை தளம், ரூ. 15.34 கோடி மதிப்பில் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் உள்ளிட்டவற்றை துவக்கி வைத்தார்.
மேலும் தொழிலாளர் தங்கும் விடுதி. குறிச்சி தொழிற்பேட்டை , கோவை ( 22 கோடி ), 42.42 ஏக்கர் பரப்பளவில் தனியார் தொழிற்பேட்டை ( 18.13 கோடி ), வெள்ளி கொலுசு பொது வசதி மையம் , சேலம் ( 24.55 கோடி ) உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொழிலாளர்களும் வளரும் ஊர்
அப்போது பேசிய அவர், உடுக்கும் உடை திருப்பூர் இல்லாமல் இல்லை . பின்னலாடை உற்பத்தியில் இந்தியாவின் தலைநகராக இருக்கிறது. தொழில்துறை வளரும் ஊராக மட்டுமல்லாது தொழிலாளர்கள் வளரும் ஊராகவும் இருக்கிறது திருப்பூர்.
திருப்பூர் மாவட்டத்தில் சராசரி பின்னலாடை உற்பத்தி வர்த்தகம் 60 ஆயிரம் கோடி. இதில் பெருமளவு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.பின்னலாடை மட்டுமல்லாது ஊத்துக்குளி வெண்ணை, திருமுருகன்பூண்டி சிற்பம், பல்லடம் கறிக்கோழி என ஏராளமான தொழில்களை கொண்டது திருப்பூர்.
ரூ. 2.20 லட்சம் கோடி முதலீடு ஈர்ப்பு
15 மாத காலத்தில் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 221 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு ரூ. 2.20 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
கடன் உத்தரவாத திட்டம் மூலம் சிறு, குறு நிறுவனங்களுக்கு உடனடியாக கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் வளர்ச்சியோடு திறமையான தொழிலாளர்களை உருவாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள் 8000 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்பட்டு அதில் 4000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனை சிறப்பு தொழில் பிரிவில் சேர்க்க கோரிக்கை வைக்கப்பட்டது. இது ஏற்கப்பட்டு, இனி முதலீட்டு மானியம் வழங்கப்படும்” என்று ஸ்டாலின் பேசினார்.
கலை.ரா
போக்குவரத்து தொழிலாளர் ஊதிய உயர்வு: கலைஞர் கொடுத்ததை ஸ்டாலின் பறிக்கிறாரா?