ஆளுநருக்கு மிரட்டல் விடுத்ததாக பாஜக சார்பாக காவல்துறையினரிடம் ஆன்லைன் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்று(ஜனவரி 10) தொடங்கியது. அப்போது திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாகக் கூறி அவரை வெளியேறும்படி கூச்சலிட்டனர்.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளுநர் உரையாற்றிவிட்டு தேசியகீதம் இசைக்கும் முன்பே பேரவையில் இருந்து வெளியேறினார்.
இந்தநிலையில், சட்டப்பேரவையில் ஆளுநரை மிரட்டும் தொனியில் சில எம்.எல்.ஏ., க்கள் கூச்சலிட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை கோரியும் காவல்துறையில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக செயலர் அஸ்வத்தாமன், ஆன்லைன் மூலமாக, காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று புகார் அனுப்பியுள்ளார்.
அதில் சட்டசபையில் ஆளுநர் ரவி உரையாற்றிய போது, சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லா, செல்வப்பெருந்தகை, சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர், பெரும் கூச்சலிட்டுள்ளனர்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்படி, ஆளுநரை ஜனநாயக கடமையாற்ற விடாமல் மிரட்டும் தொனியில் செயல்பட்டுள்ளனர்.
ஆளுநரை பயமுறுத்தி, பணி செய்ய விடாமல் தடுக்கிற எண்ணத்தில் சைகை காட்டியுள்ளனர். இது தண்டனைக்குரிய குற்றம்.
எனவே, கூச்சலிட்டு மிரட்டும் தொனியில் செயல்பட்ட, வேல்முருகன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா