தேசிய அளவில் இந்த ரெய்டு தொடர்பான செய்திதான் முன்னுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் தற்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பேசிய கே.பாலகிருஷ்ணன் , “அமைச்சர் பொன்முடி மீது சுமத்தப்பட்ட இரண்டு வழக்குகளில் இருந்து அவர் விடுதலை பெற்றிருக்கிறார். இப்போது அவர் மீது பதியப்பட்டுள்ள இந்த மூன்றாவது வழக்கில் விரைவில் தீர்ப்பு வர இருக்கிறது.
இச்சூழலில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சோதனை மூலம் மத்திய அரசு சொல்ல வருவது என்ன வென்றால் மக்கள் மத்தியில் திமுக அமைச்சர்கள் மீது ஒரு களங்கத்தை கற்பித்து அவர்கள் கறை படிந்தவர்கள் என்பதை உருவாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்றும் திட்டமிட்டு இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
பாஜகவின் இந்த முயற்சி நிச்சம் வெற்றி பெறாது. திமுகவை மிரட்ட வேண்டும் என்ற எண்ணமும் வெற்றி பெறாது.
இன்று பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள இந்த சூழலில் இது போன்ற ரெய்டு தொடர்பான செய்தி தேசிய அளவில் முன்னுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த சோதனை நடைபெறுகிறது” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பிரான்ஸ் அதிபர் மற்றும் மோடியுடன் மாதவன்: வைரல் செல்பி!
திமுகவுக்கு ED தேர்தல் வேலை செய்கிறது: மு.க. ஸ்டாலின்