“கட்சி அலுவலகத்தில் மட்டுமே பிரஸ்மீட்” : தமிழிசையை கட்டுப்படுத்தும் அண்ணாமலை?

அரசியல்

கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் இனி செய்தியாளர்கள் சந்திப்பு நடக்கும் என அண்ணாமலை கூறியது, தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி கொடுப்பதை கட்டுப்படுத்தத்தான் என்கிறார்கள் தமிழக பாஜக வட்டாரத்தில்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பாஜகவுக்குள் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

குறிப்பாக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கும், முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் 6ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “மற்ற கட்சி இணையதள வாசிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போலவே, உட்கட்சி இணையதள வாசிகளையும் எச்சரிக்கிறேன். உள்ளே உள்ள கட்சி தலைவர்களை தவறாக எழுதினீர்கள் என்றால் முன்னாள் மாநில தலைவராக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பேன்” என்று எச்சரித்திருந்தார்.

அண்ணாமலையின் வார் ரூமைதான் அவர் எச்சரித்திருந்தார்.

மேலும் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்திருந்தால் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்காது  என்று கூறிய தமிழிசை,  அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்திருந்தால் 35 இடங்கள் வரை வெற்றி பெற்றிருப்போம் என்ற அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

அடுத்த பேட்டியில்,  “இப்போது இருக்கிற பாஜகவில் குற்ற  பின்னணி உடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ’நான் மாநில தலைவராக இருந்தபோது குற்ற பின்னணி உடையவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு தடை விதித்தேன். கட்சியில் சேர வருபவர்களை சேர்ப்பதற்கு கட்டுப்பாடுகள் வைத்திருந்தேன்” என்று மாநில தலைமை மீது குற்றம்சாட்டியிருந்தார் தமிழிசை.

இந்நிலையில் பதவி ஏற்பு விழாவுக்காக டெல்லி சென்ற அண்ணாமலை தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி. எல் .சந்தோஷை சந்தித்தார்.

அவரிடம், “தமிழகத்தில் தேசிய தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட மாநில தலைமைக்கு எதிராக தமிழிசை, கல்யாணராமன் போன்றவர்கள் பகிரங்கமாக புகார் தெரிவித்து வருகிறார்கள்.

விமர்சனங்களை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள். எனவே இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

இதுகுறித்து மின்னம்பலத்தில் ‘தமிழிசைக்கு எதிராக அண்ணாமலையின் டெல்லி மூவ்!’ என்ற தலைப்பில் வெளியான டிஜிட்டல் திண்ணையில் கூறியிருந்தோம்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து கோவை வந்த அண்ணாமலை நேற்று (ஜூன் 11) செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இனிமேல் ஏர்போர்ட்டில் பேச மாட்டேன். எல்லாவற்றையும் முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் போகிறோம்.

இனி அனைத்து சந்திப்புகளும் அப்படி தான் நடக்கும். பாத்ரூமுக்கு போகும்போதும் வரும்போதும் எல்லாம் பேச மாட்டோம்.

கட்சி அலுவலகத்தில் மட்டும்தான் செய்தியாளர் சந்திப்பு நடக்கும். தினமும் மாலை நேரத்தில் கட்சி அலுவலகத்தில் இருந்து பத்திரிக்கையாளர்களுக்கு அறிக்கை வந்துவிடும்” என்று  கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில்,  “அண்ணாமலை இப்படி கூறியதற்கு காரணம் தமிழிசை சவுந்தரராஜன் தான். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செல்லும் இடங்களில் எல்லாம் பேட்டி கொடுக்கிறார்.  அப்போது பல்வேறு கருத்துகளை சொல்லி வருகிறார். எனவே அவர் பேட்டி கொடுப்பதை கட்டுப்படுத்த தான், இனி கட்சி அலுவலகத்தில் மட்டும் பேட்டி கொடுக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பை முறைப்படுத்துவேன் என்று கூறியிருக்கிறார்” என்கிறார்கள் தமிழக பாஜக வட்டாரத்தில்

இதுதொடர்பாக தமிழிசைக்கு நெருக்கமானவர்களிடத்தில் விசாரித்தபோது,  “அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஆளுநர்கள்  சகஜமாக பேட்டி  கொடுக்கமாட்டார்கள்.  ஆனால் ஆளுநராக இருக்கும் போதே சகஜமாக பத்திரிகையாளரை சந்தித்தவர் தமிழிசை சவுந்தரராஜன்.

தற்போது ஆளுநர் பதவியிலும் இல்லை. பிரபலமான பாஜக உறுப்பினராக தான் இருக்கிறார். அவருக்கு எந்த தடையும் இல்லை. தமிழிசைக்கென சொல்லி தடை போட்டால், ஒட்டுமொத்த பாஜகவினர் செய்தியாளர்களை சந்திப்பதில் பிரச்சினை வரும். இப்போது அண்ணாமலை சூசகமாகத்தான் சொல்லியிருக்கிறார். நேரடியாக சொல்லும் போது பார்த்துக்கொள்வோம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன், பிரியா

மஸ்தான் மாற்றம்: விசித்திர பின்னணி!

வாரணாசியில் மோடியின் வெற்றி மோசடியானது : உபி பாஜக உறுப்பினர் வீடியோ வைரல்!

 

+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *