அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 11) தொடங்கியதும் அதிமுகவில் இதுவரை இருந்த இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டதாகவும், இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாகவும் அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதும், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனை பொதுக்குழுவை தலைமை தாங்கி நடத்தித் தருமாறு எடப்பாடி பழனிசாமி முன் மொழிந்தார். அதை கே.பி. முனுசாமி வழிமொழிந்தார்.
”செயற்குழுவில் கொண்டுவரப்பட்ட 16 தீர்மானங்களையும், அதோடு தற்போது கழகத்தின் நிலை குறித்து விவாதித்து எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன் மொழிந்தார். அந்தத் தீர்மானங்களை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழிமொழிந்தார்.
முக்கிய தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாசித்தார்.
“ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க்கப்படும் பொதுச் செயலாளர் பதவி மீண்டும் உருவாக்கப்படுகிறது. ஆனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தல்களை இந்த பொதுக்குழு ஏற்றுக் கொள்கிறது.
இரட்டைத் தலைமை ஏற்பட்ட பிறகு நிர்வாக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் முடிவெடுப்பதில் பல சங்கடங்கள் ஏற்பட்டன. எதிர்க்கட்சியாக உள்ள இந்த காலத்தில் திமுக அரசையும் கட்சியையும் எதிர்கொள்ள வலிமையான ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் ஆகும்.
கடந்த 14-6-22 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கூட இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டு ஒற்றைத் தலைமை தேவை என்று ஆலோசனை வழங்கப்பட்டது. ஜூன் 23 ஆம் தேதி 2190 பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்திட்டு ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி கடிதம் கொடுக்கப்பட்டது.
மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி, அம்மா ஆட்சி மலரவேண்டும் என்றால் வலிமையான ஒற்றைத் தலைமை உருவாக்கப்பட வேண்டும். எனவே தொண்டர்களின், மக்களின் விருப்பத்துக்கு இணங்க இரட்டைத் தலைமை ரத்து செய்யப்பட்டு பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
இந்த பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட தகுதிகள் நிர்ணயிக்கப்படுகிறது.
கழகத்தில் பத்து வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும், தலைமைக் கழகப் பொறுப்புகளில் தொடர்ந்து ஐந்தாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும், குறைந்தது பத்து மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், பத்து மாசெக்கள் வழிமொழிய வேண்டும். பொதுச் செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். கழக துணைப் பொதுச் செயலாளரை பொதுச் செயலாளர் நியமிப்பார்” என்று தீர்மானத்தை வாசித்தார்.
மேலும் தொடர்ந்த அவர் அடுத்த முக்கிய தீர்மானத்தை உதயகுமார் வாசித்தார்.
”அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பொறுப்பு உருவாக்கப்படுகிறது. கழக இடைக்கால பொதுச் செயலாளர் கழக பொதுச் செயலாளருக்கான பணிகளை செய்ய வேண்டும்”
ஐந்தாவது தீர்மானம், “கழக சட்ட திட்ட விதிகளின்படி பொதுச் செயலாளர் என்ற ஒற்றை தலைமையில் செயல்பட வேண்டும் என்று தொண்டர்களின் விருப்பப்படி புதிய பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்காலப் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. அதன் படி தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் முதலைமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யவேண்டி தேர்வு செய்யப்படுகிறார். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது” என்று வாசித்தார் உதயகுமார்.
இதையடுத்து பொதுக்குழுவில் அனைவரும் கரகோஷம் எழுப்பி ஆரவாரத்தோடு நிறைவேற்றினார்கள்.
அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்ற விதி ரத்து செய்யப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமை ரத்து செய்யப்படுகிறது. அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுகிறார். தற்போது அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி துணைப் பொதுச் செயலாளார் என்று மாற்றப்படுகிறது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒட்டுமொத்த பொதுக்குழுவும் இதை கரகோஷம் எழுப்பி நிறைவேற்றியது.
–வேந்தன்