தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அதற்கான நிவாரண பணிகளில் தமிழக அரசு ஈடுபடவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (அக்டோபர் 15) தொடங்க உள்ளது. மேலும், கடந்த சில நாட்களாகக் கோவை, சேலம், மதுரை, நெல்லை போன்ற உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்ட உள் மாவட்டங்களில் எந்த வித மீட்புப் பணியிலும் ஈடுபடவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது “இந்திய வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தமிழக அரசு செயலிழந்து நிற்கிறது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை தான். ஆனால், சென்னை மட்டுமே தமிழகம் என்ற நினைப்பில் இந்த அரசின் முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் செயல்பட்டு வருவது, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.
மழை வெள்ள காலங்களில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வருவாய்த் துறை அமைச்சர், உள்ளாட்சித் துறைகளை நிர்வகிக்கும் அமைச்சர்கள், சுகாதாரத் துறை அமைச்சர், மின்சாரத் துறை அமைச்சர் உள்ளிட்ட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இந்த ஆலோசனைக் கூட்டங்களில் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
அவர்களையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு, உதயநிதி ஒருவர் மட்டுமே பணியாற்றுவது போன்ற ஒரு மாயையை உருவாக்குவதில் தமிழக அரசு குறியாக உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து தமிழக அரசை நம்பாமல், பொதுமக்கள் குடிநீர், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை முன்னெச்சரிக்கையுடன் வாங்கி வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை மாநகர மக்கள் தமிழக அரசை நம்பாமல் தங்களது இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அருகிலுள்ள மேம்பாலங்களில் வரிசையாக நிறுத்தி வருவதை இன்றைய தினம் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பி வருகின்றன.
தற்போது உதயநிதியை முன்னிலைப்படுத்துவதற்காக மற்ற அமைச்சர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும், அவர்களும் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
தன் மகனுக்கு வெற்று விளம்பரங்கள் மூலம் புகழும், பெருமையும் சேர்க்கும் வேலையை கைவிட்டுவிட்டு, தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள மக்களைக் காக்கும் பணியில் கடமை உணர்வோடு ஈடுபட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கனமழை : பொதுக்கூட்டத்தை ரத்து செய்த ராமதாஸ்
காற்றழுத்த தாழ்வு பகுதி… எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?
வந்தே பாரத் ரயிலில் சிக்கன் படுமோசம்… இது நியாயமா? – கடுப்பான பார்த்திபன்