”காங்கிரஸின் யாத்திரையை கண்டு பயந்துபோய் முதலில் கொரோனாவை காரணம் காட்டிய மத்திய அரசு, தற்போது உளவுத்துறையை கையில் எடுத்துள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் முன்னாள் தலைவரும் கேரள வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தமிழகத்தில் தொடங்கிய அவருடைய நடைப்பயணம் பல மாநிலங்களைக் கடந்து, சமீபத்தில் ராஜஸ்தானில் 100வது நாளை எட்டியது.
அதைத் தொடர்ந்து அவருடைய ஒற்றுமைப் பயணம் தலைநகர் டெல்லியில் நுழைந்தது.
ராகுல் காந்தியின் ஒற்றுமைப் பயணத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தி வருகின்றனர். தவிர கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர்.
குறிப்பாக டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை யாத்திரையில் ராகுல் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். தவிர நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தும்படி மாநில அரசுகளை, மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. அந்த வகையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காவிட்டால், தேசிய ஒற்றுமை நடைப்பயணத்தை ஒத்திவைக்க வேண்டும் என ராகுல்காந்தியை மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ”குஜராத் தேர்தல் பரப்புரையின் போது பிரதமர் மோடி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினாரா” என கேள்வி எழுப்பியிருந்தார்.
தொடர்ந்து ராகுல் யாத்திரை குறித்து பாஜக கலக்கமடைந்து வருவதாகவும், இதைத் தடுத்து நிறுத்த அக்கட்சி சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. என்றாலும், ராகுலின் ஒற்றுமைப் பயணம் 100 நாட்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது.
இந்த ஒற்றுமைப் பயணத்தின்போது டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி, ”இந்தியாவுக்கு சீனாவும், பாகிஸ்தானும் பொது எதிரிகளாக உருவெடுத்துள்ளன.
இனி போர் என ஒன்று வந்தால், இந்தியாவை மேற்கில் இருந்து பாகிஸ்தானும், கிழக்கில் இருந்து சீனாவும் சுற்றிவளைத்து தாக்கும். இந்தியாவுக்கு இது ஒரு சர்ப்ரைஸ் அட்டாக்காக இருக்கும்” எனத் தெரிவித்திருந்தார். இவருடைய பேச்சு, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ராகுல் காந்தியின் இக்கருத்து குறித்து பேசிய பாதுகாப்பு நிபுணர் பிரபுல் பக்ஷி, “ராகுல் காந்தி பேசியதில் புதிய விஷயம் என்ன இருக்கிறது? இரு நாடுகளும் சேர்ந்து தாக்கினாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். போதுமான ஆயுதங்களும் இருக்கின்றன” எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்று உரையாடியவர்களிடம் உளவுத்துறை கேள்வியெழுப்பியுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் , “இந்த யாத்திரை குறித்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பதற்றத்தில் இருக்கின்றனர்.
எனவே யாத்திரையில் பங்கேற்று ராகுல் காந்தியுடன் உரையாடியவர்களிடம் உளவுத்துறை (Intelligence Bureau) தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகிறது. யாத்திரையை கலைக்க வேண்டும் என்றுதான் அவர்கள் இவ்வாறு திட்டம் தீட்டுகிறார்கள். யாத்திரை, இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறும்” என அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
கோயில் நிலம் குத்தகை காலம்: 5 ஆண்டுகளாக உயர்வு!
மத்திய அமைச்சரின் வார்த்தைகள் வலி நிறைந்தவை: ராமதாஸ்