மத்திய உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பாஜகவினர், இந்து முன்னணியினர் வசிக்கும் பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பயங்கரவாதத்துக்கு பயிற்சி அளிக்கிறது, நிதி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டின் பேரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 22, 27 ஆகிய தேதிகளில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தியது.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நடந்த சோதனையைத் தொடர்ந்து தமிழகத்தில் கோவை, தாம்பரம், கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக பலரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தசூழலில் தமிழகத்தில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது.
இதை எதிர்த்து அந்த அமைப்பினர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை நடத்த அனுமதி வழங்கியது.
இந்நிலையில் தமிழகத்திலும், கேரளாவிலும் உள்ள இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்புகள் மாநிலங்களுக்கு தகவல் அனுப்பியுள்ளன.
இந்து தலைவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் , அவர்கள் வசிக்கும் இடம், செல்லும் இடம் ஆகிய பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளா
என்.ஐ.ஏ மற்றும் உளவுத்துறை அமைப்பு கொடுத்த தகவலின் படி, மத்திய உள் துறை அமைச்சகம் கேரளாவில் உள்ள 5 ஆர்.எஸ்.எஸ் தலைவர்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, துணை ராணுவப் படைகளின் கமாண்டோக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
என்.ஐ.ஏ சோதனையின் போது, கேரள பிஎஃப்ஐ உறுப்பினர் முகமது பஷீரின் வீட்டில் இருந்து 5 ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் லிஸ்ட்டை எடுத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகம்
அதுபோன்று தமிழகத்தில் 2 மண்டலங்களாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 4 நிர்வாகிகளுக்கு ஆபத்து இருப்பதாக உளவுத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
அதே சமயத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் வெளியே செல்லும் போது மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் பாஜகவினர், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி அமைப்பினர் வசிக்கும் இடங்களில் டிஜிபி உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமம் முதல் நகரம் வரை முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வசிக்கும் வீடுகள் உள்ள பகுதிகளில் தமிழக போலீசார் இரவு பகலாக ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் 12 முன்பு ஒருமுறை, 12 மணிக்கு பின்பு ஒருமுறை என இரு முறை ரோந்து செல்கின்றனர். கான்ஸ்டபிள் முதல் ஏடிஜிபி வரையிலான அதிகாரிகள் ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். அப்படி செல்லும் போது பணியில் இருப்பதை உறுதிப்படுத்த புகைப்படம் எடுத்து மேலிடத்துக்கு அனுப்புகின்றனர்.
அதுபோன்று, ரோந்துக்கு சென்றதற்கு அடையாளமாக பட்டா புக் எனப்படும் ஒரு ஏட்டில் கையெழுத்திட்டு அந்த பகுதிகளில் உள்ள கடைகளிலோ அல்லது வீடுகளிலோ வைத்துவிட்டு வருகின்றனர்.
இவ்வாறு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய ஆர.எஸ்.எஸ் தலைவர்கள், இந்து முன்னணியினர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
வணங்காமுடி, பிரியா
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி: கோயிலுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த துயரம்!
கடந்த மாதம் பைக் சாகசம் : இந்த மாதம் விழிப்புணர்வு!