தொழுநோய் இல்லத்தில் ஆய்வு : குறைகளை கேட்ட மு.க.ஸ்டாலின்

அரசியல்

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ள விழுப்புரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் வழியில் பரனூர் அரசு தொழுநோய் மறுவாழ்வு இல்லத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 26) தமிழக முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.

இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து விழுப்புரம் புறப்பட்டுச் சென்றார். வழியில் செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள தொழுநோய் மறுவாழ்வு மையத்துக்கு சென்ற முதல்வர் அங்கு ஆய்வு செய்தார்.

முதல்வரின் வருகையையொட்டி மறுவாழ்வு மையத்திலிருந்த முதியவர்கள் அனைவரும் ஓரிடத்தில் அமரவைக்கப்பட்டிருந்தனர்.

முதல்வரை பார்த்ததும் கைத் தட்டி வரவேற்ற அவர்கள், ஐயா நீங்க பேசுங்க என்றதும், நீங்கள் என்ன சொல்லனுமோ சொல்லுங்க என்றார் மு.க.ஸ்டாலின்.

அப்போது ஒருவர் நிறையக் கோரிக்கைகள் இருக்கிறது என்று சொல்ல ஒரு மூதாட்டி, ‘எங்க பசங்கல்லாம் படிச்சுருக்காங்க… எதாச்சு வேலை கொடுங்க’ என்றார்.

தொழுநோய் மறுவாழ்வு இல்லத்துக்கு வண்ணம் அடிக்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இதைக்கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் மனுவாகவும் பெற்றுக்கொண்டார். இல்லத்தில் வசிப்பவர்களுக்குப் போர்வை மற்றும் உடைகளையும் வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து இன்று மாலை 4 மணியளவில் விழுப்புரம் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாட உள்ளார். விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

நாளை காலை 9.30 மணிக்கு 3 மாவட்டங்களைச் சேர்ந்த அரசுத் துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ள உள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிரியா

பிளஸ் 2 ரிசல்ட் எப்போது? எப்படி பார்ப்பது?

எப்பா…. என்ன வெயிலு: குளித்துக் கொண்டே உறங்கும் குரங்குகள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *