உள்ளே வெளியே 2 – முரளி சண்முகவேலன்

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஸ்காட்லாந்து, வேல்ஸ், அயர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட பிரிட்டன் மக்கள், தாங்கள் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனோடு உறுப்பினர் நாடாகத் தொடர்வதா அல்லது பிரிந்துவிடுவதா என்ற முடிவை ஜுன் 23ஆம் தேதியன்று நடக்கும் பொது வாக்கெடுப்பின் மூலம் தெரிவிக்க உள்ளனர். இதையொட்டி நாடாளுமன்ற தேர்தலுக்குக் குறைவில்லாமல் ஊடகங்களில், இணையங்களில் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

‘உள்ளே’ (vote to remain) அல்லது ‘வெளியே’ (vote to leave) என்ற இரண்டு தரப்பினையும் பிரிட்டனில் உள்ள வலதுசாரிக் குழுவே பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சி, இரண்டாக பிளவுப்பட்டு லண்டனின் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சனின் தலைமையில் ‘வெளியே கூட்டணி’ பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. பிரதமர் டேவி காமரூன் தலைமையில் ஐரோப்பியக் கண்டத்துடன் இணைந்திருக்குமாறு ‘உள்ளே கூட்டணி’ பிரச்சாரம் செய்து வருகிறது.

வாக்கெடுப்பின் முடிவுகள் கன்சர்வேட்டிவ் கட்சியில் பிளவு ஏற்படுத்தும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். இந்த வாக்கெடுப்பு ‘ப்ரெக்ஸிட்’ (BREXIT) என்றழைக்கப்படுகிறது. இது BRITAIN + EXIT என்ற இரு வார்த்தைகளின் சுருக்கம். வெளிநாட்டவர்களின் குடியேறல் இந்த வாக்கெடுப்பினைத் தீர்மானிக்கக்கூடிய முக்கியப் பிரச்னையாகி உள்ளது. ‘வெளிநாட்டவர்கள்’ என்பது இந்த வாக்கெடுப்பில் ஐரோப்பியர்களைக் குறிக்கிறது.

நிலப்பரப்பில் ஐரோப்பியக் கண்டத்துக்கு வெளியே அமைந்திருக்கும் பிரிட்டன் என்ற தீவு தன்னை எப்போதும் ஐரோப்பாவோடு முழு மனதோடு இணைத்துக் கொண்டதில்லை. இங்கிலாந்தில் ஐரோப்பியர்களின் குடியேற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகி உள்ளதைக் குறிப்பிட்டு கண்டத்தை விட்டு விலகிட வேண்டும் என்ற பிரச்சாரம் வெளியே கூட்டணியினால் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஐரோப்பிய யூனியனில் பங்கு வகித்தால் உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த எவரும் எந்தநாட்டுக்கும் சென்று வேலை செய்து பிழைக்கலாம் என்பது ஒரு முக்கிய சலுகையாகும். அதாவது, பிரிட்டன் மற்ற ஐரோப்பிய உறுப்பினர் நாடுகளின் வரவுக்கு அதிகபட்ச எண்ணிக்கையெல்லாம் விதிக்க முடியாது.

2014இல் பிரிட்டன் அரசுடைய அறிக்கையின்படி ஐரோப்பியர்களின் நிகரக் குடியேற்றம் 1,84,000 (மற்றவர்கள்: 1,49,000). அரசின் கூற்றுப்படி, இந்த குடியேற்ற எண்ணிக்கை பிரிட்டன் இதுவரை தன் வரலாற்றில் பார்த்ததில்லை. இந்த அதிகபட்ச எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி ‘வெளியே’ தரப்பினர் வாக்குச் சேகரிக்கின்றனர். சாதாரண உழைக்கும் வர்க்க மக்களிடம் இந்த வாதம் எடுபடக்கூடியது. பிரிட்டனின் பொருளாதாரம் சற்று மந்தமாக இருக்கின்ற காரணத்தினால் ‘உள்ளே அணியினர்’ இந்த எண்ணிக்கையை ஆதரித்து பொதுவில் பேச முடியவில்லை. பொருளாதார அறிஞர்களின் கூற்றுப்படி ஐரோப்பியக் குடியேற்றம் பிரிட்டனின் உற்பத்திக்கும், வரிகளுக்கும், வருவாய்க்கும் உகந்தது என்று முன்வைக்கப்படும் வாதம், ஊடக இரைச்சலில் எடுபடவில்லை.

இடதுசாரி அறிவுஜீவிகள், தொழிற்சங்கத் தலைவர்கள், லேபர் (எதிர்க்) கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் ஆகியோர் ஐரோப்பாவுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்று சொன்னாலும், இந்த பொது வாக்கெடுப்பில் இடதுசாரிகளின் பிரச்சாரம் மந்தமாக உள்ளது என்பதே உண்மை. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெரிமி கோர்பின், பல வருடங்களுக்கு முன் பிரிட்டனின் தொழிலாளர்கள் உரிமையைக் காப்பாற்ற முன்னிட்டு ‘வெளியே’ செல்வதற்கு ஆதரவாக இருந்திருக்கிறார்.

இதுகுறித்த காணொளி எங்கும் காணக்கிடைப்பது கோர்பினின் தற்போதைய பரப்புரைக்குச் சாதகமாக இல்லை. மேலும் ஐரோப்பியப் பணியாளர்களைப் பிரிட்டனுக்குக் கொண்டு வருவதற்கு ஆதரவாக பரப்புரை செய்வது பிரிட்டனின் தொழிலாளர் நலன்களுக்கு எதிரானதாகப் போய்விடும் என்ற குழப்பத்தில் லேபர் கட்சி அதை அடக்கி வாசிக்கிறது. கோர்பினின் ‘உள்ளே’ நிலைப்பாடு இன்னமும் உறுதியாக இல்லை என்பதே இங்குள்ள அரசியல் நோக்கர்களின் கணிப்பாகும். தற்போதைய விதியின்படி ஐரோப்பியர்களின் குடியேற்றத்துக்கே தடையற்ற முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதன் விளைவாக நிகரக் குடியேற்றத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கும் முயற்சியாக பிரிட்டன், ஐரோப்பியரல்லாதவரின் குடியேற்றங்களுக்கு அதிக கட்டுப்பாடு விதித்து வருகிறது.

Inside Out Side 2 - Murali Shanmugavelan

உதாரணமாக, தெற்காசிய உணவகங்களில் இந்திய சமையல்காரர்களைப் பணிக்கு அழைத்துக் கொள்ள முடியாமைக்குக் காரணம், ஐரோப்பிய யூனியனின் குடியேற்றக் கொள்கை ஆசியர்களுக்கு சாதகமாக இல்லை என்பதே காரணமாகும். இந்நிலையில் கண்டத்தை விட்டு விலகிவந்தால் ஐரோப்பியரல்லாதோர் – குறிப்பாக காமன்வெல்தைச் சேர்ந்த பழுப்பு, கருப்பு, வெள்ளை இனத்தினர்கள் – அதிக அளவில் குடியேற வாய்ப்புண்டு என்று உள்ளூர் ஆசியர்களிடமும் கறுப்பர்களிடமும் வலதுசாரிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எனக்குத் தெரிந்த சில படேல்களும், சில்ஹெட்டைச் சேர்ந்த சௌத்திரிகளும், குடும்பத்தை எப்படியாவது கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கின்ற தமிழ் அன்பர்களும் ‘கண்டம் விட்டு வெளியே வந்து விட’ வாக்களிப்பது சமயோசிதம் என்று கனவு காண்கின்றனர். வெளியே அணியின் அரசியல் தலைவர்கள் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். கொள்கைகளையும், வெள்ளை பிரிட்டனின் பெருமைகளையும் உயர்த்திப் பிடிப்பவர்களாவர்.

ஒருவேளை மக்கள் வெளியே செல்ல வாக்களித்தால், அது ஆங்கிலக் காலனியாதிக்கத்தின் பெருமையையே நிலைநாட்டும். யார் ஆங்கிலேயர் (who is English?) என்பது பிரதானமான கேள்வியாகும். எனவே காமன்வெல்த்தர்களுக்கு அளிக்கும் வலதுசாரி பிரபுக்களின் வாக்குறுதிகளெல்லாம் நிறைவேற்றப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதே உண்மையாகும்.

ஐரோப்பாவுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்ற ‘உள்ளே’ கூட்டணியில் பெரும் தொழில் முதலாளிகள், பொருளாதார நிபுணர்கள், கல்விமான்கள், அறிவியலாளர்கள், தாராளவாதிகள், இடதுசாரிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே கோட்டில் நிற்பதே மக்களுக்கு கடுங்குழப்பமாக இருக்கிறது. ஐரோப்பிய யூனியனின் இந்த வாக்கெடுப்பு, இடது – வலது அரசியல் சித்தாந்த இருகூறுகளை உடைத்திருக்கிறது.

இதன்விளைவாக, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் பொருளாதார நிபுணர்கள் தங்களது நம்பகத்தன்மையை பெருவாரியாக மக்களிடம் இழந்திருக்கிறார்கள். இந்த நம்பகத்தன்மை இழப்பே ஒரு ஊடக விவாதப் பொருளாகவே மாறியிருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய யூனியனில் உள்ள உறுப்பினர் நாடுகள் தங்களுக்குள் போரில் ஈடுபடவில்லை என்பதும், எல்லைத் தகராறில் அரசியல் விரயம் செய்யாததும் மிக முக்கியமான வரலாற்று நிகழ்வாகும்.

மேலும், இந்த அமைதி அவர்களது பொருளாதார முன்னேற்றத்துக்கு மிக முக்கியமான காரணமாகும். ஆனால், தற்போது ஐரோப்பாவுக்குக் கண்டம் தாண்டி வருகின்ற தீவிரவாதம், வீட்டுக்குள் வளர்கிற மத தீவிரவாதம், அகதிகள் பிரச்னை, 2007-க்கு பிறகு ஏற்பட்ட உலகப் பொருளாதார நசிவினால் ஏற்பட்ட சவால்கள் இவையனைத்தையும் ஒருங்கிணைந்த ஐரோப்பாவினால் வெற்றிகரமாக சமாளித்திட முடியும் என்பது ‘உள்ளே’ அணியின் வாதம். இவற்றில் நிறையவே உண்மையும் உள்ளது.

கிரீஸ், இத்தாலி நாடுகள் திவாலாவதை ஐரோப்பிய யூனியனே தடுத்து நிறுத்தியது. அதே சமயத்தில் பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் வளங்களை நலிந்த ஐரோப்பிய நாடுகளுக்கு நிதியுதவியாக தாரை வார்க்கப்படுவதை விரும்பவில்லை. ஐரோப்பிய யூனியன் ஒரு பன்னாட்டு வங்கி முதலாளி போன்று செயல்படுவதை ‘வெளியே’ கூட்டணி விரும்பவில்லை. பொருளாதாரம், குடியேற்றம், தீவிரவாதம் போன்ற பிரச்னைகளே வருங்கால ஐரோப்பாவின் ஒற்றுமையினை நிர்ணயிக்கும் சக்திகளாகும்.

மக்கள் நல அரசுகள் / திட்டங்கள், மதச்சார்பின்மை, தேர்தல் ஜனநாயகம், முதியோர்களுக்குக் கணிசமான ஒய்வூதியங்கள், பெருத்த அரசு செலவினங்கள், அனைவருக்கும் கல்லூரி வரை இலவசக் கல்வி, வேலையில்லாதோருக்கு ஆதரவுத் தொகை போன்ற சமூகநல அம்சங்களின் அடிப்படையிலான ஒன்றுபட்ட ஐரோப்பியச் சித்தாந்தம் (pan-European ideology) கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இந்நிலையில் பிரிட்டன் வெளியே வந்தால் ஐரோப்பிய யூனியன் உடையும் நிலை வலுப்படும் என்று ஜெர்மனியில் இருந்து வெளிவரும் ‘டெர்ஸ்பீகல்’ இதழ் கவலை தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து பேசுவோம்…

கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்

Inside Out Side 2 - Murali Shanmugavelan

[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.

[முரளி சண்முகவேலன் முழுமையான கட்டுரைக்கு]

https://minnambalam.com/political-news/special-column-murali-shanmugavelan/

முர் அலி 1 – முரளி சண்முகவேலன்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *