தமிழக பாஜகவில் 25 வருடங்களாக இருக்கும் நடிகை கௌதமி இன்று (அக்டோபர் 23) அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கான காரணமாக நீண்ட ஆங்கில அறிக்கையையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதில்,. “பாஜகவில் இருக்கும் அழகப்பன், எனது சொத்துகளை ஏமாற்றிவிட்டார். அவரை பாஜகவில் இருப்பவர்களே காப்பாற்றுகிறார்கள்” என்று வேதனையோடு தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தவர் நடிகை கௌதமி. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதிப் பொறுப்பாளராக பணியாற்றினார்.
அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பியும் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதையும் இன்றைய தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தனது தேர்தல் வாய்ப்பு மறுக்கப்பட்டதை விட தனது சொத்துகளை ஏமாற்றியவரை கட்சி காப்பாற்றுகிறதே என்பது கௌதமியின் பெருங்கவலை.
கௌதமி குற்றம் சாட்டும் அழகப்பன் என்பவர் யார்? அவரது பின்னணி என்ன? அவரை பாஜக பெரும்புள்ளிகள் காப்பாற்றினார்களா? இந்த வினாக்களுக்கு விடை தேடி விசாரித்தோம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என சுமார் 125 படங்களில் நடித்துள்ள புகழ் பெற்ற நடிகை கௌதமி, காலச் சூழலால் ஒரே மகளுடன் தனிமையில் வாழ முடிவெடுத்தார். 2004இல் மார்பக புற்றுநோய் தாக்கப்பட்ட நிலையில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார். சிறு குழந்தையோடு ஒற்றைப் பெற்றோராக கௌதமி தத்தளித்த நிலையில்தான், அவருக்கு அறிமுகமாகிறார் அழகப்பன்.
அழகப்பன் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர். சென்னை மற்றும் சுற்றுப் புறங்களில் ரியல் எஸ்டேட் தொழிலில் சினிமா புள்ளிகள், அரசியல் புள்ளிகள் பலருக்கும் உதவியிருப்பதாக கௌதமிக்கு அறிமுகமானார் அழகப்பன்.
அவர் பாஜகவில் இருப்பதாகவும் கூறியதால் கௌதமிக்கு இன்னும் அவர் மீது நம்பிக்கை அதிகமானது. ஏனென்றால் கௌதமியும் பாஜகவில்தானே இருந்தார்.
கௌதமி தான் பல ஆண்டுகளாக நடித்து சம்பாதித்த பணத்தில் சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டத்தில் நிலங்களை வாங்கிப் போட்டிருந்தார். அதை ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் மூலம் தெரிந்துகொண்டுதான் திட்டமிட்டு கௌதமியிடம் அழகப்பன் அறிமுகம் ஆனதாகவும் சொல்கிறார்கள்.
ஆரம்பத்தில் கௌதமிக்கு மிக நம்பிக்கைக்குரிய நபராகவே நடந்துகொண்டார் அழகப்பன். சினிமா உலகில் யார் யாருக்கெல்லாம் உதவியிருக்கிறேன் என்று சில முக்கிய நபர்களின் பெயர்களை கௌதமியிடம் சொல்லியுள்ளார் அழகப்பன்.
அதனால் அழகப்பனை முழுமையாக நம்பிய கௌதமி, தனது மகளின் எதிர்காலத்துக்காக டெபாசிட் செய்ய வேண்டும் என்பதால் தனக்கு சொந்தமான சில இடங்களை விற்பனை செய்வதற்கு அழகப்பனிடம் ஆலோசனைகள் கேட்டார். அழகப்பனும் அந்த இடங்களை மிக நல்ல விலைக்கு விற்று கௌதமியிடம் பணத்தைக் கொடுத்தார்.
இதனால் அழகப்பன் மீதான கௌதமியின் நம்பிக்கை அதிகரித்தது. எந்த அளவுக்கு நம்பிக்கை என்றால்… ‘சொத்துகளை விற்பதற்காக நான் ரிஜிஸ்டர் ஆபீசுக்கெல்லாம் வந்து செல்ல முடியாது. அதனால் எனக்காக நீங்களே இதெல்லாம் பாத்துக்கங்க’ என்று சொல்லி தனது சொத்துகளுக்கான பவர் உரிமையை அழகப்பன் பெயருக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார் கௌதமி.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
இந்த அதீத நம்பிக்கையின் விளைவாகத்தான் இன்று புலம்பலுக்கு உள்ளாகியுள்ளார் கௌதமி.
கௌதமி சினிமாவில் பெரிய அளவுக்கு நடிக்காவிட்டாலும் தனது வேறு சில பிசினஸ்களில் பிசியாக இருந்தார். அதனால் தான் சம்பாதித்துப் போட்ட பணத்தில் வாங்கிய இடங்களைப் பற்றி கவனிக்க அவருக்கு நேரமில்லை.
இந்த நிலையில்தான் தனக்கு கௌதமி கொடுத்த பவர் பத்திரத்தை வைத்து வேறு சில வேலைகளில் ஈடுபடத் தொடங்கினார் அழகப்பன். அதாவது கௌதமியின் சொத்துகளின் மீது கடன் வாங்குவது, சில சொத்துகளை விற்பது என்று அழகப்பன் செய்த பல வேலைகள் கௌதமிக்கு தெரியவே இல்லை.
ஒரு கட்டத்தில் கௌதமிக்கு வந்த நோட்டீஸ் ஒன்றுதான், அழகப்பனின் இன்னொரு பக்கத்தை கௌதமிக்கு காட்டியிருக்கிறது.
2021 செப்டம்பர் 24 ஆம் தேதி கௌதமிக்கு வருமான வரித்துறையில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்திருக்கிறது. அதாவது, “திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்த கௌதமிக்கு சொந்தமான நிலம் சுமார் ரூ. 11 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
அதற்கான கேபிடல் கெயின்ஸ் எனப்படும் வரி 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நீங்கள் இன்னும் செலுத்தவில்லை. உடனே செலுத்துங்கள்’ என்று நோட்டீஸ் வந்திருக்கிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் கௌதமி. ஏனென்றால் அந்த நிலத்தை விற்றதாக தனக்கு அழகப்பன் கொடுத்தது 4 கோடி ரூபாய்தான். ஆனால் 11 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறார்.
இது ஐடி நோட்டீஸால்தான் தெரியவந்திருக்கிறது. இதன்பின் அழகப்பனை அழைத்துக் கேட்டிருக்கிறார். ‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை. பாத்துக்கலாம்’ என்று ஏதேதோ சொல்லியிருக்கிறார் அழகப்பன்.
அப்போதுதான் அழகப்பன் மீது கௌதமி வைத்திருந்த நம்பிக்கையின் மேல் இடி விழுந்திருக்கிறது.
சுதாரித்துக் கொண்ட கௌதமி தனது மற்ற சொத்துகளின் வில்லங்க சான்றிதழ்களை கேட்டு வாங்கிப் பார்த்திருக்கிறார். அப்போதுதான் அழகப்பன் செய்த பல வில்லங்கம் தெரியவந்திருக்கிறது.
அழகப்பனிடம் மிச்சம் இருக்கும் சொத்துக்களைக் காப்பாற்ற போராடியிருக்கிறார்.
ஆனால் அழகப்பன், ‘எனக்கு பாஜகவில் பெரும்புள்ளிகளை எல்லாம் தெரியும், உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது’ என்று கூறியிருக்கிறார். மேலும் அதிர்ச்சி அடைந்த கௌதமி தமிழக பாஜக புள்ளிகள் பலரிடமும் இந்த விவரத்தைச் சொல்லி உதவி கேட்டிருக்கிறார்.
எந்த பலனும் இன்றி விரக்தி அடைந்தவர், தனது சினிமா நண்பர்கள் சிலரிடம் இதைச் சொல்லி புலம்பியுள்ளார். அவர்களில் சிலர் சொன்ன யோசனையின் பேரில் திமுகவின் முக்கிய அமைச்சர் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றிருக்கிறார்.
அதன் பிறகுதான் சென்னை காவல்துறை ஆணையரிடம் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி புகார் கொடுத்தார் கௌதமி. அந்த புகாரை சம்பந்தப்பட்ட மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிக்கு பரிந்துரை செய்துள்ளார் கமிஷனர்.
அந்த புகார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுக்க காலதாமதமானது. ஏனென்று கௌதமி விசாரித்தபோதுதான், அழகப்பன் தனக்கு நெருக்கமான பாஜக புள்ளிகளை வைத்து கௌதமியின் புகார் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்து வருகிறார் என்று தெரிந்தது.
விரக்தியின் விளிம்புக்கே சென்ற நிலையில்தான், தனது புழுக்கத்தை பாஜகவின் தேசியத் தலைவர்களும் தெரிந்துகொள்ளட்டும் என்று ஆங்கிலத்தில் விரிவான அறிக்கையை வெளியிட்டு விலகிவிட்டார்.
அழகப்பன் அவ்வளவு செல்வாக்கானவரா?
“அழகப்பன் பாஜகவில் அகில இந்திய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலருக்கும் நெருக்கமானவர். நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தனக்கு நல்ல நட்பு இருப்பதாக சொல்லி இவர் வங்கிகள் விஷயத்திலும் சில வேலைகளைச் செய்திருக்கிறார்.
ஒரு தனியார் வங்கி ஊழியர்களுக்கு ஓய்வுக்குப் பின் கிடைக்க வேண்டிய பணப் பலன்கள் தாமதமாகியுள்ளது. அதுபற்றி நிதியமைச்சரிடம் சொல்லி பெற்றுத் தருவதாக அந்த வங்கி ஊழியர்களிடம் பணம் பார்த்துள்ளார்.
மேலும் காசியில் இருக்கும் நகரத்தார் சொத்து ஒன்று ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது அதை மீட்டுத் தர வேண்டும் என்று அழகப்பனிடம் சிலர் முறையிட்டுள்ளார்கள். அவர்களை லக்னோ அழைத்துச் சென்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் முன் உட்கார வைத்திருக்கிறார் அழகப்பன்.
அவர்கள் கிட்டத்தட்ட விவகாரம் முடிவுக்கு வந்துவிடும் என்று அழகப்பனை கவனித்திருக்கிறார்கள். ஆனால் ஒன்றும் ஆகவில்லை. இப்படி இங்கே கௌதமியை போல அகில இந்திய அளவில் பலரிடமும் விளையாடியிருக்கிறார் அழகப்பன்” என்கிறார்கள் பாஜக வட்டாரங்களிலேயே.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
கௌதமியிடம் இன்று தொலைபேசியில் தொடர்புகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் பாஜகவில் இருந்து விலக வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆனால் கௌதமி இது தொடர்பாக திமுக புள்ளிகளிடம் பேசி வருவதாக சொல்கிறார்கள். அதே நேரம் புகாருக்கு உரிய அழகப்பன் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார்.
–வணங்காமுடி