”தொழிலாளர் துறை பல நன்மைகளைப் பயக்கும் வகையில் பாலமாக செயல்படுகிறது” என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய வேலையளிப்போர் கூட்டமைப்பின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று (நவம்பர் 18) சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”1920ஆம் ஆண்டுதான் தென்னிந்திய தொழிலதிபர்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. அந்த ஆண்டுதான் திராவிட கழகத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சி ஆட்சியில் அமைந்தது.
அப்போது பல்வேறு முயற்சிகள் தொழில்துறையை மேம்படுத்த முன்னெடுக்கப்பட்டன.
சென்னை மாகாணத்தின் தொழில்வளர்ச்சியில் முக்கிய பங்கு திராவிட கழகத்துக்கு உண்டு. தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு கடந்த 15 மாதங்களில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இன்றைக்கு நமது ஆட்சியின் இலக்காக, அனைத்துத் துறையிலும் வளர்ச்சி என்பதை திராவிட மாடல் கோட்பாடாகக் கொண்டுள்ளோம் என்றால், அதற்கு அரசியல் – சமூகவியல் மட்டுமல்ல பொருளாதாரமும் – தொழில் வளர்ச்சியும் உள்ளடங்கி இருக்கிறது.
இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் உருவாக முயற்சி நடைபெற்று வருகிறது. தமிழக வருமானத்தை 1 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்போருக்குத் தொழிலாளர் துறையானது பல நன்மைகளைப் பயக்கும் வகையில் ஒரு பாலமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியாவில் தலைசிறந்த இடத்தைத் தமிழகத் தொழில்துறை பெற வேண்டும். அதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் அரசானது உங்களுக்கு வழங்கும்.
தொழிலை மட்டுமல்ல, தொழிலாளர்களையும் வளர்க்கும் கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உண்டு.
அரசு, தொழிலதிபர்கள் – தொழிலாளர் ஆகிய முத்தரப்பும் கைகோத்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது எப்போதும் இல்லாத அளவுக்கு உயரும். இதுவே இந்த அரசினுடைய குறிக்கோள். இவற்றை நோக்கியே நாம் பயணிக்கிறோம்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
விஜய்யின் வாரிசுக்காக களமிறங்கிய சீமான்
100 யூனிட் மானிய மின்சாரம் ரத்தா: செந்தில்பாலாஜி பதில்!