இந்தியம் ! ஹிந்தியம் ?

அரசியல் சிறப்புக் கட்டுரை

ஸ்ரீராம் சர்மா

சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன். அங்கே தேசியக் கட்சியை சார்ந்த முக்கியஸ்தர் ஒருவரும் வந்திருந்தார்.

விழா முடிவில் முதுக்குப்புறமாய் வந்தவர் வலதுகரம் கொண்டு இடது கரம் பற்றியபடி கேட்டார்…  

“இலக்கிய வாசனை கூடிய உங்கள் கட்டுரைகளை நானும் தொடர்ந்து வாசிக்கிறேன். வாழ்த்துகிறேன். ஆனாலும், திராவிடத்தை விடாமல் உயர்த்திப் பிடித்து கொண்டே இருக்கிறீர்களே. அது ஏன்? ”

அவரிடம் மிகப் பணிவண்போடு சொன்னேன்…

“ஐயா, நானும் தேசியவாதிதான். ஆன்மீகவாதிதான். எண்ணிக்கையில் ஆயிரம் தொடும் ஆன்மீகப் பாடல்களை புகழ்பெற்ற பாடகர்களுக்காக எழுதியவன் நான். இன்றளவும் எனது பாடல்கள் ஒலிக்காத ஊரில்லை. கிராமங்களில்லை. யூ ட்யூபில் அவைகள் பல மில்லியன் கணக்கில் கேட்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம்.  

ஆனாலும், திராவிட சித்தாந்தம் என்பது என் ரத்தத்தில் ஊறிப் போனது. எனது நிலைப்பாட்டுக்கு ஆழமான காரணங்கள் உள்ளன. நான் தொழும் இறைவன் கூட அதை மறுக்க மாட்டான்” என்றேன். 

“ஓஹோ, அப்படியென்ன அந்த நிலைப்பாடு” என்றார். 

அங்கிருந்த நாற்காலிகளில் இரண்டை இழுத்துப் போட்டு எதிரெதிரே அமர்ந்து பதினைந்து நிமிடங்கள் போல பேசினேன். வேகமாக கால்களை ஆட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தார்.  

“திராவிடம் என்பது அடிப்படையில் நிலப்பரப்பை குறித்தானது என்றாலும் இந்த நிலப்பரப்பின் பால் பரந்து வாழ்ந்த அன்றைய மாந்தர்களின் உணர்வுகள் யாவும் ஓர்மைப்பட்டதே ! 

தங்களுக்கெனத் தனித்த மொழியும் கலாச்சார விழுமியங்களும் கொண்டு அன்றவர்கள் வாழ்ந்தாலும் அவர்கனைவரும் ஓரினத்தவரே ! 

அவர்களுக்கான ஒட்டுமொத்த பூகோள அடையாளம் திராவிடம் என்பதே ! அதன் ஆணி வேர் தமிழகமே !

1956ல் மொழிவழியாகத்தான் மாகாணத்தை பிரித்தார்களேயன்றி இன வாரியாக அல்ல. அதன் காரணம் என்ன தெரியுமா ?” என்றேன்.

“சொல்லுங்களேன்” என்றார், 

“கேளுங்கள், திராவிட இனத்தை அதன் அடிப்படையான உணர்வோட்டங்களை எது கொண்டும் பிரித்துவிட முடியாது என்பதும்… அப்படிப் பிரித்தால் ‘திராவிட உத்கல வங்கா’ என இந்திய வரைபடத்தின் கீழ் முனைகொண்டு வலது முனையோடப் பாடிக் கொடுத்த தாகூரின் அடர்ந்த தாடி – அலங்காட்டில் அலையும் ஆட்டுத் தாடியாகிவிடும் என்பதும் அன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருந்திருந்தது “ என்றேன். 

“ஆரியம் குறித்த உங்கள் கருத்து என்ன?” என்றார்.

“அது குறித்து கம்பனிடம் கேட்டுக் கொள்ளுங்கள். திராவிடக் கொள்கையை நிலை நிறுத்துவதே எனது நோக்கம்” என்றேன்.

“சரி, மொழிவாரியாக பிரிக்கப்பட்ட மாநிலங்கள் எதுவொன்றும் திராவிடம் என்னும் நில – இன அடையாளங்களை வலியுறுத்தாத போது…

நீங்கள் மட்டும் திராவிடம் திராவிடம் என்று ஓயாமல் கூவிக் கொண்டே இருக்கின்றீர்களே, உங்களிடமிருந்து பிரிந்து போன மற்ற மூன்று மாநிலங்களும் அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறதா ?” எனப் பழைய பல்லவியை பாடிக் காட்டினார். 

Indiyam - Hindiyam? Sriram Sharma

“பொறுங்கள் ஐயா, காலம் ஒன்று வருமானால் நிச்சயம் எழுந்து சொல்லும்…” என்றதோடு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டேன்.

கவனிப்போம். 

இன்று இங்கிலாந்தில், ஆஸ்திரேலியாவில், ஏன் பாகிஸ்தானில்கூட குடியுரிமை கொண்ட இந்தியர்கள் உண்டு. அவர்கள் அந்தந்த நாட்டின் குடிமக்களாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்கிறார்கள்.

அதை தவறென்று சொல்லிவிட முடியாது. அது இயல்பானது. அழகானது.

ஆனால், கிரிக்கெட் போட்டி என்று வரும்போது – மைதானத்தில் பெருந் திரளாகக் கூடி, ‘கம் ஆன் இந்தியா’ என்றுதானே கோஷமிடுகிறார்கள் ! 

காரணம் என்ன ? தனக்கெனவோர் தனித்த அடையாளத்தை நிலைநிறுத்தப் போராடும் மனித இனத்தின் கூச்சரிப்பே அது.

அது தேசப்பற்று எனில் – இனப்பற்று என்றும் ஒன்று உண்டு அல்லவா !? 

அவசியம் ஒன்று நேரும்போது திராவிட இனமானது ஒன்று கூடித் தன் கூச்சரிப்பின் எழுச்சியை நிச்சயம் காட்டி நிற்கும். அதற்கான அரசியல் அவசியம் இன்னமும் நேரவில்லை. அவ்வளவே !

ஆம்,

திராவிடம் என்பதற்கு தனித்ததோர் கலாச்சாரம் உண்டு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் அதன் பெருங்கூறு. 

போலவே, ஒவ்வொரு ப்ரதேசத்துக்கும் தனித்தன்மை உண்டு. அவைகளை மொத்தமாக மறுத்துவிட்டு, ஒட்டு மொத்த இந்தியத்துக்கும் ஒரே மொழி. அது ஹிந்தி மொழி என்றாலதை ஏற்க முடியுமா ? 

எங்கும் ஹிந்தியம் என்றாலதில் நியாயமுள்ளதா ?

எங்கும் ஹிந்தியம் என்னும் பொருந்தாக் கொள்கையை அருகாமையில் இருக்கும் மராட்டிய மாநிலமாவது இதுகாறும் ஏற்றுக் கொண்டு விட்டதா ? இல்லையே ! 

தன் மொழி சார்ந்த தனித்துவத்தை நிலைநிறுத்த ஓயாமல் போராடிக் கொண்டிருக்கும் மராட்டியத்துக்கு இருக்கும் மொழி உணர்வு, செம்மொழி கண்ட தமிழகத்துக்கு இருத்தலாகாதா ? 

சொல்லுங்கள், மூவாயிரம் ஆண்டுகளாய் ஆகிவந்த செம்மொழி ஒன்று ஒப்பற்ற இலக்கணங்களையும் இணையற்ற இலக்கிய ஆரங்களையும் தன்னகத்தே கொண்டு கலகலவென நிலவிப் பொலியும் இத்திருநாட்டில், 

சோழகாலத்துக்கும் பின் தோன்றி இன்னமும் பழுத்துத் தொலையாததோர் வறட்டு மொழி ஒன்றைக் கொண்டு வந்து வைப்பேன் என்றால் அது அவலமல்லவா ? நாகரீகக் கொச்சையல்லவா ?  

அன்றந்த நாளில்….

Indiyam - Hindiyam? Sriram Sharma

மகாகவி பாரதியாருக்கு ஃப்ரெஞ்ச் மொழி உட்பட பதினோரு மொழி தெரிந்திருந்தது. ஃப்ரான்ஸ் நாட்டின் ஆளுகையிலிருந்த பாண்டிச்சேரி முதல் காசி வரையில் சென்று வந்த அவருக்கு அவசியம் ஏற்பட்டதால் அத்துனை மொழிகளைக் கற்றார் 

எனது தந்தையாரும் கூட தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, துளு, கொங்கணி, மலையாளம், சமஸ்கிருதம் என ஏழு மொழியை அறிந்திருந்தார். காரணம், மைசூர் சமஸ்தானம் எங்கும் சுற்றித் திரிந்த அவருக்கு அது தேவைப்பட்டிருக்கிறது. 

ஆம், அவசியம் ஏற்பட்டால் ஸ்பானிஷ் மொழியையும் கூட தமிழர்கள் கற்பர். அது அவரவர் விருப்பம். விருப்பமற்றவர்களின் மேல் மொழி என்றல்ல எது ஒன்றையும் திணிப்பது தகுமா ? அநாகரீகமல்லவா ?

இந்தியாவில் 43 சதவிகிதம் பேர் ஹிந்தி மொழி பேசுகிறார்கள் என்பதால் அதனை பொது மொழியாக்கி விட முடியுமா ? 

தெரிந்துதான் கேட்கிறேன். ஹிந்தி மொழியை வெகுஜன மொழியென்று உறுதிபட சொல்லிவிட முடியுமா ? 

அப்படியெனில், வடஇந்திய திரைப்படங்களின் பெரும்பாலான பாடல்களும் – வசனங்களும் ஏன் உருது மொழியைத் தழுவியபடி பிழைக்கின்றன ? உருது மொழி கலக்காத ஹிந்திக்கு அழகுண்டா ? பதிலுண்டா ?  

ஹிந்தியம் என்பது மொழித் திணிப்பு மட்டுமல்ல. அது கடந்து, ஆளுமைத் திணிப்பாகவும் கூட அது எழக் கூடும் என்பதே எனது அச்சம்.

கவனியுங்கள்… 

கடந்த நாளில் உலக கிரிக்கெட் டி 20 போட்டியில் மளமளவென முன்னேறி வந்த இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தலைகவிழ்ந்தபடி வெளியேறியது. அட, போட்டி என்றால் அதில் வெற்றி தோல்வி சகஜம். அதை விட்டுத்தள்ளுவோம்.

ஆனால், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சொன்ன அந்த வார்த்தைகள்தான் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

“அஸ்வின் ரவிச்சந்திரன் எடுத்த விக்கெட்டுகளெல்லாம் அவர் எடுத்ததல்ல. பேட்ஸ்மேன்கள் தாங்களாகவே முன் வந்து கொடுத்த விக்கெட்டுகள்தான். அஸ்வினை தூக்கிவிட்டு பதிலாக சாஹலை ஆடவிடலாம்” என்றார்.

Indiyam - Hindiyam? Sriram Sharma

கபில்தேவ் என்னும் மரியாதைக்குரிய ஆளுமையே அப்படி பேசுகிறது என்றால் அப்படி அவரை பேச வைத்தது எது ? இருவரும் ஹிந்திய மண்ணை சார்ந்தவர்கள் என்பதுதானா ? 

ஹிந்தியம் வாழ முந்தைய ஆட்டத்தை வென்று கொடுத்த திறமையுள்ள தெற்கத்தி விளையாட்டு வீரனை பொருந்தாப் பழி சொல்லி அழித்துவிட முனையலாகுமா ? தகுமா ?

இது ஒரு உதாரணம்தான். இப்படி எத்துனை எத்துனையோ.  

டெல்லி, வாரணாசி, மும்பாய், என ஓரளவுக்கு சுற்றி வந்தவன் சொல்கிறேன். அவர்களுக்கு தென்னகம் குறித்த எந்தப் புரிதலும் இல்லை. மதராஸி, தோசை, சினிமா என்பதைக் கடந்து வேறெந்த பரீட்சயமும் அவர்களுக்கில்லை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.

குறித்துக் கொள்ளுங்கள்.

இந்தியம் என்பது மிகப் பரந்துபட்டது. அதனை ஓர் குடையின் கீழ் ஆள முற்படுவது மிக மிகக் கடினமானது. கொடுங்கோல் செய்த முகலாய மாமன்னர்களாலும் ஏகாதிபத்தியக் கிழக்கிந்தியக் கம்பெனியினராலும் கூட முடியாமல் போன பெருங்கனவு அது.

அதனால்தான் விடுதலை இந்தியாவில் பாரத மண்ணை மாநிலங்களாகப் பிரித்து ஜனநாயக வழியில் தனித்தனி முதலமைச்சர்கள் இருப்பது நலமென முடிவெடுத்தார்கள். 

அதனையும் கடந்து அனைவரையும் உள்ளடக்கி ஓர் குடையின் கீழ் ஆண்டுவிட முடியும் என யார் முனைந்தாலும், பாரதப் பெருமண்ணின் நீள அகலங்களில் வேர் பாய்ச்சியிருக்கும் இன மொழி கலாச்சாரங்களைக் குறித்த அக்கறை அவர்களின் ஆழ்மனதில் இருந்தாக வேண்டும். 

விரவி நிற்கும் இன மொழி கலாச்சாரங்கள் குறித்த தனித்த மரியாதையை நாடெங்கும் பரவலாக்கி வைக்கும் வீரிய நோக்கம் ஆட்சியாளர்களுக்கு இயல்பாகவே இருந்தாக வேண்டும்.

உச்சிக் காஷ்மீரத்தின் கலாச்சாரமும் , தென்கோடித் தமிழகத்தின் கலாச்சரமும் பின்னியிருக்க செய்யவேண்டும். அந்த நிலையினை எட்ட அனைவரும் ஒன்றுபட்டு பொறுமையாக உழைத்தாக வேண்டும்.

அதற்கெல்லாம் நேரமில்லை. நாங்கள் ஒன்றை சொல்வோம். நீங்கள் அதைக் கேட்டாக வேண்டும் எனத் திணிக்க முயன்றாலதை அறிவுலகம் மட்டுமல்ல – ஜனத்திரளும் ஏற்காது.

ஜனநாயகம் மிகப் பொல்லாதது.  

அதனை ஆடுகளின் பட்டிகளாக பாவித்து, அதன் உரிமையாளர்களை மிரட்டி அடக்கி அல்லது விலை கொடுத்து வாங்கி பதவி சுகம் காண விரும்பும் அரசியல்வாதிகளை அது நெஞ்செரிய பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. 

மூர்கத்தை உள்ளடக்கியபடி மௌனமாக நகரும் நதிபோலத்தான் – நூற்று நாற்பது கோடி ஜனத்திரளும் பைய நகர்கிறது என்பதை உணர்ந்தபடி அரசியலாடுவது ஆள்வோர்க்கு நல்லது. 

முடிவாக சொல்கிறேன்…

தேசிய கீதம் ஒலிக்கக் கேட்டால் நூற்று நாற்பது கோடி ஜனமும் சட்டென எழுந்து மனம் கசிந்து நிற்கும். 

காரணம், இந்தியம் என்பது தேசியம் பாற்பட்டது. அது, உணர்வு பூர்வமானது.  

ஹிந்தியம் என்பதோ ஆளுமையின் பாற்பட்டது. 

உணர்வுள்ள எவராலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. 

கட்டுரையாளர் குறிப்பு

ஸ்ரீராம் சர்மா
வே.ஸ்ரீராம் சர்மா

எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

யார் அந்த திருவள்ளுவர் !? வே.ஸ்ரீராம் சர்மா

கொண்டாட்டம் என்னுமொரு மதம்! வே.ஸ்ரீராம் சர்மா

+1
0
+1
1
+1
0
+1
6
+1
1
+1
0
+1
0

1 thought on “இந்தியம் ! ஹிந்தியம் ?

  1. உங்கள் முந்தைய கட்டுரைகளை படித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் உங்கள் எழுத்தின் சாரம் பாஜக என்னும் வலதுசாரிகளை நோக்கி. ‘டேய் ஒழுங்கா பன்னித் தொலைங்கடா தப்புப் பன்னி மாட்டிக்காதிங்க மக்கள் உங்கள ஏத்துக்க மாட்டாங்க’ என்றெ ளியிலேயே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *