ச.மோகன்
இருள் கிழிக்கும் ஒளிகீற்றாய் இந்தியாவில் காணப்பெறும் மனித உரிமை நிலை குறித்து அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் கவலை தெரிவித்தன. கடந்த 10.11.2022 அன்று இந்தியா மீது ஐ.நா.வின் உலகளாவிய காலமுறை மீளாய்வின் (Universal Periodic Review-UPR-IV) 41 ஆவது அமர்வு ஜெனீவா நகரில் நடைபெற்றது.
இந்தியா கூறியது என்ன?
இந்நிகழ்வில் பங்கேற்ற இந்தியக் குழுவை வழிநடத்திய சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா பேசிய முக்கியமானவற்றின் சுருக்கம் கீழ்க்கண்டவாறு:
- 1992 ஆம் ஆண்டு இந்தியாவில் மனித உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து தேசிய மனித உரிமை ஆணையம் நிறுவப்பட்டது. 24 மணி நேரமும் புகார் மனுக்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- ஆள்கடத்தல், அடிமைத்தனம் என்பனவற்றை ஒழிக்க இந்திய குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 23 இல் 2013 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது.
- மனித உரிமை மீறல்களில் மிகவும் மோசமானது பயங்கரவாதம் ஆகும். இது உயிர் வாழும் உரிமை மீது நடத்தப்பெறும் தாக்குதல் ஆகும். எனவே இந்தியாவின் இறையாண்மையை ஒற்றுமையைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- மனித உரிமைகளின் தரங்களைக் கடைப்பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறைக்கும் பிற துறைக்கும் மனித உரிமை தொடர்பான கல்வியைப் புகட்டி வருகிறோம். சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு மனித உரிமைகள் செயற்பட வாய்ப்புகள் அளிக்கிறோம்.
- குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி தொடர்பாக புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.
- 180 மில்லியன் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து வழங்கப்படுகிறது.ILO உடன்படிக்கையின்படி குழந்தைகள், வளரிளம் குழந்தைகள் பாதுகாப்புக்கான முன்னேடுப்புகளைச் செய்து வருகிறோம். இணைய வழியில் நடக்கும் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
- சமத்துவம் நிலவ வேண்டும், பாகுபாடு இருக்கக் கூடாது என்பதில் எவ்வித சமரசமும் இன்றி செயற்பட்டு வருகிறோம்.
- அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 & 30 இன் படி சமயச் சிறுபான்மையினர் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியிருக்கிறோம்.
- நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு 13% உள்ளது. மாநில சட்டமன்றங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. ஊராட்சி மன்றங்களில் பெண்களின் பங்களிப்பு 33 விழுக்காட்டிற்கும் அதிகமாக உள்ளது.
- பட்டியலின/பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- கையால் மலம் அள்ளுதலை ஒழித்து எந்திரங்கள் மூலம் மலம் அள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- ஐ.நா.வின் மாற்றுத் திறனாளிகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்கான தனி சட்ட வரைவு உருவாக்கப்பட்டு வருகிறது. 3 மில்லியன் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 2.5 மில்லியன் மாற்றுத் திறனாளிகள் பயனுறும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் மாணவர்க்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
- அனைத்து மக்களையும் உள்ளடக்கிய கிராமப்புற மேம்பாடு கொள்கை வரைவு உருவாக்கப்பட்டு வருகிறது.
- உணவுப் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு உலகிலேயே மிகப் பெரிய அளவில் பொது விநியோக வழங்கல் முறை நடைமுறையில் உள்ளது.
- நலிவுற்ற மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் உருவாக்கம் பெற்று வருகிறது
- மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் ஆண்டுதோறும் நூறு நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
- நீடித்த வளர்ச்சிக்கான இலக்கில் வறுமை ஒழிப்பை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.
- இந்தியாவில் இலட்சக் கணக்கான அரசுசாரா அமைப்புகள் உள்ளன. வெளிநாட்டு நிதி பெறுவதில் முறைகேடுகள், வரிஏய்ப்பு போன்றவற்றைக் கண்காணித்து 16542 அரசுசாரா அமைப்புகளின் உரிமத்தை உரிய காரணம் கூறி ரத்து செய்துள்ளோம்.
- காஷ்மீர் அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த பின் இது வரை 16மில்லியன் சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை புரிந்துள்ளனர்.
- பல்வேறு மதங்களைக் கொண்ட நாடு என்று இந்தியாவை கொண்டாடுகின்றோம்.
- மரண தண்டனையை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.
உலக நாடுகளின் பரிந்துரைகள்:
இந்தியா மீது 132 நாடுகள் தங்கள் கருத்துகளையும், பரிந்துரைகளையும் முன் வைத்தன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவிடம் உதவி பெற்ற மாலத்தீவு, மாலே, இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவை வெளிப்படையாகப் புகழ்ந்து பேசின. வல்லரசு நாடுகள் இந்தியாவில் காணப்பெறும் மனித உரிமை நிலை குறித்துக் கவலை தெரிவித்தன. பல நாடுகள் தங்கள் பரிந்துரைகளை முன் வைத்தன. மேற்கூறியவற்றுள் குறிப்பிடத்தக்கவை கீழ்க்கண்டவாறு:
- சித்திரவதைக்கெதிரான ஐ.நாவின் உடன்படிக்கையில் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று கையொப்பமிட்டுள்ள இந்தியா இதுவரை ஏற்புறுதி (ratify) செய்யாதது ஏன்?, இந்த உடன்படிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக உள்நாட்டில் சித்திரவதைக்கு எதிரான சட்டத்தை உருவாக்காதது ஏன்? இந்திய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? என்று அமெரிக்கா, சுவீடன், கனடா, பிரான்சு,செனகல், எஸ்தோனியா ஆகிய நாடுகள் கேள்வி எழுப்பின.
- உலகிலேயே இந்தியாவில் தான் அதிக எண்ணிக்கையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அமெரிக்கா குற்றஞ் சாட்டியுள்ளது.
- மேலும் இணையத்தை முடக்குவதில் உலகிலேயே 180 நாடுகளில் இந்தியா 142 ஆவது இடத்தில் உள்ளது என்று உலக பத்திரிகை சுதந்திர குறியீடு-2021 தெரிவித்துள்ளதாக அமெரிக்கா கூறியது இத்துடன் கீழ்க்கண்டவற்றை பரிந்துரைத்துள்ளது.
i.அரசுசாரா அமைப்புகள் வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதை முறைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையுடன் இந்தியா செயற்பட வேண்டும். இதே கருத்தை ஸ்பெயின் முன் வைத்துள்ளது.
ii.ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை( Armed Forces Special Powers Act) இந்திய அரசு திரும்பப் பெற்றதை நாங்கள் கவனிக்கிறோம். ஆனால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(Unlawful Activities Prevention Act), தேசிய பாதுகாப்புச் iii.சட்டம்(National Security Act) போன்ற சட்டங்கள் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் போன்றோர் மீது பயன்படுத்தப்படுவது கவலை அளிக்கிறது.இச்சட்டங்கள் உலகளாவிய மனித உரிமைகளின் தரவுகளைப் பின்பற்ற வேண்டும்.
iv.காவல்துறை அதிகாரிகளின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த காவலர் புகார் ஆணையத்தை (Police Complaints Authorities [PCA]) அனைத்து மாநிலங்களிலும் உருவாக்க வேண்டும்.
v. மனிதஉரிமைக் காப்பாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பெற வேண்டும்.
- கருத்துரிமை, அமைதியான முறையில் கூடுவதற்கான உரிமை ஆகியவற்றை மனித உரிமைக் காப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், குடிமைச் சமூக அமைப்புகள் பயன்படுத்தவிடாமல் தடுத்தல், அச்சுறுத்துதல், துன்புறுத்துதல், மிரட்டுதல், தாக்குதல் நடத்துதல் போன்றவை இனிமேல் நடக்காமல் இருக்க இந்தியா எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கும்? இத்துடன் சமயச் சிறுபான்மையினரை குறிவைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், மதமாற்ற எதிர்ப்புச் சட்டம் போன்ற சிறுபான்மையினர்க்கு எதிரான சட்டங்களை இந்தியா மீளாய்வு செய்து திரும்பப் பெறுமா? என்று பெல்ஜியம் கேள்வி எழுப்பியுள்ளது.
- இந்தியாவில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் மனித உரிமைக் காப்பாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், நாடற்ற மக்களுக்குக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று லக்சம்பர்க் பரிந்துரைத்துள்ளது.
- மனித உரிமைக் காப்பாளர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று பிரான்சு பரிந்துரைத்துள்ளது.
- மனித உரிமைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும், தரமான இலவசக் கல்வி வழங்க வேண்டும், வறுமையை ஒழிக்க வேண்டும், கிராமப்புற ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று ரஷ்யா பரிந்துரைத்துள்ளது.
- மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று போர்ச்சுகல்,அர்ஜென்டினா, ஹோலிசி போன்ற நாடுகள் பரிந்துரைத்துள்ளன.
- மதச்சிறுபான்மையினர்க்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க வேண்டும் என்று அங்கோலா பரிந்துரைத்துள்ளது.
- வறுமையை ஒழிக்க வேண்டும், அகதிகள் மீது தனிக்கவனமும் அக்கறையும் செலுத்த வேண்டும் என்று சூடான் பரிந்துரைத்துள்ளது.
- பெண்களுக்கு எதிரான தொடர் வன்முறைகளைத் தடுக்க வேண்டும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நேர் செய்ய வேண்டும் என்று அல்ஜீரியா பரிந்துரைத்துள்ளது.
- உலகளாவிய மனித உரிமை நெறிமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்று தென் அமெரிக்கா பரிந்துரைத்துள்ளது.
- இந்தியாவில் காணப்பெறும் சங்கமாகும் உரிமை, அமைதியாகக் கூடுவதற்கான உரிமை, தொழிலாளர் உரிமை ஆகியவற்றின் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமை பற்றிய ஐ.நா.வின் வழிமுறைகளை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்று சுவீடன் பரிந்துரைத்துள்ளது.
- பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், ஒடுக்கப்பட்டோர் உரிமைகள் பாதுகாக்கப்பெற வேண்டும் என்று சவூதி அரேபியா பரிந்துரைத்துள்ளது.
- இந்திய அரசமைப்பின் பிரிவு 29 & 30 இல் குறிப்பிடப்பட்டுள்ள சிறுபான்மையினரின் உரிமைகள், நலன்களைப் பாதுகாக்க இந்தியா எத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? என்று இங்கிலாந்து கேள்வி எழுப்பியுள்ளது?
- மாற்றுத் திறனாளிகள் மீதான வன்முறைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும் என்று பின்லாந்து பரிந்துரைத்துள்ளது.
ஐ.நா அவையின் உலகளாவிய காலமுறை மீளாய்வில் இந்தியாவின் உரைக்கு உலக நாடுகள் அளித்துள்ள பதிலுரைகளையும், பரிந்துரைகளையும் காணும்போது இந்தியா தன்னை மீளாய்வு செய்ய வேண்டும் என்பது வெள்ளிடை மலை. வருகிற பிப்ரவரி 2023 இல் நடைபெறும் மீளாய்வில் இந்தியா இவற்றுக்குப் பதில் சொல்ல வேண்டும். நிறைகளைச் செழுமைப்படுத்தி, குறைகளை நேர் செய்தால் மட்டுமே தலை நிமிர முடியும். இல்லையெனில் தலைகுனிவு ஏற்படும்.
சிசிடிவி கேமரா: காவல் நிலையங்களைக் கண்காணிக்கும் நெற்றிக்கண்!