Indian Parliamentary elections

நாடாளுமன்றத்திற்குத் தேர்தல்! அது நடப்பதோ மாநில அரசியல் களங்களில்தான்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை Indian Parliamentary elections

இந்திய மக்களாட்சியின் மையமான அம்சம் ஒரு முரண்பாடு. மக்களின் அரசியல் மயமாக்கம் என்பது மாநில மொழிகள் சார்ந்து, வரலாறு சார்ந்து, பண்பாடு சார்ந்துதான் நடந்துள்ளது. ஆனால், அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் அதிகம் குவிந்துள்ளது.

தேசிய அளவிலான அரசியல் களம் என்று எதுவும் இல்லை. எல்லா ஊடகங்களும், கருத்தாளர்களும், ஒவ்வொரு மாநிலமாகத்தான் தேர்தல் களத்தை ஆராய முடிகிறது. பல இடங்களில் மாநிலங்களுக்குள்ளேயே முக்கியமான பிரதேச வேறுபாடுகள் உள்ளதையும் விவாதிக்க வேண்டியுள்ளது.

ஏனெனில், மக்கள் தேர்தல்கள் மூலம் பிரதிநிதிகளைத் தேர்வு செய்வது மாநில அரசியல் களங்களில்தான் நடக்கிறது. மாநில அரசு, ஒன்றிய அரசு இரண்டுமே மாநில அரசியல் களங்களில்தான் அமைக்கப்படுகின்றன. அதாவது, மக்கள் வாக்களிப்பது என்பது மாநில அளவிலான அணிசேர்க்கையின், அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் கட்டமைப்பின், வாக்கு வங்கிகளின் அடிப்படையில்தான்.

இதற்கான காரணம், இந்திய மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தொகுதிகளின் பண்பாட்டின், வரலாற்றின் பன்மைதான். வெவ்வேறு மொழிகள், வெவ்வேறு பண்பாடுகள், மாறுபட்ட சமூகக் கட்டமைப்புகள், முரண்கள் ஆகியவை முற்றிலும் தனித்துவமிக்க அரசியல் அணிசேர்க்கைகளை ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்குகின்றன. அதனால் மாநிலங்களே தேர்தல்களின் முரண்களமாக உள்ளன.

ஆனால், அதிகாரப் பகிர்வு என்று வரும்போது ஒன்றிய அரசிடம்தான் அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள் என்ற செயற்கையான ஒரு பிரிவினை உருவாகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்திய தேர்தல் முறை அமெரிக்கா போல நேரடியாக ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிபர் முறையல்ல. மக்கள் தங்கள் தொகுதிக்கான பிரதிநிதிக்குத்தான் வாக்களிப்பார்கள். அந்த பிரதிநிதிகள்தான் பிரதமரைத் தேர்வு செய்வார்கள்.

கருத்துக்கணிப்பு நடத்துபவர்கள் யார் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்று கேட்டால் மக்கள் அவர்கள் அதிகம் அறிந்த பெயரை சொல்லத்தான் செய்வார்கள். ஆனால், அதன் அடிப்படையில்தான் வாக்களிப்பார்கள் என்று கூற முடியாது. வாக்களிக்கும்போது அவர்கள் மாநிலத்தின் கட்சி அணிசேர்க்கைகள், வாழ்வாதாரப் பிரச்சினைகள், உள்ளூர் அரசியல், தொகுதி வேட்பாளர்கள் என்று பல்வேறு அம்சங்கள் அவர்கள் வாக்குகளைத் தீர்மானிக்கின்றன. இந்திய மக்களாட்சியின் நோக்கமும், லட்சியமும் அதுதான். பன்மைக்கு மரியாதை.  

தேசியக் கட்சிகள் எப்படி உருவாகின்றன?

இந்தியாவின் நவீன அரசியல் இந்திய தேசிய காங்கிரஸ் 1885ஆம் ஆண்டு உருவானதிலிருந்து தொடங்குகிறது. அதாவது, இந்திய தேசம் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே மக்கள் காலனீய ஆட்சியிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைப்பது தொடங்குகிறது. காங்கிரஸில் பல்வேறு இந்திய பகுதிகளிலிருந்தும் படித்தவர்கள், வக்கீல்கள், கல்வியாளர்கள் என்று பலரும் சேர்கிறார்கள். அதாவது இது படித்தவர்கள், குறிப்பாக நவீன ஆங்கில கல்வி பயின்றவர்கள் தொடங்கிய இயக்கம்.

பின்னர் இயக்கம் வலுவடையும்போது ஒவ்வொரு மாகாணத்திலும் பல்வேறு தலைவர்கள் தோன்றுகிறார்கள். தமிழ்நாட்டில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, பாரதியார் உள்ளிட்ட பலர் தோன்றியது போல இது நிகழ்கிறது. பெரும்பாலும் படித்தவர்கள், சமூகத்தில் செல்வாக்கானவர்கள் ஆகியோரே கட்சியில் இயங்குகிறார்கள். மெல்ல, மெல்ல அவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள். அணி திரட்டுகிறார்கள். அப்படி மக்களிடம் பிரச்சாரம் செய்ய அந்தந்த மாகாண மொழிகளே பயன்படுகின்றன. அதனால்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் தோன்றுகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தோன்றுகிறது.

அரசியல் செயல்பாடுகள் அதிகரிக்கும்போது, இந்தியர்களுக்கு ஆட்சி செய்வதில் பங்கேற்பு உருவாகும்போது, ஒவ்வொரு பகுதியிலும் காங்கிரஸுக்கு மாற்றான அமைப்புகளும் தோன்றத்தான் செய்கின்றன. சுயராஜ்யக் கட்சி, சோஷலிஸ்ட் கட்சி, தலித் அமைப்புகள் என பல்வேறு அமைப்புகள் தோன்றுகின்றன. தமிழ்நாட்டில் நீதிக்கட்சி தொடங்கப்படுகிறது. காங்கிரஸுக்கும், காங்கிரஸுக்கு வெளியிலுள்ள அமைப்பினருக்குமான முரண்கள், உறவுகள் ஒவ்வொரு மாகாணத்திலும் அரசியல் களத்தைக் கட்டமைக்கத் தொடங்குகின்றன.

மராத்திய பிரமாண சமூகத்தினர் முன்முயற்சியால் இந்து மகா சபை, ராஷ்டிரிய சுயம் சேவக் சங் என்ற ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகள் தோன்றுகின்றன. வெகுஜன அமைப்பாக மாறாவிட்டாலும், பல்வேறு மாகாணங்களில் பிராமணர்கள் மற்றும் சில முன்னேறிய நிலவுடமை ஜாதிகளிடையே இந்த அமைப்புகளுக்கு உறுப்பினர்கள் கிடைக்கிறார்கள். ஆனால், இந்து மதம் என்பதே ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்டது என்பதாலும், முஸ்லிம்களுடனான சமூக, பொருளாதார உறவுகள் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்டு இருந்ததாலும் இந்து அடையாள அரசியலும் வெவ்வேறு பகுதிகளில் மாறுபட்ட தன்மையுடன்தான் உருவாயின.

அந்தந்த மாகாண, மொழி சார்ந்த முரண் களங்களில் மேற்கண்ட பல்வேறு தரப்பினரின் அரசியல் சிந்தனைகள் எழுதப்பட்டன. பல நேரங்களில் அந்த எழுத்துகள் ஆங்கிலத்திலும், அதன்மூலம் வேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. அந்தந்தப் பகுதிகளில் தோன்றும் தலைவர்கள், இயக்கங்கள், அந்தந்தப் பகுதியில் ஏற்படும் சமூகப் பொருளாதார மாற்றங்கள், தொழில்மயமாதல், நகர்மயமாதல் ஆகியவற்றைப் பொறுத்து அரசியல் முரண் களங்கள் தனித்துவத்துடன் உருவாயின. தமிழ்நாட்டின் தனித்துவத்துக்குக் காரணமாக பெரியாரின் சுயமரியாதை இயக்கம் அமைந்தது.

மொத்தத்தில் தேசிய கட்சிகள் என்பவை சுதந்திரத்துக்குப் பின் பல்வேறு மாநில அமைப்புகளின் தொகுப்பாகவேதான் இயங்க முடிந்தது. அந்தந்த மாநிலத்தின் முரண் களத்தைப் பொறுத்தே தேசிய கட்சிகளும் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள முடிந்தது. உத்தரப்பிரதேச காங்கிரஸ் இந்தியை தேசிய மொழியாக்கச் சொன்னால் தமிழ்நாட்டு காங்கிரஸ் அதற்கு உடன்பட முடியாது. அது போலவேதான் பல்வேறு கொள்கைகளிலும் அந்தந்த மாநில நிலைகளுக்குத் தக்கவாறுதான் மாநில காங்கிரஸின் நிலைபாடு அமைந்தது.

காங்கிரஸின் மாநில அரசியல் வலுவிழப்பு

காங்கிரஸின் மாநிலத் தலைவர்களுக்கும், அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கும் முரண்பாடுகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. எழுபதுகளுக்குப் பிறகு மாநிலத் தலைவர்கள் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று காங்கிரஸின் தேசிய தலைமை நினைத்தது. அதனால் மாநிலங்களில் அடிக்கடி தலைவர்கள் மாற்றப்பட்டார்கள், கோஷ்டிப்பூசல் அதிகரித்தது.

இதனால் முதலில் மாநிலக் கட்சிகள் வலுவடைந்தன. தமிழ்நாட்டில் தி.மு.க, பஞ்சாபில் அகாலி தளம், காஷ்மீரில் தேசிய காங்கிரஸ், ஒரிசாவில் பிஜு ஜனதா தளம், ஆந்திராவில் தெலுங்கு தேசம், அஸ்ஸாமில் அஸ்ஸாம் கன பரிஷத், கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்டவை முதலில் வலுப்பெற்றன.

பின்னர் மண்டல் கமிஷன் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர் எழுச்சிக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி ஜனதா, பீஹாரில் ராஷ்டிரீய ஜனதா உள்ளிட்ட வலுவான மாநிலக் கட்சிகள் தோன்றி காங்கிரஸை பதிலீடு செய்தன.  

காங்கிரஸிலிருந்தே நேரடியாகப் பிரிந்து மாநிலக் கட்சிகள் உருவாயின. மகாராஷ்டிராவில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், தெலங்கானா மாநில உதயத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி, ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், ஜார்கண்ட் மாநில உருவாக்கத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என்றெல்லாம் வலுவான மாநிலக் கட்சிகள் உருவாயின.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அரசியல் அணிசேர்க்கை, அணிதிரட்டல் என்பவை மாநில அளவில் நடப்பவை என்பவையாக மாறிப்போயின. காங்கிரஸ் தொடர்ந்து ஒரு தேசிய வலைப்பின்னலாக இருந்தது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் தொடர்ந்து பிரதான கட்சியாக இருந்தது. பிற மாநிலங்களில், மாநிலக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் முரண்களை எதிர்கொள்ளத் தொடங்கியது.  

பாஜகவின் எழுச்சியும், ஒற்றை தேசிய முழக்கமும்

இப்படி மாநிலங்களில் நிலைபெற்ற அரசியல் முரண்களம் நாளாவட்டத்தில் இந்திய ஒன்றியத்தில் கூட்டாட்சி நடைமுறையை வலுப்படுத்தும் சாத்தியம் பெருமளவு உருவானது. அதன் முன்னோட்டமாக ஒன்றியத்தில் கூட்டணி அரசுகளே தொடர்ந்து அமையத் தொடங்கின. மாநிலக் கட்சிகள் ஒன்றிய அரசில் முக்கிய பங்கேற்றன. தி.மு.க-வின் முரசொலி மாறன் ஒன்றிய அரசின் வர்த்தகத் துறை அமைச்சரானார். ஆர்.ஜே.டி. லாலு யாதவ் ரயில்வே அமைச்சரானார். இத்தகைய பங்கேற்பால் இந்தியக் குடியரசின் ஒற்றுமை உறுதிசெய்யப்பட்டு நாடு வலுவடையத் தொடங்கியது. இது அதிகாரப் பகிர்வின் வழியான ஒற்றுமை.

இத்தகைய அதிகாரப் பகிர்வு நோக்கிய வளர்ச்சிக்கு எதிராக மீண்டும் ஒன்றியத்தில் அதிகாரத்தைக் குவிக்கும் தன்மையில் பாஜக நரேந்திர மோடி தலைமையில் 2014ஆம் ஆண்டு பதவியேற்றது. அதன் லட்சியம் அனைத்து மாநிலங்களிலும் பாஜக-வே ஆள வேண்டும். ஒன்றியத்திலும் பாஜக-வே ஆள வேண்டும். நாட்டிலே கிட்டத்தட்ட ஒரு கட்சி ஆட்சி முறை வர வேண்டும். அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட வேண்டும். இதைத்தான் “ஏக் பாரத், சிரேஷ்ட பாரத்” என்று கூறுகிறது. இது அதிகாரக் குவிப்பின் வழியிலான ஒற்றுமை.

அதனால் இப்போது நடைபெறும் 2024 தேர்தல் என்பது பாஜக-வின் கருத்தியலுக்கும், காங்கிரஸ் மற்றும் முக்கிய மாநிலக் கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு நடக்கும் முக்கியமான போட்டியாக, கருத்தியல் யுத்தமாக அமைந்துள்ளது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் தன்னுடைய ஆதரவாளர்களாக இருந்த சிவசேனா, அ.இ.அ.தி.மு.க ஆகிய மாநிலக் கட்சிகளுடனேயே பாஜக-வால் தொடர்ந்து நட்பு பேண முடியவில்லை என்பதுதான். ஏனெனில் பாஜக தானே அனைத்து மாநிலங்களிலும் ஆள வேண்டும் என்று நினைப்பதால் இந்த மாநிலக் கட்சிகளை விரோதித்துக் கொண்டது. அந்தக் கட்சிகளை பிளந்து, ஒரு பிரிவுடன் கூட்டணி வைக்கிறது. ஒரிஸ்ஸாவில் பிஜு ஜனதா தளத்துடன் அதனால் கூட்டணி அமைக்க முடியவில்லை. ஏனெனில் அங்கும் அதுவே ஆட்சிக்கு வர நினைக்கிறது.

மாநில முரண்களம் வேறு; ஒன்றிய அணிசேர்க்கை வேறு

கேரள அரசியலைப் பொறுத்தவரை அங்கே ஐம்பதாண்டுகளாக மார்க்ஸிஸ்ட் கட்சி தலைமையிலான எல்.டி.எஃப் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணிக்கும்தான் முரண்களம். தேசிய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளும், காங்கிரஸும் இந்தியா கூட்டணியில் அணி சேர்ந்தாலும், அதற்காக கேரள அரசியல் முரண்களத்தை மாற்றி அமைக்க முடியாது. அதனால், அங்கே இரண்டு அணிகளில் எது வென்றாலும் அது இந்தியா கூட்டணியின் வெற்றிதான்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. ஹரியானாவிலும், குஜராத்திலும் கூட கூட்டணி அமைத்துள்ளன. ஆனால், பஞ்சாபில் இந்த இரண்டு கட்சிகளும்தான் முரண்களத்தை கட்டமைக்கின்றன. இரண்டில் எது வென்றாலும் அது இந்தியா கூட்டணி வெற்றிதான் எனலாம்.

இதே போலத்தான் ஒரிசாவும். பாஜகவும், பிஜு ஜனதா தளமும் கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தை நடத்தின. உடன்பாடு எட்டப்படாததால் எதிர்த்து போட்டியிடுகின்றன. தேர்தலுக்குப் பிறகு தேவைப்பட்டால் பிஜு ஜனதா தளம் பாஜக-வை ஆதரிக்கலாம். தமிழ்நாட்டிலும் ஆறு மாதங்கள் முன்னால் வரை அ.இ.அ.தி.மு.க தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாகத்தான் இருந்தது. மாநிலத் தலைமையுடன் ஏற்பட்ட பிரச்சினையால்தான் தனித்து களம் காண்கிறது. பிரதமர் மோடி மேடையிலேயே எம்,ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை வைத்து வணங்குகிறார். தேர்தலுக்குப் பிறகு மீண்டும் இந்தக் கட்சிகள் இணையலாம்.

முரண்களின் வடிவங்கள் Indian Parliamentary elections

அது மட்டுமல்ல. குடும்பங்களுக்குள்ளேயேகூட அரசியல் அணிகள் வேறுபட்டு மோதுகின்றன. மகாராஷ்டிரத்தில் சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் கட்சியைப் பிளந்து பாஜக-வுடன் கூட்டணி கண்டுள்ளார். அவர்கள் குடும்பத்தின் செல்வாக்கு மிக்க தொகுதியான பாராமதி தொகுதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேவும், அஜித் பவாரின் மனைவியான சுனேத்ராவும் போட்டியிடுகின்றனர். பாராமதி தொகுதியைப் பொறுத்தவரை யார் பிரதமர் வேட்பாளர், கருத்தியல் என்ன என்பதைவிட மக்கள் ஆதரவைப் பெறுவது கட்சியின் நிறுவனர் சரத் பவாரா, இளம் தலைவர் அஜித் பவாரா என்பதுதான் போட்டி எனலாம்.

தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், அவர் கணவர் பரகலா பிரபாகரும் முற்றிலும் எதிரெதிர் நிலைபாடுகளை எடுத்திருப்பது இந்தத் தேர்தலின் குறிப்பிடத்தக்க அம்சம். நிர்மலா சீதாராமன் பாஜக ஆட்சியில் இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்துள்ளது, எங்கள் ஆட்சி நீடிக்க வேண்டும் என்கிறார். பரகலா பிரபாகர் பொருளாதாரம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது; மோடியின் பாஜக ஆட்சி நீடித்தால் நாடு பெரும் சிக்கலை சந்திக்கும் என்று எச்சரிக்கிறார்.  

பாட்டாளி மக்கள் கட்சி கடைசி நேரத்தில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்ததில் ஏற்பட்டுள்ள பிரச்சினையும் சுவாரஸ்யமானது. அதன் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளம்யா தர்மபுரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகப் போட்டியிடுகிறார். ஆனால் அவருடைய சகோதரர் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் வேட்பாளராக கடலூரில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். கடலூரில் அவருக்கு எதிராக பாமக சார்பில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அன்புமணி ராமதாஸ், “மச்சானா, பச்சானா என்றால் எனக்கு பச்சான்தான் முக்கியம்” என்று பேசியதாக ஊடகங்கள் கூறுகின்றன.

இப்படி எத்தனையோ முரண்களங்களின் வெளிப்பாடாகத்தான் நாடாளுமன்றப் பெரும்பான்மையும், ஒன்றிய அரசும் அமைகின்றதே அன்றி, ஒட்டுமொத்த தேசமும் ஒற்றை அரசியல் களமாக அமைவது சாத்தியமேயில்லை எனலாம்.

கட்டுரையாளர் குறிப்பு:

Indian Parliamentary elections are held in the political fields of the state by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: சீஸ் – சேமியா ரோல்ஸ்

GTvsPBKS : சாய் கிஷோர் பந்துவீச்சில் பணிந்தது பஞ்சாப்!

இஸ்லாமியர்களுக்கு எதிராக மோடி வெறுப்பு பேச்சு : குவியும் கண்டனங்கள்!

’ஆர்சிபி ஆசீர்வாதம் வேணுமா? : அப்டேட் குமாரு

+1
2
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *