Governors vs Chief Ministers

ஆளுநர்கள் vs முதலமைச்சர்கள் : ஆளுநரின் அதிகாரம் என்ன? சட்டம் என்ன சொல்கிறது?

அரசியல் சிறப்புக் கட்டுரை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையை முற்றிலுமாக பேசாமல் தவிர்த்தது பல்வேறு சர்ச்சைகளுக்கும் விவாதங்களுக்கும் உள்ளாகியுள்ளது. ஆர்.என்.ரவியைப் பொறுத்தவரை அவரது பெயரைக் கேட்டாலே சர்ச்சைக்கு பஞ்சமில்லை எனும் சூழல் தமிழ்நாட்டில் நிலவி வருகிறது.

கடந்த மாதம் ஜனவரி 24, 2024 அன்று சரியாக காலை 9 மணியளவில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கேரள சட்டமன்றத்தின் கூட்டத் தொடருக்கு வருகை தந்தார். கேரள அரசின் 61 பக்க அறிக்கையை உரையாற்றுவதற்காக கையிலெடுத்த அவர், அறிக்கையை ஆரம்பத்திலிருந்து படிக்காமல் கடைசி பக்கத்தை திருப்பி கடைசி பத்தியை படித்துவிட்டு அத்துடன் முடித்துக்கொண்டார். வெறும் 84 விநாடிகளில் தனது உரையை முடித்துக் கொண்டார். 9 மணிக்கு உள்ளே வந்த ஆளுநர் 9:04 மணிக்கெல்லாம் கிளம்பிவிட்டார். கேரள வரலாற்றிலேயே மிகச் சிறிய ஆளுநர் உரையாக இந்த உரை பார்க்கப்படுகிறது.

இது குறித்து கேரளாவின் கலாச்சார அமைச்சர் பேசும்போது, ஆளுநருக்கு ஏதேனும் உடல்நல சிக்கல் இருந்திருக்கலாம் என்று சொல்லி கடந்துவிட்டார். ஆனாலும் கேரள அரசியலைப் பொறுத்தவரை காரணமே சொல்லாமல் அரசின் உரையை ஆளுநர் முழுமையாக படிக்காமல் ஒரு பத்தியை மட்டுமே படித்துவிட்டு வெளியேறியது விவாதத்திற்குரிய ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. இது நடைபெற்று சில நாட்கள் மட்டுமே கடந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநரும் அதே பாணியில் அரசின் உரையைப் படிக்காமல் வெளியேறியிருக்கிறார். கடந்த ஆண்டு ஆளுநர் சில வரிகளை நீக்கிவிட்டு படித்ததே சர்ச்சையாக பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு முழு உரையையும் படிக்காமல் தவிர்த்திருக்கிறார்.

தேசிய கீதத்தை பேரவை துவங்குவதற்கு முன்னரும், முடியும்போதும் என இரண்டு முறை இசைக்கச் சொல்லி கேட்டும் பேரவை துவங்கும்போது அதனை இசைக்கவில்லை என காரணம் சொல்லியுள்ளார். மேலும் அந்த உரையில் உள்ள சில விடயங்கள் தனக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பதாகவும், உண்மைக்கு மாறாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர் உரை எப்படி தயாரிக்கப்படுகிறது?

ஆளுநர் உரையை மாநில அரசாங்கமே தயாரிக்கிறது. அந்த உரையில் அரசின் கடந்த ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் பற்றிய மேற்பார்வையும் குறிப்புகளும் இடம்பெறுவது வழக்கம். மேலும் இந்த ஆண்டில் நிறைவேற்றப்படவுள்ள விவகாரங்கள் குறித்தான திட்டமும், கொள்கை முடிவுகளும் இடம்பெறும். இந்த உரை கூட்டத்தொடருக்கு முன்பாகவே ஆளுநர் மாளிகையின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுநரின் பார்வைக்கு வைக்கப்பட்டு அவரின் கருத்துகளைக் கேட்ட பின்னரே சட்டமன்றத்திற்கு வரும். அதற்குப் பிறகு அந்த உரையினைத் தாண்டி தனது சொந்த கருத்துகள் எதையும் ஆளுநர் வாசிக்க முடியாது. அந்த உரையில் இடம்பெற்றுள்ள விவரங்களைத் தான் படிக்க வேண்டும். இந்நிலையில் உரை அனுப்பப்பட்ட போது அதைப் பற்றிய கருத்தினை தெரிவிக்காமல், சட்டமன்றத்தில் வந்து அந்த உரையில் உண்மைக்கு மாறான பிழையான தகவல்கள் இருப்பதாக ஆளுநர் தெரிவித்தது தான் இங்கு சர்ச்சையானதாக பல்வேறு கட்சியினரால் பார்க்கப்படுகிறது.

பல மாநிலங்களில் தொடரும் மோதல் போக்கு

ஆளுநருக்கும் ஆட்சியாளர்களுக்குமான இந்த மோதல் போக்கு என்பது தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் நடைபெறவில்லை. தெலுங்கானா, பஞ்சாப், மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும், டெல்லி மற்றும் புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேங்களிலும் இப்போக்கு தொடர்கதையாக மாறியிருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் பாஜக அல்லாத கட்சிகள் ஆளுங்கட்சியாக இருக்கிற எல்லா மாநிலங்களிலும் இந்த மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்த போக்கு அதிகரித்திருப்பதாக சம்மந்தப்பட்ட மாநிலங்களின் ஆளுங்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆளுநர்கள் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களைப் போல நடந்துகொள்வதோடு, ஆட்சியின் நிர்வாகத்தில் தொடர்ச்சியாக பல இடர்பாடுகளையும் குறுக்கீடுகளையும் செய்து வருவதாக அம்மாநிலங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் குற்றச்சாட்டினை சொல்லி வருகிறார்கள்.

கிடப்பில் போடப்படும் மசோதாக்கள்

மாநில அமைச்சரவை மற்றும் சட்டமன்றத்திலிருந்து நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் தொடர்ச்சியாக அவற்றை கிடப்பில் போட்டு வைத்திருப்பதென்பது தொடர் மோதலுக்கான முக்கிய காரணமாக மாறிவருகிறது.

தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் மற்றும் கேரளா ஆகிய மாநில அரசுகள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் ஆளுநர்களின் இந்த போக்கிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் மிகக் குறிப்பாக பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அளித்த தீர்ப்பு மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை இத்தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கு

பஞ்சாப் அரசாங்கத்தால் அனுப்பி வைக்கப்பட்ட 7 மசோதாக்களை அம்மாநில ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோகித் தொடர்ச்சியாக முடிவை தெரிவிக்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைக்கும்போது, மசோதாவின் மீது முடிவெடுக்க அரசியல் சாசனப்படி ஆளுநருக்கு எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதனால் அதன் மீதான முடிவை ஆளுநர் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்பது ஆளுநர் தரப்பின் வாதமாக இருந்தது. இதன் மீதான தீர்ப்பை அளித்த நீதிபதி சந்திரசூட் மசோதாக்கள் மீதான ஆளுநரின் அதிகாரத்தை முடிவு செய்கிற அரசியல் சாசனத்தின் பிரிவு 200 என்ன சொல்கிறது என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.

பிரிவு 200 என்ன சொல்கிறது? உச்சநீதிமன்ற தீர்ப்பின் விவரங்கள்

அரசியல் சாசனத்தின் பிரிவு 200-ன் முதல் பத்தி மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதில் மூன்று விடயங்களை முன்வைக்கிறது.

1. ஆளுநர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கலாம்.
2. மசோதாவை ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி (Withhold) வைக்கலாம்.
3. மசோதாவினை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைக்கலாம்.

பிரிவு 200-ன் இரண்டாவது பத்தி என்ன சொல்கிறது என்பதை சந்திரசூட் விளக்குகிறார். அதில் As soon as possible (எவ்வளவு விரைவாக முடியுமோ) என்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஆளுநர் ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதையோ அல்லது சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவதையோ எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அனுப்பி வைக்க வேண்டும். அதனால் As soon as possible என்பதை மறந்து விட்டு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் கிடப்பில் வைத்திருக்க முடியாது என்பதை தெளிவாக விளக்கினார் சந்திரசூட்.

அடுத்ததாக இன்னொரு கேள்வி எழும். மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைக்கும் (Withhold) அதிகாரமும் ஆளுநருக்கு அளிக்கப்பட்டிருக்கிறதுதானே என்பது அது. அதையும் அரசியல் சாசனத்தின் பிரிவு 200 தெளிவாக விளக்குகிறது. ஆளுநர் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவின் மீது விருப்பப்பட்டால் சில மாற்றங்களைக் கோரலாம். அல்லது முழு மசோதாவினையும் மாற்ற வேண்டும் எனக் கோரி சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவதற்காக நிறுத்தி வைக்கலாம். நிறுத்தி வைப்பது என்பதே மாற்றங்களைக் கோரும் ஆளுநரின் அதிகாரம் சார்ந்த விடயம் தான். அந்த மாற்றங்களைக் கோருதலையும் ஆளுநர் விரைவாகத் தான் செய்ய வேண்டும். அரசியல் சாசனம் அப்படித்தான் சொல்கிறது என்கிறார் சந்திரசூட்.

ஆளுநரால் மாற்றங்களைக் கோரி திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவினை அப்படியே ஏற்க வேண்டும் என்ற கட்டாயமும் சட்டமன்றத்திற்கு இல்லை என்பது இன்னொரு முக்கியமான விடயம். சட்டமன்றம் விருப்பப்பட்டால் ஆளுநர் சொன்ன மாற்றங்களை ஏற்றோ அல்லது ஆளுநர் சொன்ன மாற்றங்களை நிராகரித்தோ கூட மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க முடியும். அப்படி இரண்டாவது முறை அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவருக்கு இல்லை என்பதை சந்திரசூட் தெளிவுபடுத்துகிறார்.

மூன்றாவதாக ஆளுநர் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் அதிகாரம் சார்ந்து சொல்வதென்றால், மாநில அரசு அனுப்பி வைக்கும் எல்லா மசோதாக்களையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க முடியாது. அப்படி ஒரு அதிகாரத்தினை அரசியல் சாசனம் ஆளுநருக்கு வழங்கவில்லை. ஏதேனும் ஒரு மசோதா உயர்நீதிமன்றத்தின் அதிகாரம் அல்லது முடிவு சம்மந்தமான விவகாரங்களில் தலையிடுவதாக ஆளுநர் கருதினால் மட்டுமே அந்த மசோதாவினை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பிவைக்க முடியும்.

இவ்வாறு ஒரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை மிக வெளிப்படையாக தெளிவுபடுத்திய சந்திரசூட் ஆளுநர்களை நோக்கி, “நீங்கள் எல்லோரும் தேர்ந்தெடுக்கப்படாத நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் என்பதை மறந்து விட வேண்டாம்” என்பதை அறிவுறுத்தவும் செய்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அதிக அதிகாரம் உண்டு என்பதே சந்திரசூட் முன்வைத்த தீர்ப்பு.

இந்த தீர்ப்பு பஞ்சாப் மாநிலத்திற்கு மட்டுமல்லாமல், அனைத்து மாநிலங்களுக்கும் முக்கியமான தீர்ப்பாக மாறியிருக்கிறது.

தமிழ்நாடு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் இதே பிரச்சினை தமிழ்நாட்டிலும் தொடர்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் 2023 அக்டோபர் மாதத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களை நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்கு வந்த பின் தான் மசோதா மீதான முடிவை எடுப்பீர்களா என்று கடுமையான வார்த்தைகளை ஆளுநரை நோக்கி பயன்படுத்தியது. 10 மசோதாக்களை கிடப்பில் வைத்திருந்த ஆர்.என்.ரவி உடனடியாக 10 மசோதாக்களையும் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பினார். அந்த 10 மசோதாக்களும் மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முறை அம்மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டார். தமிழ்நாட்டின் சட்டமன்றத்திலிருந்து அனுப்பப்பட்ட மசோதாக்கள் இன்னும் சட்டமாகாமல் அப்படியேதான் இருக்கிறது.

ஆளுநர்-ஆட்சியாளர்கள் மோதல் பல விவகாரங்களில் நடைபெற்றாலும், குறிப்பாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்கள் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தினை மாநில அரசுக்கு மாற்றியமைக்கும் தன்மை கொண்டவை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, மேற்குவங்கம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு எனும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கேரளா

கேரளாவிலும் பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் ஆளுநருக்கும், முதல்வருக்குமான மோதல் என்பது வெளிப்படையாகவே வெடித்தது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்ற ஒரு மாதத்தில் கேரள அரசும் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு சென்றது.

கடந்த 2023 அக்டோபர் மாதம் கேரளாவில் உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு 2 நாட்கள் கெடுவிதித்து உடனடியாக ராஜினாமா செய்யுமாறு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கடிதம் அனுப்பினார். இதை எதிர்த்த கேரள அரசாங்கம் 9 துணைவேந்தர்களையும் அழைத்து ராஜினாமா செய்யக் கூடாது என்று கூறியது. ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்த அமைச்சர்களைப் பார்த்து உங்களை டிஸ்மிஸ் செய்ய என்னால் முடியும் என்று ஆளுநர் வெளிப்படையாகவே பேசினார்.
இதனைத் தொடர்ந்து கேரள முதலமைச்சர் உட்பட அமைச்சர்களும், ஆளுநர் கேரளாவின் பல்கலைக்கழகங்களை காவிமயமாக்க முயல்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருவியாக ஆளுநர் செயல்படுகிறார் என்றும் பேசினர். இன்னும் இந்த மோதல் விவகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் இருந்து வருகிறார். தெலுங்கானாவின் முன்னாள் அரசாங்கமான சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ் அரசுக்கும், ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனுக்கும் இடையில் தொடர் மோதல் போக்குகள் நடைபெற்று வந்தன. தெலுங்கானா அரசு நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களை நிறைவேற்றாமல் ஆளுநர் நீண்ட காலமாக கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

2023 மார்ச் மாதத்திலேயே தெலுங்கானா அரசு தமிழிசை செளந்தர்ராஜனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது அவசர அவசரமாக 3 மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் தமிழிசை செளந்தர்ராஜன். இப்படிப்பட்ட நிகழ்வுகள் தெலுங்கானாவில் இன்னும் தொடர்கதைதான்.

ஜார்க்கண்ட்

சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை நாம் அறிந்திருப்போம். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இருந்து வருகிறார்.
தனது கைது பற்றி பேசிய ஹேமந்த் சோரன், இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஆளுநர் மாளிகை இருப்பதாகவும் அவர்களின் தலையீட்டின் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

மேற்கு வங்கம்

Governors vs Chief Ministers

மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் தற்போது இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகவும், ராஜ்யசபாவின் அவைத் தலைவராகவும் இருக்கும் ஜக்தீப் தன்கர். அவருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் கடும் மோதல்கள் அடிக்கடி வெடித்தன.
வார்த்தைப் போர் என்பது தொடர்ச்சியாக நீடித்த நிலையில், ஒரு கட்டத்தில் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் கணக்கில் ஆளுநர் ஜக்தீப் தன்கரை ப்ளாக் செய்தார். தொடர்ச்சியாக தன்னையும், தனது அரசின் அதிகாரிகளையும் ஆளுநர் சட்டத்துக்கு முரணான வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசமாக இழிவுபடுத்தி வருவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

அவருக்கு அடுத்ததாக மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.வி.ஆனந்த் போசுக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அந்த மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

டெல்லி

Governors vs Chief Ministers

ஒரு முதலமைச்சரே வீதியில் இறங்கி போராடிய விநோதத்தினை இந்தியா கண்டது. டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியின் துணை நிலை ஆளுநரான வி.கே.சக்சேனாவிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார். நிர்வாகத்தில் தொடர் இடையூறுகளை செய்வதாக குற்றச்சாட்டுகளை வைத்தார். துணை நிலை ஆளுநரை நோக்கி, நீங்கள் ஒன்றும் எங்களுக்கு ஹெட்மாஸ்டர் அல்ல, நாங்கள் முன்வைக்கிற முன்மொழிவுகளுக்கு ஆமாம் அல்லது இல்லை என்று பதிலளியுங்கள் என்று முழக்கமிட்டார்.

ஆனால் மத்திய பாஜக அரசாங்கம் டெல்லி சட்டமன்றத்தைக் காட்டிலும், ஆளுநருக்கே அதிக அதிகாரத்தை அளித்திடும் மசோதாவினை பாராளுமன்றத்தில் கொண்டுவந்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஆம் ஆத்மி. உச்சநீதிமன்றம் அந்த மசோதாவிற்கு எதிராக தீர்ப்பளித்தது. ஆனால் அதே மசோதாவினை மீண்டும் அவசரச் சட்டமாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு.

Governors vs Chief Ministers

இதேபோல் பாண்டிச்சேரியின் முதலமைச்சராக இருந்த நாராயணசாமி, ஆளுநராக இருந்த கிரண்பேடியை எதிர்த்து போராட்டத்திற்காக வீதியில் இறங்கியதை செய்திகளில் பார்த்திருப்போம். இப்படி ஆளுநர்களுக்கும், பாஜக அல்லாத கட்சிகள் ஆளுங்கட்சியாக இருக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் தொடர்ந்து இத்தகைய கசப்பான நிகழ்வுகள் நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகும் இத்தகைய கசப்புகள் நின்றதாகத் தெரியவில்லை. இதற்கெல்லாம் காரணம் பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்தான் என்று ஒரே குரலில் உரக்க ஒலிக்கின்றன சம்மந்தப்பட்ட மாநில அரசுகள்.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழுக்கு வரும் மிருணாள் தாகூர்… ஹீரோ யாருன்னு பாருங்க!

எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை : எடப்பாடி கோரிக்கையை ஏற்ற ஸ்டாலின்

தலைவர் ரஜினியுடன் நேரடியாக மோதும் தளபதி விஜய்?

கிளாம்பாக்கம் விவகாரம் : “இத்தோடு முடித்துக்கொள்வோம்” – எடப்பாடி vs ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *