மக்களவைத் தேர்தல் முடிவு ஜனநாயக உலகிற்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாட்டில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் நடைபெற்று வரும் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார். பிரதமராக மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிறகு மோடி செல்லும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
நேற்று இத்தாலி சென்றடைந்த மோடி அங்கு பல்வேறு வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தித்தார்.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள மோடிக்கு ஜெலன்ஸ்கி வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து, உக்ரைன் நிலவரம் குறித்தும், சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அமைதிக்கான உச்சி மாநாடு குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய ரீதியிலான நடைமுறைகள் மூலம் உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதை இந்தியா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. அமைதியான தீர்வுக்கு தனது சக்திக்குட்பட்ட அனைத்து விஷயங்களையும் இந்தியா தொடர்ந்து செய்யும் என்று பிரதமர் மோடி, ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்தார்.
தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார். 2030 ஆம் ஆண்டை நோக்கிய செயல்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர். ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, உயர் தொழில்நுட்பத் துறைகள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவை குறித்தும் இந்த அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
இதையடுத்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுவையும் சந்தித்தார் மோடி. அப்போது இந்தோ-பசிபிக் செயல்திட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தியா-பிரான்ஸ் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் தேசிய அருங்காட்சியகம் தொடர்பான கூட்டு செயல்பாடு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் விவாதித்தனர். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.
ஜி7 மாநாட்டு நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸும் கலந்துகொண்டார். வீல்சேரில் வந்த போப் பிரான்சிஸை பார்த்தவுடன் மோடி கட்டியணைத்து ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். அவரை இந்தியா வரும்படியும் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனைச் சந்தித்த மோடி, இந்தியாவும் அமெரிக்காவும் உலக நன்மைக்காக தொடர்ந்து இணைந்து செயல்படும் என தெரிவித்தார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் துரூடோ உள்ளிட்ட பல தலைவர்களையும் இந்த மாநாட்டின் போது சந்தித்தார் மோடி.
தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய அவர், “இந்தியாவின் தேர்தல் முடிவுகள் “ஜனநாயக உலகிற்கு கிடைத்த வெற்றி”. பாரபட்சமற்ற தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மைக்காக இந்திய தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது” என்று பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் அவர், வரும் காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து பசுமையான உலகத்தை உருவாக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலுக்காக வாழ்க்கை என்ற திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சூரியின் உழைப்பு அசாதாரணமானது : புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன்
செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்குமா?