நமது நாட்டின் முந்தைய காலத்திற்கு மகாத்மா காந்தியும், புதிய இந்தியாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியும் என இரு தேசத் தந்தைகள் உள்ளனர் என்று மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் கூறியுள்ள கருத்து கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மஹாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி குறித்து அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் கடும் அதிருப்தியை எழுப்பின.
இதனையடுத்து சிவாஜியை அவமதித்ததற்காக கோஷ்யாரியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி கூட்டணி கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தின.
மன்னிப்பு கோரிய ஆளுநர்
அதனை தொடர்ந்து ஆளுநர் கோஷ்யாரி தனது நிலைப்பாட்டை விளக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் “சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாராணா பிரதாப் மற்றும் ஸ்ரீ குரு கோவிந்த் சிங் போன்ற பெரியோரை அவமதிப்பதை என்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாது.
எனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்கவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ நான் தயங்கமாட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்” என்று கோஷ்யாரி, ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டு தேசத் தந்தைகள்
இதனால் இந்த பிரச்சனை முடிந்தது என்ற நினைத்த நேரத்தில் மஹாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ் ’தேசத்தந்தை’ குறித்து கூறியுள்ள கருத்து கடும் எதிர்ப்பினை கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடியை ’தேசத் தந்தை’ என்று அம்ருதா பட்னாவிஸ் அழைத்திருந்தார்.
அதன்படி இன்று நடைபெற்ற நேர்காணலில், ”மோடி தேசத் தந்தை என்றால், மகாத்மா காந்தி யார்?” என்று நெறியாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அம்ருதா பட்னாவிஸ், “இந்தியாவிற்கு இரண்டு ‘தேசத் தந்தை உள்ளனர். மகாத்மா காந்தி முந்தைய காலத்தின் தேசத்தின் தந்தை. அதே போன்று புதிய இந்தியாவின் தந்தை மோடி” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து எதிர்கட்சி உறுப்பினர்கள் பாஜக துணை முதல்வரின் மனைவி அம்ருதாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் மீண்டும் தொடரும் காந்தி கொலை
காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர முன்னாள் அமைச்சருமான யஷோமதி தாக்கூர் கூறுகையில், “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் காந்திஜியை மீண்டும் மீண்டும் கொல்ல முயற்சிக்கின்றனர்.
பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமும், காந்திஜி போன்ற பெரியவர்களைக் கேவலப்படுத்துவதன் மூலமும் வரலாற்றை மாற்றுவதில் அவர்கள் வெறித்தனமாக இதுபோன்ற செயல்களைச் செய்கிறார்கள்” என்று தாக்கூர் கூறினார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கூவத்தூர் முதல் பொதுக்குழு வழக்கு வரை : கொட்டித்தீர்த்த ஓபிஎஸ்
Comments are closed.