இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க இன்று (ஜூன் 5) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றார்.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (ஜூன் 4) நடைபெற்றது. இந்த முடிவுகளின்படி, பாஜக 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றது.
திமுக வெற்றி
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளுக்குமான நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையும் நேற்று நடைபெற்றது.
இந்த எண்ணிக்கையின் முடிவில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
ஸ்டாலின் டெல்லி பயணம்
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.
ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு சந்திப்பு?
அதே வேளையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டமும் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்பதற்காக ஆந்திராவில் முதல்வராக பதவியேற்க உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லி வருகை தந்தார்.
சந்திரபாபு நாயுடு டெல்லி விமானம் நிலையம் வந்த அதேநேரத்தில் மு.க.ஸ்டாலினும் அங்கு வந்தார். அப்போது இருவரும் சந்தித்துக் கொண்டதாகவும், மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவிற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, தேர்தல் முடிவுகளின்படி, மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மாநில கட்சிகளான தெலுங்கு தேசம் கட்சியும், ஐக்கிய ஜனதா தள கட்சியும் பாஜகவிற்கு ஆதரவளித்தால் மட்டுமே பாஜக மத்தியில் ஆட்சியமைக்க முடியும்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடுவை டெல்லி விமான நிலையத்தில் சந்தித்தாரா என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’பொண்ணு அவங்க இல்ல’ : தம்பி திருமணத்திற்காக VP வைத்த கோரிக்கை!
தமிழ்நாட்டில் எந்தெந்த கட்சி எவ்வளவு வாக்கு சதவீதம்?