எழுபதுகளையும் தொண்ணூறுகளையும் ஒத்த சூழலை எதிர்கொள்ளும் இந்தியா-  பகுதி 9

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

இரும்பிலிருந்து இரும்பாலும் சிலிக்கனாலும் உருவாகி கம்பியில்லா மின்சார இணைய இணைப்பில் இணைந்து இயங்கும் பொருட்கள் பொருளுற்பத்தி மாற்றமும் அதனைக் கைக்கொண்டு உற்பத்தித்திறனை சீனா பெருக்கியதும் எரிபொருளிலும் தகவல்தொழில்நுட்ப பொருட்களிலும் அமெரிக்கா கொண்டிருந்த முற்றொருமை உடையக் காரணமானது. இப்பொருட்களின் மதிப்பைத் தெரிவித்து வந்த டாலர் உடைப்பைச் சந்தித்தது. 

தோல்வி… தோல்வி… தோல்வி…

அதனைச் சரிசெய்ய டாலரை நீர்க்க வைத்த அமெரிக்காவின் நடவடிக்கை மற்ற நாடுகள் டாலர் கையிருப்பைக் கைவிட காரணமானது; சொந்த நாணய வர்த்தகத்தை நோக்கி நகர்த்தியது. அதனை முன்னெடுக்கும் ரசிய, சீன நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டது அமெரிக்கா. கொரோனாவைக் காரணம்காட்டி சீனாவைத் தனிமைப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. தைவான் பிரிவினையைத் தூண்டி பணியவைக்கும் முயற்சியிலும் தோல்வி. அடுத்து உக்ரைனை நேட்டோவில் இணைத்து ரசியாவைத் தூண்டி போரிட வைத்து அந்நாட்டை உடைக்க முற்பட்டதிலும் தோல்வி. 

இந்தத் தோல்விக்குமேல் தோல்வியும் அதற்குச் செலவிட்ட பில்லியன்கணக்கான பணநட்டம் போதாதென்று இப்போர்களுக்குப் பதிலடியாக சொந்த நாணய வர்த்தகத்தை அவர்கள் தீவிரமாக்கி இருப்பது டாலரின் உலக ஆதிக்கத்தை உடைத்து வருகிறது. டாலரை வாங்கிவைத்துக் கொண்டு சரக்கைத் தருவதை நாடுகள் குறைத்து வருகின்றன.  

புதிய உற்பத்தித் தொழில்நுட்பங்களைக் கொண்டு உற்பத்தித்திறனைப் பெருக்கிவரும் சீனா அதனை குறைவான விலையில் மற்ற நாடுகளுடன் சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. அது டாலர்மைய ஒற்றைத்துருவ உலகை உடைத்து பல நாணயமைய பல்துருவ உலகை உருவாக்கி வருகிறது. அது புதிய மதிப்புவிதி உருவாக்கம் நடந்த எழுபதுகளை ஒத்த சூழலை நோக்கி உலகை நகர்த்தி வருகிறது.

முன்பு சீனா தகவல்தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தை வெளியேற்றி சந்தையில் முற்றொருமைப் பெற்ற அமெரிக்க-இந்திய வர்த்தகவர்க்கம்  உள்ளூர் போட்டியாளர்களையும் ஒடுக்கி பொருட்களின் விலைகளைக் கூட்டி பெருலாபம் பார்த்தார்கள். ஒரேயளவுப் பொருளை அதிக மதிப்பில் விற்று ஜிடிபி வளர்ந்து வானை முட்டுவதாக கதையளந்தார்கள். அது வேகமாக மக்களின் வாங்கும்திறனைக் குறைத்து சந்தையைச் சுருக்கி வந்தது. அந்த சந்தை சுருக்கம் இவர்களின் லாபத்தைக் குறைத்து இரு முதலாளித்துவ-சமூக ஏகாதிபத்தியவாதிகளையும் சந்தைக்கான மோதலில் கொண்டுபோய் நிறுத்தியது. 

அந்தச் சூழலில் வெடித்த உக்ரைன் போரை முன்வைத்து ஐரோப்பிய எரிபொருள் சந்தையைப் பிடித்து அதிக விலையில் விற்று பில்லியன் கணக்கில் பெருலாபம் பார்த்ததைப்போல இந்தியாவையும் அமெரிக்க சார்பெடுக்க வைத்து இந்தியாவுக்கு அதிக விலையில் ஆயுத, எரிபொருள் ஏற்றுமதி செய்து லாபமடைய முயன்றது அமெரிக்கா. அது இருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளை பூதாகரமாக்கி பார்ப்பனியர்களின் ஆதிக்கத்தைக் குழிதோண்டி புதைக்கும் என்பதால் இவர்கள் அமெரிக்க சார்பைத் தளர்த்தி “ரசிய சார்பு சீன எதிர்ப்பு” என பகுதியளவு சார்பிலாநிலை எடுத்தார்கள்.

அமெரிக்கா ஆசையில் மண்ணள்ளி போட்ட இந்தியா

இந்தப் பதட்டச் சூழலைப் பயன்படுத்தி மலிவான விலையில் ரசிய எண்ணெயை இறக்குமதி செய்தது இந்தியா. அதிக விலையில் டாலரில் எண்ணையை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து டாலர் கையிருப்பை இழக்காமல் ரூபாய் மதிப்பு மடமடவென  சரியாமல் காத்தது. அந்த மலிவான எரிபொருளைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்கி பொருட்களின் விலைகளைக் குறைத்து மக்களின் வாங்கும்திறனைக் கூட்டி ஒரு புதிய ரூபாய் மூலதனமைய பொருளாதார சுழற்சியை ஏற்படுத்தி இருக்கமுடியும். மாறாக அதனைச் சுத்திகரித்து அதிகவிலையில் ஏற்றுமதி செய்து ரிலையன்ஸ் பெருலாபம் பார்க்க வைத்தது ஒன்றியம்.   

டாலரில் அதிக விலையில் எண்ணெயை விற்று இலாபம் பார்க்க எண்ணிய அமெரிக்கர்களின் ஆசையில் இந்தியா மண்ணள்ளிப் போட்ட ஒன்றிய பார்ப்பனியம் அப்படி மலிவான ரூபாயில் எண்ணெய் வாங்கி அதிக விலையில் மக்களிடம் விற்று வருமானத்தைப் பெருக்கி வருகிறது. அதேசமயம் கூட்டுக்களவாணிகளுக்கு வரிச்சலுகை அளித்து அவர்களின் இலாபத்தைப் பெருக்க உதவுகிறது. இந்தப் பக்கம் வாங்கி அந்தப்பக்கம் கொடுக்கிறது. இந்த சித்துவிளையாட்டில் ஏமாற்றமுற்ற அமெரிக்கா மோடியின் முசுலீம் படுகொலைகளை கிண்டியும் அதானி பங்குகளின்மீது நிதியத் தாக்குதலைத் தொடுத்தும் பார்ப்பனியர்களை வழிக்குக் கொண்டுவரப் பார்க்கிறது.  

அப்படி தாக்குதலுக்கு உள்ளாகும் அதானியின் பங்குகளில் எல்ஐசியில் இருக்கும் மக்களின் ரூபாய் மூலதனத்தைக் கொட்டி காத்துக் கொண்டிருக்கிறது ஒன்றியம். அமெரிக்கர்களை ஆசுவாசப்படுத்தி அவர்களுக்கு தனது பங்குகளை விற்று கொள்ளையில் ஒரு பகுதியைப் பிரித்துக்கொடுத்துச் சமாளிக்கப் பார்க்கிறார் அதானி. இப்படி ரசிய எண்ணெய் இறக்குமதியின் மூலம் ரூபாய் மூலதனப் பலன்களை அம்பானியும்-அதானியும் பிரித்துக்கொண்டு சாப்பிடும் நிலையில் நீங்கள் கொடுக்கும் பில்லியன்கணக்கான ரூபாய் எங்களிடம் குவிந்து பயனற்றுக் கிடக்கிறது; அதனைப் பயன்படுத்தி உங்களிடம் வாங்கப் பொருளேதும் இல்லை; ஆதலால் பொருட்கள் கிடைக்கும் அமீரக திர்காம் அல்லது சீன யுயனைக் கொடுங்கள் என்று கேட்கிறது ரசியா. 

அரசியல் தாக்குதல்

அதாவது டாலர் கடனுக்குப் பதிலாக சீன நாணயக் கடனை நோக்கி இந்தியாவை நகர்த்துகிறது. அப்படி சீன மூலதனத்தை அனுமதித்தால் அவர்களின் தகவல்தொழில்நுட்ப பொருட்களுக்கான சந்தையையும் சேர்த்து அனுமதிக்கவேண்டி வரும். மோதலை அடுத்து மாற்றியமைக்கபட்டிருக்கும் சீன-இந்திய எல்லையையும் வேறுவழியின்றி ஏற்கவேண்டி இருக்கும். அது அமெரிக்க-இந்திய ஏகாதிபத்தியவாதிகளின் முற்றொருமையையும் கேள்விக்குள்ளாக்கும். அது பாஜக மீதான அமெரிக்காவின் அரசியல், பொருளாதார, நிதியத் தாக்குதலாகவும் உள்ளூர் எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த அரசியல் தாக்குதலாகவும் வெடிக்கும். 

ஆதலால் அப்படியான ஒரு சமரசம் அவ்வளவு எளிதில் நடக்கவியலாது. அது நடக்காமல் இப்போதைய நிலை தொடருமானல் அது ரசிய எண்ணெய் இறக்குமதியை கேள்விக்குள்ளாக்கும். இதையும் சமாளித்து ரசிய எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்தாலும் யுயனைக் கொடுத்தால்தான் சரக்கைக் கொடுப்போம் என்று சீனா சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை. இந்தியா அமெரிக்காவுடன் 128.55 பில்லியனுக்கும் சீனாவுடன் 113.83 பில்லியன் அளவுக்கும் வர்த்தகம் செய்கிறது. 

அமெரிக்கவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருட்களில் பாதி மென்பொருட்கள். அமெரிக்க ஏகபோகம் உடைந்து அந்நாட்டு வர்த்தகப் பெருநிறுவனங்கள் வளர்ச்சியின்றி தேங்கி வீழ்வது உறுதியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கான மென்பொருள் தேவை நிச்சயம் குறையும். இந்திய ஜிடிபியில் ஒன்பது விழுக்காடு பங்களிக்கும் மென்பொருள்துறை எழுபது விழுக்காடு அளவுக்கு அமெரிக்காவிற்குத்தான் ஏற்றுமதி செய்கிறது. 

அங்கே வங்கிகள் திவாலாகி அவர்கள் சேவைத்துறையில் இருந்து உற்பத்திக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில் வாங்கும்திறனுள்ள தொழிலாளர்கள் மிகுந்த இந்திய மென்பொருள்துறையின் வீழ்ச்சியும் இந்தியப் பொருளாதாரத்தில் அதன் பாதிப்புகளும் பாரதூரமாக இருக்கும். அப்போது ரசிய-சீன வற்புறுத்தலுக்குப் பணிந்துபோவதைத் தவிர நமக்கு வேறு வழியிருக்காது. அப்படியான மாற்றம் எழுபதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஏற்பட்ட கடுமையான விலைவாசி உயர்வு, போராட்டம், கூச்சல்குழப்பம் நிறைந்ததாகவே இருக்கும். 

ஆக, இப்போதைய உலக மாற்றம் மற்ற நாடுகளுக்கு எழுபதுகளை ஒத்த புதிய மதிப்பு உருவாக்கமும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாணயப் பரிவர்த்தனை மாற்றமாக இருக்கிறது. எழுபதுகளில் சோவியத்ரசியா பெற்றிருந்த இடத்தை இப்போது சீனாவும், ரசியாவும் பகிர்ந்து கொள்கின்றன. 

யுயன் முதலீட்டை வெளியேற்றி டாலரை முற்றொருமையை ஏற்படுத்தியிருக்கும் இந்தியாவுக்கோ எழுபதுகளின் மதிப்பு மாற்றத்தோடு பார்ப்பனிய சமூக முற்றொருமையை உடைத்து டாலர் மூலதனத்தை அனுமதித்ததைப்போல யுயனை ஏற்று அனுமதிக்க வேண்டிய தொண்ணூறுகளை ஒத்த சூழலும் இணைந்ததாக இருக்கிறது. 

அன்று சோவியத்-பார்ப்பனிய சமூக ஏகாதிபத்திய முற்றொருமை நிலவியது. இன்று அமெரிக்க-பார்ப்பனிய முதலாளித்துவ-சமூக ஏகாதிபத்திய முற்றொருமை ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. எழுபதுகள்கால இந்தியாவில் பார்ப்பனிய தொழிற்துறை, நிலவுடமைகளின் முற்றொருமையும் அதனால் சந்தையில் விலைவாசி உயர்வும், வறுமையும் தலைவிரித்தாடியது. அதற்கு எதிரான போராட்டமும் புதிய மதிப்பு விதி உருவாக்கமும் நிலவுடைமைகளின் ஆதிக்கத்தை உடைத்தது. அதேசமயம் தொழிற்துறையில் அவர்களின் ஏகபோகம் தொடர்ந்தது. 

மாநில சுயாட்சிக்கான முழக்கங்கள்

அதன்பிறகான இந்த ஐம்பது ஆண்டு பொருளாதார வளர்ச்சி இந்திய மக்கள் அனைவரும் அதிகபட்சமாக வயிற்றை நிறைக்கும் வாய்ப்பைத்தான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. சரியான உணவோ முறையான வேலையோ இல்லாமல் அவர்கள் ஊட்டச்சத்து வறுமையில் வாங்கும் வழியற்றவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

இந்நிலையில் இந்தியாவின் தொழிற்துறையில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இரு ஏகாதிபத்திய முற்றொருமை விலைவாசியை உயர்த்தி பொருளாதாரச் சுருக்கத்தை ஏற்படுத்தி அப்பிரச்சனைகளை இன்னும் தீவிரமாக்கி வருகிறது. இவர்களின் முற்றொருமையை உடைத்து இந்திய நாட்டில் உள்ள திறன்மிக்கவர்கள் அனைவரும் தொழில்முனைவோராகும் வாய்ப்பை ஏற்படுத்தினாலொழிய இப்பிரச்சனைக்கு தீர்வேதுமில்லை. 

ஆனால் அப்படியான தீர்மானகரமான திசையில் எந்தப் போராட்டமும் நடைபெறுவதைக் காணமுடியவில்லை. பெருமளவில் அப்படியான திறன்மிக்க தொழிலாளர்களை நாம் உருவாக்கவுமில்லை. எழுபதுகளில் பாதிக்கப்பட்ட ஆளும்வர்க்க நிலவுடமையோ தொண்ணூறுகளில் பாதிக்கப்பட்ட பார்ப்பனிய தொழில்துறையோ தற்போது பாதிக்கபடாத நிலையில் அப்படியான தெளிவான வீரியமான போராட்டங்கள் நடைபெறாவண்ணம் பார்ப்பனிய ஆளும்வர்க்கம்  பார்த்துக் கொள்கிறது. 

இவர்களின் தொழில்துறை முற்றொருமையால் பாதிக்கப்படும்  பிராந்திய முதலாளிகளை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகளோ வெறுமனே ஜனநாயக மீட்பு, பாசிச எதிர்ப்பு, அம்பேத்கரின் அரசியல் சாசனத்தைக் காத்தல், சமூகநீதி என ஆளுக்கொரு கோசத்தை முன்வைத்து மாற்றைக் கட்டியெழுப்பும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். 

தொழிற்துறை சுயசார்பு மாநில சுயாட்சிக்கான முழக்கங்கள் ஓங்கி ஒலிக்க வேண்டிய இந்தக் காலத்தில் எழுபது-தொண்ணூறுகளைப் போலவே எந்த மாற்றுப் பொருளாதாரத் திட்டமற்ற வீரியமற்ற வெற்று அரசியல் முழக்கத்தின் மூலமாக அரசியல் ஒருங்கிணைப்பைச் செய்யும் அவலத்தைக் காண்பது வருத்தமளிக்கக் கூடியதாக இருக்கிறது. 

சரி! இந்த கடுமையான எழுபதுகளும் தொண்ணூறுகளும் இணைந்த சூழலை எதிர்கொள்வது எப்படி? பார்ப்பனிய-அமெரிக்க தொழிற்துறை முற்றொருமையை உடைத்து விலைவாசியைக் குறைத்து வேலைவாய்ப்பைப் பெருக்குவது எப்படி? அப்படிச் செய்வதற்கான நமது பொருளாதாரத் திட்டமென்ன? அப்படியான பொருளாதார மாற்றைச் செயல்படுத்தி அடையப்போகும் சமூக மாற்றம் என்ன?.

அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு

India is facing a situation similar to the 70s and 90s by baskar selvaraj

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.

சிறப்புக் கட்டுரை: உலகை மாற்றிக்கொண்டிருக்கும் உக்ரைன் போர் பகுதி 8

சிறப்புக் கட்டுரை: உடையும் ஒற்றைத் துருவம்… உருவான சமூக ஏகாதிபத்தியம்: பகுதி -7

சிறப்புக் கட்டுரை: இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6

சிறப்புக் கட்டுரை: பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5

சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4

சிறப்புக் கட்டுரை: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? பகுதி-3

சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2

சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *