இந்திய அரசாங்கத்திற்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் நஜ்ஜர் கொல்லப்பட்டதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறிய கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதரை அடுத்த 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே கனடாவில் வசித்து வந்த இந்தியா வம்சாவளியும், காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.
இது இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனிநாடு கேட்டு போராடி வரும் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே பதட்டத்தை அதிகரித்து வந்தது.
கனடா பிரதமர் குற்றச்சாட்டு!
இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.
அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 18) பேசிய ஜஸ்டின் ட்ரூடோ “ இந்திய அரசின் உயர்மட்ட உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கனடா தனது ஆழ்ந்த கவலைகளை அறிவித்துள்ளது” என்று தெரிவித்தார்.
கனடா மண்ணில் ஒரு கனேடிய குடிமகன் கொல்லப்படுவது என்பது வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு ஈடுபாடும் நமது இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும்” என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் கடந்த வாரம் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லி சென்றிருந்த நிலையில் பிரதமர் மோடியிடம் இதுகுறித்த தனது கவலைகளை நேரடியாகவும் தெரிவித்ததாக ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.
இதற்கிடையே கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, இந்தியாவின் உளவுத்துறையின் தலைவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதை உறுதி செய்தார்.
எனினும் கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இந்தியா மறுப்பு!
அதே வேளையில் கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “கனட பிரதமர் பாராளுமன்றத்தில் கூறியதையும், அவர்களின் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.
கனடாவில் எந்தவொரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசாங்கத்தின் தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் அபத்தமானது.
இதே போன்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் முன்பு நமது பிரதமரிடம் முன்வைத்தபோது, அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன.
நாங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு வலுவான அர்ப்பணிப்புடன் கூடிய ஜனநாயக அரசியலை முன்னெடுத்து வருகிறோம்.
கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல.
இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான கவனத்தை திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் தற்போது காலிஸ்தான் கனடா அரசியல் பிரமுகர்கள் இத்தகைய கூறுகளுக்கு வெளிப்படையாக அனுதாபத்தை வெளிப்படுத்தியிருப்பது கவலை அளிக்கிறது.
காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொல்லப்பட்ட விஷயத்தில் இந்திய அரசாங்கத்தை இணைக்கும் அனைத்து குற்றச்சாட்டையும் நாங்கள் நிராகரிக்கிறோம்.
மேலும் அங்கு செயல்படும் அனைத்து இந்திய விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக விரைவான மற்றும் பயனுள்ள சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#WATCH | Canadian High Commissioner to India, Cameron MacKay leaves from the MEA headquarters at South Block, New Delhi. pic.twitter.com/zFAaTFfeAP
— ANI (@ANI) September 19, 2023
இந்திய அரசின் பதிலடி!
மேலும் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய உளவுத்துறை தலைவரை நாட்டை விட்டு வெளியேற்றியதற்கு இந்திய அரசு தற்போது பதிலடி கொடுத்துள்ளது.
அதன்படி இன்று காலை இந்தியா நாட்டின் கனடா தூதரான கேமரூன் மேக்கேயை நேரில் அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.
மேலும் அவரை அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
புதிய நாடாளுமன்றத்திற்கு மாறிய சிறப்பு கூட்டத்தொடர்!
5000 இருந்தால் எம்.பி.சி சாதிச்சான்றிதழ்?: ராமதாஸ் குற்றச்சாட்டு!