இந்தியா எந்த நாட்டின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை விரும்பவில்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று (ஜூலை 11 )செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், மனிதகுல முன்னேற்றத்தில் செயற்கை நுண்ணறிவு ஒரு புரட்சிகரமான நடவடிக்கை எனவும், இந்த பூமியில் மிகவும் வளர்ச்சியடைந்த உயிரினம் மனிதன் என்பதற்கு இதுவே ஆதாரம் என்று கூறினார்.
“மனிதமூளை படைப்பாற்றால் கொண்டது , அறிவாற்றலை பிரதிபலிக்கும் திறன் கொண்டது, அறிவாற்றலை உண்டாக்கும் நுண்ணறிவை தூண்டக்கூடியது என்பது வியப்பளிக்கிறது. தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உரிய நேரத்தில் அறிமுகப்படுத்தியது காலத்தின் கட்டாயம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புடின் கூறிய ஒரு மேற்கோள் எனக்கு நினைவிற்கு வருகிறது. ரஷ்யா தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாடு என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். செயற்கை நுண்ணறிவு குறித்து, புடின் ஒருமுறை கூறும்போது செயற்கை நுண்ணறிவு துறையில் யார் சிறந்து விளங்குகிறாரோ அவர் உலகை ஆள்வார் என்று சொல்லியிருந்தார். செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த உண்மையை மறுக்க முடியாது. ஆனால் யார் மீதும் ஆதிக்கம் செலுத்துவதை இந்தியா விரும்பவில்லை. உலகம் என்பது ஒரு குடும்பம். அதை வெல்ல நாங்கள் ஒருபோதும் எண்ணியதில்லை என்று தெரிவித்த அவர். எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்காகவே, செயற்கை நுண்ணறிவு திறன் உருவாக்கப்படுகிறது” என்று கூறினார். செயற்கை நுண்ணறிவு மனிதகுல முன்னேற்றம் மற்றும் அமைதிக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்