இந்தியா சீனாவின் வேறுபட்ட பாதையும் வளர்ச்சியும் – பகுதி 6

அரசியல் சிறப்புக் கட்டுரை


பாஸ்கர் செல்வராஜ்

போட்டி முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்தியமாகும்; அதற்கு மாற்று அரச முதலாளித்துவம்; அதுவும் ஓரிடத்தில் குவிந்தால் சமூக ஏகாதிபத்தியமாகும் என்பது சோவியத் ரஷ்யா, இந்திய அனுபவம் சொல்லும் பாடம்.

உலகத்தை இரண்டாகப் பிரித்த முதலாளித்துவ, சமூக ஏகாதிபத்தியங்களின் போட்டி சமூகமயமான உற்பத்தியை நிர்வகிக்க தேவையான தகவல் தொழில்நுட்பத்தைத் தோற்றுவித்தது.

அதன்மூலம் உற்பத்தித் திறனைக் கூட்டிய அமெரிக்க ஏகாதிபத்தியம் சோவியத்தை வீழ்த்தி ஒற்றைத்துருவ உலகை ஏற்படுத்தியது. உற்பத்திக்கும் பொருட்களின் இயக்கத்துக்கும் இன்றியமையாத எரிபொருளிலும் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளிலும் முற்றொருமை பெற்ற அவர்கள் தாராளமய தேவையும் அளிப்பும் சார்ந்த சந்தைவிதியை செயல்படுத்தி அனைவரையும் ஏற்க வைத்தார்கள்.

தங்களுக்குப் போட்டியற்ற பொதுவான சோசலிசம் மற்றவர்களுக்குப் போட்டி முதலாளித்துவம் என்ற இந்த ஏற்றத்தாழ்வான மதிப்புவிதி யாருக்கு சாதகமானது என்று சொல்லத்தான் வேண்டுமா?.

சந்தையில் தேவை கூடும்போது அவர்களின் பொருட்களின் விலையைக் கூட்டி இலாபத்தைப் பெருக்குவார்கள். அது விலைவாசியைக் கூட்டி மக்களின் சேமிப்பை விழுங்கி வாடிக்கையாளர்களின் வாங்கும்திறனைக் குறைக்கும். அதனால் குறையும் தேவையைக் கூட்ட சேமிப்புக்கான வட்டியைக் குறைத்து சமூகத்தின் கடனைக் கூட்டுவார்கள்.

அது உற்பத்தியை முடுக்கிவிட்டு விற்பனை பெருகும்போது டாலர் மதிப்பைக் கூட்டி கொடுத்த மலிவான பணத்துக்குக் கூடுதலான மதிப்பைக் கறந்துவிடுவார்கள்.
இப்படி விலையை உயர்த்தி மதிப்பைத் திரிப்பதன் மூலம் இவர்கள் விற்கும் பொருட்களின் விலையும் அதனைத் தெரிவிக்கும் டாலரின் மதிப்பும் எப்போதும் கூடும்.

போட்டி போட்டுக்கொண்டு மற்ற பொருட்களை உற்பத்தி செய்பவர்களின் சரக்கின் மதிப்பு எப்போதும் வீழ்ந்து அதன் மதிப்பைத் தெரிவிக்கும் அவர்களின் நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து வீழும்.

அப்படி வீழும் நாணய மதிப்பிழப்பைச் சரிசெய்ய மற்ற நாட்டு முதலாளிகள் பொருட்களின் விலைகளைக் கூட்டி தொழிலாளர்களின் சம்பளத்தைக் குறைப்பார்கள். அது வழக்கம்போல விலைவாசியைக் கூட்டி சேமிப்பை விழுங்கி வாங்கும்திறனைக் குறைக்கும்.

அப்படி குறையும் தேவையைக் கூட்ட சேமிப்புக்கான வட்டியைக் குறைத்து சமூகத்தின் கடனைக் கூட்டும் சுழற்சி தொடரும். இப்படி அமெரிக்காவினால் ஏற்படுத்தப்படும் பொருளாதார சுழற்சி உலகம் முழுக்க எதிரொலிக்கும்.

இந்திய ரூபாய் வீழ்ச்சி

இப்படிப் பொருட்களின் விலைகளை ஏற்றியும் பணத்தின் மதிப்பைத் திரித்தும் விளையாடிய விளையாட்டில் அமெரிக்க மக்களும் மற்ற நாடுகளின் மக்களும் தங்களின் சேமிப்பை இழந்து கடனாளியாகி இருக்கிறார்கள். செல்வம் முழுவதும் சிலரிடம் குவிந்து அவர்கள் பெரும் செல்வந்தர்கள் ஆகியிருக்கிறார்கள்.

India China Divergent Trajectory and Growth


அருகி தொண்ணூறுகளுக்குப் பிறகு இந்தச் சூழலில் சிக்கிய இந்திய ரூபாயின் மதிப்பு பெருமளவு வீழ்ந்திருக்கிறது. வாங்கும் திறனுடைய இந்திய நடுத்தர மக்களின் அளவு பத்து விழுக்காட்டுக்கும் கீழாகச் சுருங்கியிருக்கிறது.

அரசும் மக்களும் வாங்கிய டாலர் கடன் பெருகியிருக்கிறது. ஆனால் நம்மைப் போலவே டாலரை அனுமதித்த சீனர்களின் அந்நிய செலாவணிக் கையிருப்பு பெருகி நாணயம் வீழாமல் நிலைத்திருக்கிறது (படம் காண்க). அவர்களின் நடுத்தர வர்க்கத்தின் அளவும் ஐம்பது கோடியாகப் பெருகியிருக்கிறது. ஏனிந்த முரணான வளர்ச்சி?

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் முற்றொருமை பெற்று விலைகளைக் கூட்டி விளையாடும் பொருட்கள் எண்ணெய்யும் தகவல் தொழில்நுட்ப பொருட்களும். 1993வரை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு எண்ணைய் உற்பத்தி செய்த சீனா தனது பொருட்களுக்குத் தானே விலையைத் தீர்மானிக்கும் ஆற்றலை தக்கவைத்துக் கொண்டது.

சீன நாணயத்தின் மதிப்பை அரசே தீர்மானித்தது. அரச முதலாளித்துவ கட்டமைப்பைக் கைவிடாமல் மூலதனம், எரிபொருள், தொழில்நுட்ப உள்கட்டமைப்பை எல்லோருக்கும் பொதுவாக்கியது.

எண்ணெயைப் பெரும்பாலும் இறக்குமதி செய்துவந்த இந்தியா ரூபாயில் எண்ணெய் இறக்குமதி செய்வதையும் அரச முதலாளித்துவத்தையும் படிப்படியாக கைவிட்டு ரூபாயின் மதிப்பை சந்தையை தீர்மானிக்கவிட்டது. சீனா உணவு, கல்வி, மருத்துவ, சுகாதாரத்தை அனைவருக்கும் உறுதிசெய்து தொழிலாளர்களின் சராசரித்திறனைக் கூட்டி திறன்மிக்க தொழிலாளர்களின் எண்ணிக்கையைப் பெருக்கி சந்தையில் போட்டியை உறுதி செய்தது. நாடு தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பில் சுயசார்பை அடையும் நோக்கில் அவர்களை முடுக்கிவிட்டது.

India China Divergent Trajectory and Growth

இந்தியாவோ முன்பிருந்த பொதுக்கல்வி, மருத்துவத்தையும் தனியார்மயமாக்கியது. நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் மேட்டுக்குடி கொழுந்துகளை (elite) உருவாக்க அரும்பாடுபட்டது. அப்படி உருவான திறன்மிக்கத் தொழிலாளர்களையும் மற்ற திறன்குறைந்த தொழிலாளர்களையும் ஏற்றுமதி செய்து அவர்கள் அனுப்பும் டாலர் வருமானத்தில் கீழான வாழ்வு வாழ முற்பட்டது.

திறன்மிக்க தொழிலாளர்களை அனுப்பிய இந்தியா

சீனாவில் உற்பத்தியான சரக்குகளை இறக்குமதி செய்வதைபோல செலவே இல்லாமல் நாம் உருவாக்கிய திறன்மிக்க தொழிலாளர்களை அமெரிக்கா இறக்குமதி செய்துகொண்டது அல்லது தனக்குத் தேவையான மென்பொருட்களை உருவாக்கப் பயன்படுத்திக் கொண்டது.

வரலாற்றுக் காலம்தொட்டு பார்ப்பனிய கட்டமைப்பின் மூலம் உற்பத்தியை உறிஞ்சி ஏற்றுமதி செய்துவாழும் இந்திய மூவர்ண வர்த்தக ஆதிக்க வர்க்கம் அமெரிக்க வர்த்தக வர்க்கத்துடன் கைகோர்த்துக் கொண்டு உற்பத்தியை உறிஞ்சி இலாபத்தைப் பெருக்கும் சேவைத்துறைகளில் கவனம் செலுத்தி மென்மேலும் வளரச்செய்தது.

அதற்குத் தேவையான மென்பொருட்களை உருவாக்கி ஏற்றுமதி செய்து கொள்ளை லாபம் பார்த்தது.

எங்கோ உற்பத்தியான பொருட்களை அவர்களுடன் சேர்ந்துகொண்டு விற்று அதிலும் இலாபம் பார்த்தது. மக்களிடம் சுழன்று வந்த மதிப்புமிக்க ரூபாய் மூலதனத்தை அமெரிக்க-இந்திய வர்த்தக வர்க்கங்கள் ஒன்றாக சேர்ந்துகொண்டு விலைகளை உயர்த்தியும் ரூபாய் மதிப்பைக் குறைத்தும் இலாபத்தைப் பெருக்கினார்கள்.

இந்தியா போன்ற நாடுகளில் இருந்து திறன்மிக்க தொழிலாளர்களை மலிவாகவும் செலவில்லாமலும் இறக்குமதி செய்த அமெரிக்காவில் அவர்களை உருவாக்கும் தேவை குறைந்து அரசு அந்தக் கடமையில் இருந்து தவறியது.

33 கோடி மக்களைக் கொண்ட அமெரிக்காவும் 14 கோடி மக்களைக்கொண்ட ரஷ்யாவும் ஒரேயளவு அறிவியல், கணிதம், பொறியியல், தொழில்நுட்ப பட்டதாரிகளை உருவாக்குகின்றன (படம் காண்க). அமெரிக்கா இப்படி உருவாக்கும் பட்டதாரிகள் எல்லோரும் அமெரிக்கர்கள் என்று சொல்வதற்கில்லை.

முன்பு நீராவி இயந்திரங்கள், துருப்பிடிக்காத இரும்பு, மின்சாரம் என பல புதுமைகள் செய்து அவற்றில் முற்றொருமையைப் பெற்று உலகையாண்ட இங்கிலாந்து பின்பு உற்பத்தியைக் கைவிட்டு பசையான இலாபம் தரும் வர்த்தகத்தில் கவனம் செலுத்தி சந்தையைப் பிடிக்க போரில் ஈடுபட்டு வீழ்ந்தது.

தகவல் தொழில்நுட்பத்தைத் தன்வயமாக்கிய சீனா

அதேபோல பனிப்போர்கால போட்டியில் குறைமின்கடத்திகளைக் கண்டறிந்து தகவல்தொழில்நுட்ப புரட்சியை சாதித்த அமெரிக்க ஏகாதிபத்தியமும் உற்பத்தியைக் கைவிட்டு வர்த்தக சேவைத்துறையில் கவனத்தைச் செலுத்தியது. அதற்குத் தேவைப்படும் கொழுந்துகளை உருவாக்கியது.

கல்வி, மருத்துவத்தைக் காசுபார்க்கும் தொழிலாக்கியது. பள்ளிக்கல்வி முடித்த பெரும்பகுதி அமெரிக்கத் தொழிலாளர்கள் வாகன ஓட்டிகளாகவும் பொருள் விற்பனை முகவர்களாகவும் மாறிப்போனார்கள்.

இந்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மாறுபட்ட சீனாவோ பெருமளவில் உருவாக்கிய திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டு வன்பொருள் மென்பொருள் ஆகிய இரண்டையும் கைக்கொண்டு தகவல் தொழில்நுட்பத்தைத் தன்வயமாக்கியது (indigenize). அதன்மூலம் அந்தப் பொருட்களுக்கான விலைகளை உயர்த்தி அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் சீனர்களைச் சுரண்டும் வழிகளை அடைத்தது.

India China Divergent Trajectory and Growth


https://fred.stlouisfed.org/series/FPCPITOTLZGIND

தகவல் தொழில்நுட்பம் தன்வயமாகாத எரிபொருளை இறக்குமதி செய்ய ஆரம்பித்த தொண்ணூறுகளில் சீனாவின் விலைவாசி உச்சத்தில் இருந்ததை மேலேயுள்ள படம் காட்டுகிறது. அதன்பிறகு ஏற்றயிறக்கம் நிலவுகிறது. தகவல் தொழில்நுட்பம் தன்வயமாகி யுயனில் எரிபொருளை இறக்குமதி செய்ய ஆரம்பித்த 2013க்குப் பிறகு அது இரண்டு விழுக்காட்டைத் தாண்டாமல் நீடிக்கிறது.

சீனர்கள் தங்கள் நாணயத்தில் கொண்டிருந்த இறையாண்மையும் தன்னிறைவுப் பொருளாதாரமும் விலையை உயர்த்தியும் நாணய மதிப்பைத் திரித்தும் அவர்களின் செல்வத்தை மற்றவர்கள் சுரண்டாமல் காத்திருக்கிறது. ஐம்பது கோடி நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி இருக்கிறது. இது எதுவும் இல்லாத இந்தியாவிலோ அரிதாகவே விலைவாசி இரண்டு விழுக்காட்டைத் தொட்டிருக்கிறது. பெரும்பாலும் அதற்கு மேலாக இருந்து வந்திருக்கிறது. வாங்கும் வசதியுள்ளவர்களை அருகச் செய்திருக்கிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவைப் போலல்லாமல் அரச முதலாளித்துவத்தை கைவிடாத அதேசமயம் சீனாவில் மொத்த செலவில் மத்திய அரசு பதினான்கு விழுக்காடு மட்டுமே செலவு செய்து மற்ற 86 விழுக்காட்டை உள்ளூர் அரசுகளிடம் விட்டிருக்கிறது. சோவியத்திடம் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, பணத்தை உருவாக்கி செலவு செய்யும் அதிகாரத்தை பிராந்திய உள்ளூர் அரசுகளிடம் விட்டு மூலதனமும் அதிகாரமும் ஓரிடத்தில் குவிவதைத் தவிர்த்திருக்கிறது.
இதன்மூலம் நாம் கற்பது

  1. உற்பத்தி தொழில்நுட்பங்களை கைக்கொள்வதில் திறன்மிக்க தொழிலாளர் உருவாக்கமே தீர்மானகரமான காரணி.
  2. இந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய காலத்தில் அரச முதலாளித்துத்தின் மூலமே அதனை எதிர்த்து நின்று இறையாண்மையைக் காத்து சுரண்டலைத் தடுக்கமுடியும்.
  3. அரச முதலாளித்துவ கட்டமைப்பை ஜனநாயகப்படுத்தும்போது அதன் உடன்விளைவான சமூக ஏகாதிபத்தியம் ஏற்படாமல் தடுக்கமுடியும்.
  4. அரச முதலாளித்துவ கட்டமைப்பை ஜனநாயகப்படுத்தி எல்லோருக்கும் பொதுவாக்கி திறன்மிக்க தொழிலாளர்களைப் பெருக்கினால் சந்தையில் போட்டியை உருவாக்கி விலைவாசியைக் கட்டுப்படுத்தி உற்பத்தி தொழில்நுட்பத்தைக் கைக்கொள்ள முடியும். வாங்கும்திறனுள்ள வர்க்கத்தைப் பெருக்க முடியும்.
  5. அப்படி செய்யத்தவறி அரச முதலாளித்துவத்தை ஒருசிலருக்கானதாக்கி திறன்மிக்க தொழிலாளர்களை அவர்களிடம் கூலிக்காரர்களாக்கி சுரண்ட அனுமதித்தால் செல்வத்தை ஓரிடத்தில் குவித்து மக்களை கடனிலும் நாட்டை பொருளாதார நலிவில் கொண்டுபோய் நிறுத்தும்.
    திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்கத் தவறிய அமெரிக்கா தகவல்தொழில்நுட்ப உற்பத்தி வளர்ச்சியின் அடுத்தகட்ட உற்பத்தி தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் எப்படி பின்தங்கியது. அந்த உற்பத்தி தொழில்நுட்ப மாற்றம் எப்படி ஒற்றைத்துருவ உலகை உடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த உற்பத்தி மாற்றம் என்ன? உடையும் உலகில் இந்தியாவின் நிலையென்ன?

நாளை பார்க்கலாம்

கட்டுரையாளர் குறிப்பு

India China Divergent Trajectory and Growth Baskar Selvaraj

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.

சிறப்புக் கட்டுரை: பெருகிய உற்பத்தித்திறனும் உடைந்த சமூக ஏகாதிபத்தியங்களும் பகுதி 5

சிறப்புக் கட்டுரை: டாலர் உலகப் பணமானதும், இந்தியா சோசலிசத்திற்கு மாறியதும் எப்படி? பகுதி -4

சிறப்புக் கட்டுரை: விலையை உயர்த்தி உழைப்பை உறிஞ்சும் பொறிமுறை என்ன? பகுதி-3

சிறப்புக் கட்டுரை: பெருநிறுவனங்களின் முற்றொருமையை மட்டும்தான் உடைக்கவேண்டுமா? பகுதி-2

சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *