இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ, சபா ராசேந்திரன் இரா.அங்கையர்கண்ணி தம்பதிகளின் மகன் சுமந்த்க்கும், கடலூர் ஒன்றிய திமுக அவைத்தலைவர் சாரங்கபாணி செல்வராணி தம்பதிகளின் மகள் தனரஞ்சினிக்கும் திமுக இளைஞர் அணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தும் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் “தன்னுடைய மகன் திருமணத்தை நடத்தி வைக்க நான் நெய்வேலிக்கு வர வேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்னாலேயே என்னிடம் தேதி வாங்கி மிகப்பெரிய ஏற்பாடுகளை சபா ராசேந்திரன் செய்து வந்தார். ஆனால் நேரில் வர இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் அழைப்பின் பேரில் நேற்று டெல்லி வந்துவிட்டேன். இந்த செய்தியை சபா ராசேந்திரனுக்கு நான் தொலைபேசியில் அழைத்து சொன்னேன்.
அவரும் என்னுடைய நிலைமையை புரிந்துகொண்டு நீங்க போய்ட்டு வாங்கனா என்று பாசத்தோடு சொன்னார். சபா ராசேந்திரனின் குடும்பமும் என் குடும்பம் தான். அதனால் தான் எனக்கு பதிலாக இளைஞரணி செயலாளர் உதயநிதி கலந்துகொள்வார் என்று அவரிடம் சொன்னேன்.
டெல்லியில் இருந்தாலும் என்னுடைய எண்ணங்கள் எல்லாம் நெய்வேலியில் தான் உள்ளது. சபா ராசேந்திரன் குடும்பம் என்பது வாழையடி வாழையாய் திமுக குடும்பமாய் இருந்து வருகிறது. இனியும் அப்படி தான் இருக்க போகிறது. தனது தொகுதிக்கு தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில் சபா ராசேந்திரன் கண்ணும் கருத்துமாக இருப்பார். இது என்னை விட நெய்வேலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நெய்வேலி நிறுவனத்திற்கும் தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் பாலமாக இருந்து பேச்சுவார்த்தையை சுமூகமாக முடிப்பவராகவும் ராசேந்திரன் செயல்பட்டு வருகிறார். இதையெல்லாம் பார்க்கும்போது சபா ராசேந்திரனை சபாஷ் ராசேந்திரன்னு சொல்லத் தோன்றுகிறது. அந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்டு வரும் சபா ராசேந்திரன் இல்ல திருமண விழாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தான் இந்தியாவை காப்பாற்ற முடியும். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அப்படி முழு வெற்றி பெற்றால் தான் மத்திய ஆட்சியில் நாம் முக்கிய பங்காற்ற முடியும். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற திருமண விழாவில் உறுதியெடுத்துக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“பாஜக என்ற விஷப்பாம்பை ஒழிக்க வேண்டும்” – உதயநிதி
சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்!