டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் போட்ட விதை… ஜூன் 1 இந்தியா கூட்டணி க்ளைமேக்ஸ் கூட்டம்… பின்னணி!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும் ஜூன் 1ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் பற்றிய தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

”மக்களவைத் தேர்தலின் ஏழாவது கட்ட மற்றும் இறுதிகட்ட வாக்குப் பதிவு ஜூன் 1ம் தேதி 57 தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. இவற்றில் உத்தரபிரதேசத்தில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்ளிட்ட தொகுதிகள், பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து தொகுதிகள் உள்ளிட்டவை அடங்கும்.

இந்த நிலையில் ஜூன் 1ஆம் தேதி இந்தியா கூட்டணி கூட்டி இருக்கும் டெல்லி கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது. ஏற்கனவே மே 11ஆம் தேதி ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில்… இந்தியா கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற விவாதம் அந்த கூட்டணிக்குள் மீண்டும் எழுந்தது.

கெஜ்ரிவால் சிறையில் இருந்ததால் இந்த கூட்டணி கட்சி தலைவர்களின் பொதுக்கூட்டத்தை கூட்ட முடியவில்லை. அவர் வெளியே வந்த நிலையில் இது போன்றதொரு பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் சிலர் விரும்பினர்.

Image

ஆனால் அப்போது திமுக சார்பில் இதுகுறித்து வேறு கருத்து முன் வைக்கப்பட்டது. ‘வட இந்தியாவில் தேர்தல் களம் இந்தியா கூட்டணிக்கு முற்றிலும் சாதகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில தலைவர்கள் ஒத்துழைப்போடு களப்பணியில் ஈடுபடுவது தான் அவசியமானதாக இருக்கும். இந்த நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சி தலைவர்களை அழைத்து பிரம்மாண்ட பொதுக்கூட்டம் பொதுக்கூட்டம் நடத்துவதை விட, அடுத்த கட்ட தேர்தல்களுக்கான களப்பணி சரியானதாக இருக்கும். பாஜக களத்தை இழந்துகொண்டிருக்கும் நிலையில், நாம் களத்தைக் கைப்பற்ற இதுவே சரியான உத்தியாக இருக்கும். கடைசி கட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசிக்கலாம்’ என்று திமுக சார்பில் கருத்து முன் வைக்கப்பட்டது.
இது மே 12 மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ‘மாத்தி யோசிக்கும் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது.

Image

இந்த அடிப்படையில் தான் இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்து கொள்ளக்கூடிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்படவில்லை.

பாஜகவுக்கு இரு நூறு இடங்கள்தான் கிடைக்கும் என்று பல ஊடகங்களிலும் விவாதங்கள் எழுந்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் பிரசாந்த் கிஷோர், யோகேந்திர யாதவ் உள்ளிட்டோர் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று கூறினார்கள்.

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் 100 இடங்களைக் கூட பிடிக்காது என்று கூறினார். யோகேந்திர யாதவ் பாஜக 260 இடங்கள் வரை பிடிக்கும், அதன் கூட்டணிக் கட்சிகள் 35 இடங்கள் வரை பிடிக்க்கும் என்று கூறினார். கடைசி நேரத்தில் வெற்றி பெறும் அணிக்கே ஓட்டளிப்போம் என்ற உளவியல் விதையை விதைப்பது போல இந்த கருத்துக் கணிப்புகளை பாஜக தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் தான் இந்தியா கூட்டணி சார்பில் ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அதே உளவியல் ரீதியான தாக்கத்தை இந்தியா கூட்டணிக்கு சாதகமாக ஏற்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூடி பிரதமர் யார் என்பதை முடிவு செய்வார்கள் என்று விவாதம் எழும் வகையில் ஜூன் 1ம் தேதி கூட்டத்தை கூட்டியிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

கடைசி கட்ட தேர்தலில் மக்களை உளவியல் ரீதியாக தங்கள் பக்கம் திருப்பும் பாஜகவின் முயற்சிக்கு ஒரு பதிலடியாகத்தான் இந்தியா கூட்டணியின் இந்த ஜூன் 1 கூட்டமும் அமைந்திருக்கிறது. இந்தியா கூட்டணி கூடி அடுத்து ஆட்சி அமைப்பது பற்றியும், தங்களது பிரதமர் வேட்பாளர் பற்றியும் விவாதிக்கிறார்கள் என்ற செய்திகளின் மூலம் கடைசி கட்ட தேர்தலின் போக்கு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக திரும்பும் என்பது அவர்களின் நம்பிக்கை” என்ற மெசேஜுக்கு செண்ட்  கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு நடிகை.. புது அப்டேட்..!

பியூட்டி டிப்ஸ்: முகச் சுருக்கங்களைப் போக்க… உங்களுக்கான ஈஸி ஃபேஸ் பேக் இதோ!

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share